• சகோதரர் உதயகுமார் •
(நவம்பர் – டிசம்பர் 2023)

உலக இரட்கராகிய இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய செய்தியானது வயல்காட்டில் மந்தைகளைப் பராமரித்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கே முதன் முதலில் அறிவிக்கப்பட்டது.

இதைக் குறித்து லூக்கா இவ்விதமாக எழுதுகிறார். “மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்” (லூக்.2:8-9).

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றான் (லூக்.2:10-12).

அதேசமயத்தில் எல்லா தூதர்களும், “அந்தச்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். தேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவ ரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள் (லூக்.2:13-16).

மேய்ப்பர்கள் குழந்தையைக் கண்டு தூதர்கள் குழந்தையைக்குறித்து கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள். மேய்ப்பர்கள் கூறியவற்றைக் கேட்ட மரியாள் அவற்றைத் தன் இதயத்தில் வைத்து சிந்தித்துக்கொண்டிருந்தாள். தாங்கள் கண்டவற்றிற்காகவும் கேட்டவற்றிற்காகவும் தேவனை வாழ்த்திக்கொண்டும். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டும், மேய்ப்பர் தங்கள் ஆடுகள் இருந்த இடத்திற்குச் சென்றனர். தூதர்கள் அவர்களிடம் கூறியபடியே அனைத்தும் நடந்திருக்கக் கண்டனர். இவ்வாறு மேய்ப்பர்களுக்கு முதன் முதலில் கிறிஸ்து பிறப்பின் செய்தி அறிவிக்கப்பட்டது. இனி நாம் அதைக் குறித்து சில விஷயங்களைத் தியானிப்போம்.

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு நடைபெற்ற நாட்களில் பாலஸ்தீனத்திலே மேய்ப்புத் தொழிலானது சாதாரண ஒரு தொழிலாகவே காணப்பட்டது. அங்கு அநேக மேய்ப்பர்கள் இருந்தார்கள். இவர்கள் ஏழைகளாகவும், சமுதாயத்திலே தாழ்வானவர்களாகவும் கருதப்பட்டனர். அவர்கள் கூலிக்காக எதையும் செய்பவர்களாகவும் சொல்பவர்களாகவும் இருந்தனர். ஆகவேதான், யூதர்களின் வழக்கு மன்றங்களில் மேய்ப்பர்கள் சாட்சி கூற அழைக்கப்படுவதும் இல்லை. அவர்களின் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படுவதும் இல்லை.

ஆக, சமுதாயத்திலே ஏழைகளாகவும் தாழ்வானவர்களாகவும் கருதப்பட்ட மேய்ப்பர்களுக்கு காபிரியேல் தூதன் தோன்றி, கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதனால் நமது ஆண்டவர் ஏழைகள், எளியவர்கள் என சமுதாயத்திலே ஒதுக்கப்பட்டவர் அல்லது தாழ்த்தப்பட்டவர் என ஒருவரையும் வேறுபடுத்தி பார்ப்பவரோ பாகுபாடுள்ளவரோ அல்ல. ஆண்டவர் நம் எல்லோரையும் ஒரேவிதமாக நேசிப்பவர் என்பது உண்மையாயினும், அன்றைய நாட்களில் பாலஸ்தீன தேசத்திலே மேய்ப்பர்களைப் பார்க்கிலும் தாழ்வாக கருதப்பட்ட அடிமைகள், பிச்சைக்காரர்கள், குஷ்டரோகிகள் போன்ற பலர் இருந்தார்கள். எனினும், இந்த தருணத்திலே, கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய செய்தி முதன்முதலில் மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டதன் இரகசியத்தை ஆராயும்போது முதலில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயம், இந்த மேய்ப்பர்கள் ஏனைய மேய்ப்பர்களைப் போன்றவர்கள் அல்ல. இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள்.

இவர்கள் அன்று தேவாலயத்தில் இருந்ததான மந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் முக்கிய பொறுப்பில் இருக்கும் மேய்ப்பர்களாக இருந்தார்கள். அதாவது, அன்றைய நாட்களில், தேவாலயத்தில், பாவ நிவாரணத்திற்காக, ஆட்டுக்குட்டிகளைப் பலிசெலுத்துவதுண்டு. அவற்றை பராமரிக்கும் மேய்ப்பர்களாக இவர்கள் இருந்தனர்.

அன்றைய மத தலைவர்கள் தேவாலயத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும்படி தேவாலயத்திலேயே ஆட்டுக்குட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தார்கள். பலிசெலுத்த வருபவர்கள் வெளியிலிருந்து ஆட்டுக்குட்டிகளைக் கொண்டு வராமல் தேவாலயத்திலிருக்கும் ஆட்டுக்குட்டிகளை விலைக்கு வாங்கி பலிசெலுத்த வேண்டும் என்பதே அன்றைய கட்டாய நிலைமையாக இருந்தது. அதே நேரம் பாவத்தின் நிமித்தம் பலியாகப்போகும் அந்த ஆடுகள் பழுதற்றதும், குறையற்றதும், காயங்கள் அற்றதும், செழுமையும் கொழுமையுமாக இருக்க வேண்டும்.

மனிதர்களின் பாவத்தில் இருந்து அவர்களை விடுவிக்கப்போகின்ற அல்லது இரட்சிக்கப் போகின்ற ஆடுகளையே இந்த மேய்ப்பர்கள் அன்று பார்த்து பராமரித்து வந்தனர். ஆகவே இந்த மேய்ப்பர்கள் கூலிக்காக மாரடிக்கும் ஏனைய மேய்ப்பர்களைப்போல அல்லாமல் மனிதரின் பாவத்தை தீர்க்கப்போகும் ஆட்டுக்குட்டிகளை கவனமாக பார்த்துக்கொள்ளும் சிறப்பான பணியில் இருந்தவர்கள்.

தேவதூதர்கள் இரவிலே இந்த மேய்ப்பர்களுக்குத் தோன்றி அவர்களுக்கு கூறிய செய்தியின் கருப்பொருளை குறித்து நாம் அறிவோம். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கின்றார்” (லூக்.2:11) என லூக்கா குறிப்பிடுகின்றார். இயேசுவின் பிறப்பைக் குறித்து மத்தேயு குறிப்பிடுவதாவது: “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21).

அதாவது, இதுவரையும் மனிதரை பாவத்திலிருந்து இரட்சிக்க பலியாகும் ஆட்டுக்குட்டி இனி தேவையில்லை. ஏனெனில், உண்மையாகவே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியான இயேசுகிறிஸ்து உலகில் பிறந்துள்ளார் என்பதே மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்தியாக இருந்தது.

இயேசு பிறந்த செய்தியானது, மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டதன் நோக்கம், இனி உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கப்போகும் தேவ ஆட்டுக்குட்டியைப் போய்ப் பாருங்கள் என்றதாக இருந்தது. ஆம், நமது ஆண்டவர் நற்செய்தியை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறார். ஏழை எளியவர்களை, தாழ்த்தப்பட்டவர்களையும் தள்ளாதவர் நமது தேவன்!

ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் பிறப்பு, முதன்முதலில் மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டதன் நோக்கம், உலகத்தின் பாவத்தை நீக்கி அவர்களை இரட்சிக்கக்கூடிய ஒரே ஒருவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே என்பதை அறிவிக்கிறதற்காகத்தான்! நாமும் இந்த நற்செய்தியை உலகம் அறிய அறிவிப்போம்!