பொறுமையில் பெருமகிழ்ச்சி
தியானம்: செப்டம்பர் 22 சனி; வாசிப்பு: ஆதியாகமம் 21:1-7
‘தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம்
நூறுவயதாயிருந்தான்.’ (ஆதியாகமம் 21:5)
ஆபிரகாமின் வாழ்க்கை, அவரது குணாதிசயங்கள் நம் வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக இருப்பதை மறுக்கமுடியாது. அவரது வாழ்க்கையிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்ட நாம் இன்னுமொரு முக்கிய விஷயத்தை இன்று தியானிப்போம். அழைப்புப் பெற்ற ஆபிரகாமின் வாழ்வில் வருடங்கள் பல உருண்டோடின. கர்த்தரின் வாக்குத்தத்தம் நிறைவேறத் தாமதமானது. ஆகவே, சாராளின் ஆலோசனைப்படி ஆபிரகாம் அவளுடைய அடிமைப் பெண்ணாகிய ஆகார் மூலமாக ஒரு குமாரனைப் பெற்றார். ஆனால், அப்பிள்ளை வாக்குத்தத்தத்தின் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் கர்த்தரோ தமது வாக்கை மறந்துவிடவில்லை. ஏற்றகாலத்தில் ஆபிரகாமுக்கு அவரது மனைவியாகிய சாராள் மூலமாக ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டார்கள். ஈசாக்கு என்பதற்கு ‘நகைப்பு’ என்று அர்த்தம். ஆபிரகாமுக்கு நூறு வயதாயிருந்தபோது பிறந்த அந்தப் பிள்ளையின் பிறப்பு, ஆபிரகாம் சாராளின் வாழ்வில் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்” (நீதி.13:12). இந்த உண்மையை நாம் ஆபிரகாமின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்கிறோமல்லவா! ‘பொறுமை’! இது இல்லாததால் இன்று நாமும் எத்தனைப் பாடுகளுக்குட்படுகிறோம். பலவித நெருக்கங்கள், வேலையில்லாமை, தீராத நோய் போன்ற சூழ்நிலைகளில் அகப்படும்போது நாம் சோர்ந்துபோகிறோம். “தேவன் பதில் தருவார் என்று இன்னும் எத்தனை காலத்திற்குக் காத்திருப்பது” என்றும் “இனியும் என்னால் பொறுத்திருக்க முடியாது” என்றும் கூறி, ஜெபிப்பதை நிறுத்தி, மனச்சோர்வோடு பலர் வாழுகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவரா? பொறுமையிழந்து செயற்பட்டதால் ஆபிரகாமின் குடும்ப வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் வந்தது என்பதை நாம் அறிவோம். வாழ்க்கையின் சகல நிலைபரங்களையும் கடந்துசென்ற சாலொமோன் ராஜா, “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என்று பலகாலங்களைக் கூறிவிட்டு, இறுதியாக, “அவர் (கர்த்தர்) சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிரசங்கி 3:1-11) என்று கூறினார். இதையே கர்த்தர் ஆபிரகாமின் வாழ்க்கையிலும் செய்தார். உங்கள் வாழ்க்கையிலும் அவர் சகலத்தையும் நேர்த்தியாகச் செய்வார். ஆகையால், அவசரப்பட்டுக் குறுக்குவழிகளை நாடாமல், வாக்குத்தத் தங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டு பொறுமையோடு கர்த்தருடைய வேளைக்காகக் காத்திருப்பதே நல்லது. அவர் நமது இருதயத்தின் வாஞ்சைகளை நமக்கு அருள்செய்து மகிழ்ச்சியினால் நம்மை நிச்சயம் நிரப்புவார்.
ஜெபம்: பிதாவே, நீர் ஏற்றவேளையில் சகலத்தையும் நேர்த்தியாகச் செய்கிறவர் என உணர்ந்து பொறுமையோடு காத்திருக்க என்னைத் திடப்படுத்தும். ஆமென்