தேவனை சேவிப்பது விருதா!
தியானம்: 2023 செப்டம்பர் 23 சனி | வேத வாசிப்பு: மல்கியா 3:13-18

நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை (ஏசா. 45:19).
இன்று ஆவிக்குரிய வாழ்க்கையில் அநேக கிறிஸ்தவர்கள் தேவனை சேவிப்பது விருதா என்றும் அவருடைய கட்டளைகளை கைக்கொள்கிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம் என்றும் இன்று கேள்வியைக் கேட்கின்றனர். சிலவேளைகளில் நாமும் கூட இவ்வாறு கேட்டிருக்கலாம். பாபிலோன் சிறையிருப்பின் இறுதி காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபோது யூதர்களுக்குள் இவ்வாறான கேள்விகள் உருவாகின (மல்கி. 3:14). தங்களை அடிமைப்படுத்தி வைத்த அந்நியர்கள், சந்தோஷமாக இருப்பதைக் கண்ட யூதர்கள், அகங்காரிகள் பாக்கியவான்கள் என்றும் தீமை செய்கிறவர்கள் திடப்படுகின்றார்கள் என்றும், அவர்கள் தேவனை பரீட்சை பார்த்தாலும் விடுவிக்கப்படுகின்றார்களே, என்றெல்லாம் நினைத்ததால் தேவனை சேவிப்பது விருதா என்று அவர்களுக்கு தோன்றியது.
இன்று தேவபயம் இல்லாதவர்கள் சம்பூரணமாய் வாழ்வதையும் அநியாயமாய் சம்பாதிப்பவர்கள் எவ்வித கஷ்டமின்றி வாழ்வதையும் ஏழைகளை ஒடுக்கி அவர்களை சுரண்டி வாழ்பவர்களுடைய வாழ்க்கையில் எவ்வித தீங்கையும் காணாமல் மனமகிழ்ச்சியுடன் வாழ்வதையும் நாம் பார்க்கும்போது இதே கேள்விகள்தான் நமக்குள்ளும் உருவாகின்றது. கர்த்தர் மல்கியாவின் மூலமாக அதற்கு விடையளிக்கின்றார்: “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தை தியானிக்கிறவர்களுக்காகவும், ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது” (மல். 3:16).
அருமையானவர்களே! நம்முடைய வாழ்க்கையிலும்கூட காலம் பூராவும் ஒடுக்கப்பட்டு அடிமைகளாகவும் கஷ்டத்தின் பாதையிலும் வாழலாம். நம்மை நிந்தித்து அடிமைப்படுத்துகிறவர்கள் இக்காலங்களில் ஆணவமாக வாழலாம். நாம் வேலை செய்யுமிடத்தில் நாம் அநீதியான முறையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரலாம். நம்முடைய வழக்குகளில் நமக்கு நியாயம் கிடைக்காமல் போகலாம். நம்முடைய பணத்தை அபகரித்தவர்கள் அதை வைத்து சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கலாம்; ஆனால் நாமோ கண்ணீரோடு வாழ்க்கை நடத்தலாம்; இவ்வாறான வேதனைகளை நாம் சந்திக்கின்றபோது தேவனை தூஷிக்கின்றோமா? தேவனை ஆராதிப்பது வீண், அவருக்கு பயந்து நடப்பது வீண் என்றெல்லாம் கூறுகின்றோமா? காத்தர் யாவற்றையும் கவனித்துக் கேட்கிறார். அவருக்கு முன்பாக ஞாபக புஸ்தகம் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை நாம் மனதில் கொள்வோம்!
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, நாங்கள் வேதனைகளை அனுபவிக்கும்போது தேவனுக்கு பயந்து வாழ்வது வீண் என பலதடவை கூறியிருக்கின்றோம். கிருபையாய் எங்களை மன்னித்தருளும். ஆமென்.