மதிப்பிடும் தேவன்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 1சாமுவேல் 2:1-10

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ? (1சாமுவேல் 2:3).

அன்னாள் தேவபக்தியுள்ள ஒரு பெண்மணி. ஆனால் அவள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டாள். அன்னாளுக்குக் குழந்தையில்லாததால், அவளுடைய கணவனின் இரண்டாவது மனைவி பெனின்னாள் பரியாசம் பண்ணி அவளை அழவைப்பாள். பிரதான ஆசாரியனான ஏலியும் அவள் குடித்திருக்கிறாள் என எண்ணினார். யோசேப்பு, தாவீது, எரேமியா, பவுல் போன்ற தேவபக்தர்களைப்போலவே இவளும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாள். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்கூட “சாத்தானுடன் தொடர்புடையவர்” என குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் ஆண்டவர், அன்னாளின் விண்ணப்பத்தைக் கேட்டு அவளுக்கு ஓர் ஆண் மகனை அருளினார். அவனுக்கு சாமுவேல் என பெயரிட்டு ஆசரிப்புக் கூடாரத்தில் தேவபணி செய்ய ஒப்படைத்தாள். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் சாமுவேல் ஒரு வல்லமையான தீர்க்கதரிசியாக விளங்கினார். மக்கள் நம்மை தவறாகப் புரிந்துகொள்ளும் நேரங்களில் அன்னாளின் இந்த மகிழ்ச்சியான துதிப்பாடலின் வரிகள் நம்மை ஆறுதல் படுத்தி உற்சாகப்படுத்துகின்றன.

தேவன் சகலத்தையும் அறிவார்:

மற்ற மனிதர்கள் சிந்திப்பதையும் அவர்களது சொற்களையும் தேவன் அறிவார். உங்களுடைய சிந்தனையையும் சொல்லையும் அவர் அறிவார் (சங்.139: 1-6). ஒவ்வொருவருடைய இருதயத்தில் இருப்பதையும் அவர் அறிவார் (அப்.1: 24). “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” (எபி.4:13). நம்முடைய இருதயத்தையே நாம் அறிய மாட்டோம் (எரே.17:9). ஆண்டவருக்காக தான் மரிக்கவும் ஆயத்தம் என்று பேதுரு எண்ணியிருந்தார். ஆனால், தான் அவரை மூன்றுமுறை மறுதலித்ததை அறிந்து வருத்தம் கொண்டார். மக்கள் உங்களைப் பற்றி பொய் சொல்வார்களானால் கவலைப்படாதீர்கள். உங்கள் பரலோக தகப்பன் உண்மையை அறிவார்; ஒருநாளில் உண்மையை வெளிப்படுத்துவார்.

தேவன் மக்களையும் அவர்களது செயல்களையும் மதிப்பிடுபவர். மனம் மாறியவர்கள் கணிக்கப்பட்டு அவர்கள் கவனிக்கப்படவேண்டும் என்று நற் செய்தியாளர் டி.எல்.மூடி அடிக்கடி கூறுவார். நம்முடைய ஆண்டவரும் மக்கள் சொல்வதையும் செய்வதையும் அளவிடுகிறார். கீழ்மக்கள் மாயையும், மேன் மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள் (சங்.62:9). “மாயை, மாயை, எல்லாம் மாயை” என்று பிரசங்கி சொல்லுகிறான். Hevel என்ற எபிரெய சொல்லை 83 முறை பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் இங்கு பயன் படுத்தியுள்ளார். அதற்கு “மாயை, ஒன்று மில்லாமை, பயனற்றது” என்று பொருள் கூறலாம்.

தேவனுடைய சித்தத்தில் வாழும் வாழ்வே திடமானதும் நிறைவானதும் ஆகும். அவரது சித்தத்துக்கு வெளியே வாழும் வாழ்வு அர்த்தமற்றதும் வெறுமையானதுமே. நாம் பேசுவதற்கு முன் நம்முடைய வார்த்தைகளை சிந்தித்துக் கூறவேண்டும், ஏனெனில் தேவன் அவ்வாறே செய்கிறார். நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும் என்று சாலொமோன் எழுதியுள்ளார் (நீதி.15:28). சபையில் கூறப்படும் வார்த்தைகளையும் நாம் நிதானிக்கவேண்டும். ஏனெனில் அவை தேவனுடைய வார்த்தைக்கு ஒத்துப்போகாதிருக்கலாம் (1கொரி. 14:29). எனவேதான் ஆண்டவராகிய இயேசு: மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று எச்சரிக்கிறார் (மத்.12:36). தேவன் நமது நோக்கங்களையும்(நீதி.16:2) நம்முடைய இருதயத்தையும் (நீதி.21:2;24:12) நிறுத்துப்பார்க்கிறார். ஒருவரும் காண முடியாதவற்றையும் தேவன் காண்கிறார்; கேட்கமுடியாததையும் அவர் கேட்கிறார்.

தேவன் கனமானவற்றுக்கு வெகு மதியளிக்கிறார். தேவனுக்கு ஊழியம் செய்யும்பொழுது விலைமதிப்பற்ற மரம், மற்றும் புல் வைக்கோல் இவைகளை யல்லாது விலையுயர்ந்த தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த கற்களை பயன்படுத்தும்பொழுது தேவன் அவற்றையும் அளவிடுகிறார்; இவ்வுலகில் இல்லையென்றாலும் மறுவுலகில் நாம் வெகு மதிகளைப் பெறுவோம் (1 கொரி. 3:12-17; எபே.6:8; கொலோ. 3:23-24).

போத்திபாரின் மனைவி யோசேப்பின் பேரில் பொய்யான குற்றம் சுமத்தி அவனைச் சிறையில் அடைத்தாள். ஆனால், தேவன் அவனை உயர்த்தினார். சவுல் அரசர் தாவீதைத் தவறாகப் புரிந்துகொண்டு அவனைக் கொல்லப் பார்த்தார். ஆனால் தாவீதின் உத்தமம் நிரூபணமானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் உயிர்த்தெழுதலினாலும் மகிமையின் பரமேறுதலினாலும் நியாயப்படுத்தப்பட்டார்.

பெல்ஷாத்சார் அரசர் உலகத்தின் அளவீட்டை வைத்து தான் வல்லமையானவர் என்றும், செல்வந்தன் என்றும் எண்ணினார். ஆம்; அவை உண்மைதான். ஆனால் தேவனோ நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் (தானி.5:27) என்று அவரிடம் கூறினார். அன்று இராத்திரியிலே அவர் கொலை செய்யப்பட்டார். உலகத்தின் தராசை வைத்து உங்கள் வாழ்வை எடை போடாதீர்கள்; தேவனுடைய தராசை வைத்து உங்கள் வாழ்வை சீர்தூக்கிப் பாருங்கள். கிறிஸ்துவை முதலாவது நாம் வைத்தால் அவரையும் நமக்குத் தேவையான யாவற்றையும் நாம் பெற்றுக்கொள்வது அதிக நிச்சயம்!

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்.6:33).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை