கர்த்தர் அன்புகூர்ந்ததினால்…

தியானம்: 2024 பிப்ரவரி 22 வியாழன் | வேத வாசிப்பு: உபாகமம் 7:8-16

YouTube video

உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று … ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி …ஆசீர்வதிப்பார் (உபா.7:13).

வீட்டிலே பணிபுரியும் ஒரு ஊழியன், தன் பொறுப்புகளையெல்லாம், மிகவும் கவனமாக, எந்தவிதமான குறையின்றி செய்துவந்தான். வீட்டு எஜமானனும் அடிக்கடி வெகுமதிகளைக் கொடுத்து அவனை சந்தோஷப்படுத்துவார். ஒரு முறை அவன் சுகவீனமாகி, எந்த வேலையும் செய்ய முடியாதவனாக படுக்கையில் இருந்தான். அப்போது, அந்த எஜமான் அவனுக்குத் தேவையான சகலத்தையும் கொடுத்து அவனைப் பராமரித்தார். அப்போதுதான், தான் செய்யும் பணிக்காக அல்ல, அவர் தன்னில் வைத்த அன்பின் நிமித்தமே எல்லாம் செய்தார் என்பதை அவன் உணர்ந்துகொண்டான்.

இங்கே தேவனும் அப்படியாகவே இஸ்ரவேலருக்கு இருந்தார். அவர்கள் கூக்குரலின் நிமித்தமோ, அவர்கள் வேண்டிக்கொண்டதின் நிமித்தமோ அல்லாமல், அவர்களில் அவர் அன்புகூர்ந்ததினாலே, அவர்களை அங்கிருந்து பலத்த கைகளினாலே மீட்டுக்கொண்டார். அவர் அன்புவைத்து, ஆசீர்வதித்து, பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு அவர்களை அழைத்து வந்தார். ஆம், கர்த்தர் முதலில் அன்புகூர்ந்தார், அந்த அன்பின் நிமித்தமே அவர் அனைத்தையும் செய்தார். அவரும் தமது ஜனங்களின் அன்பையும் கீழ்ப்படிதலையும், தாம் வெறுப்பவைகளை அவர்களும் வெறுக்கவேண்டும் என்பதையுமே எதிர்பார்த்தார். தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, ஆயிரம் தலைமுறைமட்டும், உடன்படிக்கையையும், தயவையும், காக்கிற உண்மையுள்ள தேவன் அவரே. கர்த்தர் ஆசீர்வதிக்கிறவராகவும், சகல நோய்களையும் விட்டுவிலக்குகிறவராகவும், நமது சகல ஆஸ்திகளையும் ஆசீர்வதிக்கிறவராகவும் இருக்கிறார்.

அன்பானவர்களே, நாமும் பலவேளைகளிலும் ஆலயப்பணிகளில் முன்னின்று செய்கிறோம், காணிக்கை கொடுக்கிறோம்;. இவற்றைச் செய்துவிட்டு, நாம் கர்த்தருக்காக எதையோ பெரிதாகச் சாதித்துவிட்டதாக எண்ணுகிறோம். நாம் செய்ததற்கு கர்த்தரே நமக்குக் கடமைப்பட்டு இருப்பதாக எண்ணுவதும் உண்டு. நாம் இவற்றைச் செய்வதினால் தான் தேவன் நம்மை வழிநடத்துகிறார் என்று நினைப்போமானால் அது நமது மடமைத்தனத்தைத்தான் காட்டுகிறது. தேவன் முதலாவது நம்மில் அன்புகூர்ந்தார். அதனாலேயே அவர் நம்மை மீட்டுக்கொண்டார். அந்த அன்பின் உந்துதலால் அவர் பணியை செய்யவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இதை உணர்ந்தவர்களாய் அவர் பணி செய்யப் புறப்படுவோம். இந்த லெந்துகாலங்களில் நமது தப்பிதங்களை உணர்ந்து, தேவனை முழுமையாக அன்புசெய்ய நம்மை ஒப்புக்கொடுப்போம். “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்” (1யோவான் 4:19).

ஜெபம்: அன்பின் தேவனே, எங்களை இவ்வளவாய் நீர் நேசிக்க நாங்கள் பாத்திரரல்ல. எங்களுள்ளே எவ்வித மேட்டிமை சிந்தையுமிராமல் தாழ்மையோடே உம் பணிசெய்ய எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.