ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வெளிவர தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இத்தியானங்கள் வாயிலாக அநேகமாயிரமான மக்களது வாழ்க்கையிலே கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்யும்படியாக உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள்.

மணிப்பூர் மாநிலத்தின் சமாதானத்திற்காகவும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்வதற்கும் அவர்களது இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கும் இடைவிடாது மன்றாடுவோம். அதைத் தொடர்ந்து அரியானா மாநிலத்தில் ஏற்பட்ட கலவரங்களினாலே பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் அங்கு கர்த்தர் சமாதானத்தை நிலவச்செய்யவும் மற்ற இடங்களிலும் இப்படிப்பட்ட கலவரங்கள் பரவாதபடி தேசத்தின் அமைதிக்காக சமாதானத்திற்காக தொடர்ந்து நாம் பாரத்தோடு ஜெபிப்போம்.

சத்தியவசன வெளியீடுகள் பிரிண்ட் பண்ணுவதற்கு அச்சுத்தாளின் கடுமையான விலை ஏற்றத்தினால் இருமாத வெளியீடுகளின் ஆண்டு சந்தா உயர்த்தப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் இதை கவனத்தில் கொள்ள அன்புடன் கேட்கிறோம். சத்திய வசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆசீர்வாதமடையுங்கள். இந் நிகழ்ச்சிகளின் மூலமாக அநேகமாயிரமான ஆத்துமாக்கள் சந்திக்கப்படுவதற்கும் நிகழ்ச்சிகள் தடைகளின்றி ஒளிபரப்பு ஆவதற்கும் வேண்டிக்கொள்ளுங்கள்.

இவ்விதழில் செப்டம்பர் மாதத்தில் பல்வேறு தியானங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். அக்டோபர் மாதத்தில் சகோ.நீரியஸ் பெர்னாண்டோ அவர்கள் எழுதிய தியானங்கள் இடம்பெற்றுள்ளன. தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்