அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2012)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(5) இத்தாலிய மொழிபெயர்ப்பு

இத்தாலிய மொழியில் சீர்திருத்த சபையினது முதலாவது வேதாகமம் ஜியோவானி டயோடாடி என்பவரினால் தயாரிக்கப்பட்டது. மார்க்கரீதியான சித்திரவதை காரணமாக இவர் தன் குடும்பத்தினர் சகிதம் இத்தாலியைவிட்டு ஓடிப்போக வேண்டியதாயிருந்தது. இத்தாலிய மொழியில் இவர் மொழிபெயர்த்த வேதாகமம் 1607 இல் ஜெனீவாவில் பிரசுரமாகியது. மக்கள் தமது சுய மொழியில் வேதாகமத்தை வாசிக்கக்கூடாது எனும் போப்பாண்டவர் 4 ஆவது பயஸ் என்பவரின் உத்தரவையும் மீறி, இவ்வேதாகமம் இத்தாலிய மக்களால் பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டது.

1757 இல் போப்பாண்டவர் 14 ஆவது பெனடிக் என்பவர் வேதாகமத்தை வாசிப்பதற்கு சபையாருக்கு அனுமதி கொடுத்தமையினால் 1776 இல், அன்டோனியோ மாட்டின் என்பவர் லத்தீன் மொழியிலிருந்து இத்தாலிய மொழிக்கு வேதாகமத்தை மொழி பெயர்த்தார். 19 ஆம் நூற்றாண்டில் சுவிசேஷப் புத்தகங்கள் பல இத்தாலிய பேச்சு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 20 ஆம் நூற்றாண்டில் பல ரோமன் கத்தோலிக்க இறையியலாளர்கள், இத்தாலிய மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். இவற்றுள் பெரும்பாலானவை லத்தீன் மொழி வேதாகமத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவைகளாகும். இதேபோல, புரட்டஸ்தாந்து சபைகளும் இத்தாலிய வேதாகம மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

(6)போர்த்துக்கேய மொழிபெயர்ப்பு

13 ஆம் நூற்றாண்டளவில் வேதாகமத்தின் பகுதிகள் போர்த்துக்கேய மொழியிலும் மொழிபெயர்க்கப்படத் தொடங்கின. 1495இல் லிஸ்பன் எனுமிடத்தில் சுவிசேஷப் புத்தகங்கள் போர்த்துக்கேய மொழியில் முதற் தடவையாக அச்சிடப்பட்டன. இதற்குப் பிறகு அப்போஸ்தலர் நடபடிகளும் சுவிசேஷப் புத்தகங்களும் போர்த்துக்கேய மொழியில் வெளியிடப்பட்டன. எனினும் இதற்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகே முழு வேதாகமமும் போர்த்துக்கேய மொழியில் வெளிவந்தது. இது ஃபெரீராடி அல்மேடா என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்டதாகும். இவர் மொழி பெயர்த்த புதிய ஏற்பாடு 1681 இல் அம்ஸ்டர்டாம் எனுமிடத்தில் அச்சிடப்பட்டது. 1753 ஆம் ஆண்டு பாட்டாவியா எனுமிடத்தில் முழு வேதாகமமும் போர்த்துக்கேய மொழியில் வெளியிடப்பட்டது.

ரோமன் கத்தோலிக்கப் போதகரான அன்டன் ஃபெரீரா என்பவர் தயாரித்த போர்த்துக்கேய வேதாகமம் 1783 முதல் 1790 வரையிலான காலப்பகுதியில் போர்த்துக்கலில் வெளியிடப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில், பிரேசில் எனும் இடத்தில் பல போர்த்துக்கேய புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன. அல்மேடா என்பவர் மொழிபெயர்த்த போர்த்துக்கேய வேதாகமம் சகல சபைகளையும் சேர்ந்த ஒரு குழுவினரால் திருத்தப்பட்டு, 1910இல் புதிய ஏற்பாடும் 1914இல் முழு வேதாகமமும் வெளியிடப்பட்டது. 1949இல் புதிய ஏற்பாட்டின் இன்னுமொரு திருத்தப்பட்ட பதிப்பும் போர்த்துக்கேய மொழியில் வெளிவந்தது. பிரேசில் வேதாகமச் சங்கம் புதிய ஏற்பாட்டின் திருத்தப்பட்ட பதிப்பை 1951இலும் பழைய ஏற்பாட்டின் திருத்தப்பட்ட பதிப்பை 1958 இலும் பிரசுரித்தது.

(7) டேனிஷ் மொழிபெயர்ப்பு

சபை சீர்திருத்தத்திற்கு முன்பு வேதாகமத்தின் ஒரு சில பகுதிகள் மட்டுமே டேனிஷ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இரண்டாம் கிறிஸ்டியன் எனும் டேனிஷ் அரசனது முயற்சியினால் 1524 ஆம் ஆண்டு லீப்ஸிங்க் எனுமிடத்தில் புதிய ஏற்பாடு டேனிஷ் மொழியில் வெளியிடப்பட்டது. இவ்வரசன் சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களை ஆதரித்தமையினால் 1523 இல், தன் நாட்டை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. இவருடைய காரியதரிசி ஹான்ஸ் மிக்கெல்சன் மற்றும் கிறிஸ்டியன் வின்த்தர் என்பவர்கள், லத்தீன் மற்றும் ஜெர்மன் மொழி பெயர்ப்புகளை ஆதாரமாய்க் கொண்டு இந்த டேனிஷ் புதிய ஏற்பாட்டைத் தயாரித்தனர். இம்மொழிபெயர்ப்பு டேனிஷ் மற்றும் சுவீடிஷ் மொழிகளின் கலப்பு மொழி பெயர்ப்பாய் இருந்தமையினால், டென்மார்க் தேசத்து மக்கள் இதற்கு அதிக வரவேற்பைக் கொடுக்கவில்லை. 1528இல் பிரான்ஸ் வேர்ட் மோர்ட்சன் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்ட டேனிஷ் மொழி சங்கீதப் புத்தகம் வெளிவந்தது. 1535 இல் ஹான்ஸ் தெளசன் பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களையும் டேனிஷ் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். டேனிஷ் இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் கிறிஸ்டீன் பெடர்சன் என்பவர் மொழிபெயர்த்த டேனிஷ் வேதாகமத்தின் புதிய ஏற்பாடு 1529இலும், பின்னர் 1531இலும் அன்ட்வேர்ப் எனுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது. 153இல், இவர் சங்கீதப் புத்தகங்களையும் டேனிஷ் மொழியில் வெளியிட்டார். இதன் பின்னர் டேனிஷின் அரசனாகிய மூன்றாவது கிறிஸ்டியனின் உத்தரவின் பேரில் 5 பேர் கொண்ட குழு ஒன்று 1548 இல் ஒரு புதிய டேனிஷ் மொழிபெயர்ப்பு வேதாகமத்தைத் தயாரித்தது.

1550இல் பிரசுரிக்கப்பட்ட இவ் வேதாகமம் மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டதாகும். 1589இல் இவ் வேதாகமத்தின் திருத்த மொழி பெயர்ப்பு வெளிவந்தது. 1607இல், மூலமொழியில் இருந்து நேரடியாக டேனிஷ் மொழியில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. ஹான்ஸ் ரீசன் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்ட இவ்வேதாகமம் 1647இல் ஹான்ஸ் ஸ்வானி என்பவரினால் திருத்தப்பட்டதோடு, 19ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை அதிகமாக உபயோகிக்கப்பட்ட வேதாகமமாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டில் மூலமொழியிலிருந்து ஒரு புதிய டேனிஷ் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பழைய ஏற்பாடு 1931 இலும், புதிய ஏற்பாடு 1948 இலும் வெளிவந்தது.

(8) பிரெஞ்சு மொழிபெயர்ப்பு

கி.பி. 12ஆம் 13ஆம் நூற்றாண்டு களில் பிரெஞ்சு மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் நடை பெற்றுள்ளன. 12 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சங்கீதப் புத்தகம் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. 12ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பீட்டர் வால்டோ என்பவரும் அவரது சீடர்கள் சிலரும் வேதாகமத்தின் சில பகுதிகளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரீஸ் பல்கலைக்கழகத்தில் முழு வேதாகமமும் மொழிபெயர்க்கப்பட்டது.

அந்நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முலின்ஸ் என்பவர் மேலதிகமான விளக்கங்கள் சேர்க்கப்பட்ட சரித்திர ரீதியான வேதாகமத்தை பிரெஞ்சு மொழியில் தயாரித்தார். 1487 இல் 8ஆவது சார்ள்ஸ் அரசனின் கட்டளைப்படி பிரெஞ்சு மொழியில் முழு வேதாகமமும் பாரீஸ் எனுமிடத்தில் வெளியிடப்பட்டது. 1487 இற்கும் 1545 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வேதாகமத்தின் 12 பதிப்புகள் வெளிவந்துள்ளன. 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜாக்கியூஸ் லெஃபியூர் என்பவர் முலின்ஸின் சரித்திர ரீதியான வேதாகமத்தைத் திருத்தியதோடு, புதிய ஏற்பாட்டையும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். இது 1523 இல் பாரீசில் பிரசுரிக்கப்பட்டது. அவரது வேதாகமம் புரட்டஸ்தாந்து இயக்கத்தின் செல்வாக்கிற்குட்பட்டு இருந்தமையினால், பிரான்ஸ் நாட்டு சபைப்போதகர்களின் எதிர்ப்புக்குள்ளாயிற்று. இதனால் இவர் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்த பழைய ஏற்பாடு 1530இல் அன்டவேர்ப் எனுமிடத்திலேயே பிரசுரிக்கப்பட்டது.

சபை சீர்திருத்தவாதிகளுள் ஒருவரான ஜோன் கல்வினுடைய மைத்துனர் பியெர் ஒலிவதான் என்பவர் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்த வேதாகமம் 1535இல் சுவிட்சர்லாந்தில் பிரசுரிக்கப்பட்டது. இது 1545இல் ஜோன் கல்வினினால் திருத்தி வெளியிடப்பட்டது. இது மறுபடியுமாக ரொபர்ட் ஸ்டெபானஸ் என்பவரினால் திருத்தப்பட்டு 1553 இல் ஜெனீவாவில் பிரசுரிக்கப்பட்டது. 1558 இல் இது மறுபடியுமாக ஒரு குழுவினால் திருத்தி மொழி பெயர்க்கப்பட்டதோடு அதற்கடுத்த இரு நூற்றாண்டுகளில் பல தடவைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒஸ்ட்டர் வால்ட் என்பவர் முதலில் 1724 இலும் பின்னர் 1744 இலும் இவ்வேதாகமத்தைத் திருத்தி வெளியிட்டார்.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் லூயிஸ் செகொன்ட் என்பவரது புதிய பிரெஞ்சு மொழி பெயர்ப்பு வேதாகமம் வெளிவந்தது. இதன் பழைய ஏற்பாடு 1874 இலும் புதிய ஏற்பாடு 1879 இலும் பிரசுரிக்கப்பட்டது.

(தொடரும்)