ஆசிரியரிடமிருந்து… (மே – ஜுன் 2024)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழை வெளியிட தேவன் கிருபை செய்தபடியால் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து நம் தேசத்தில் நடைபெற்றுவருகிற மக்களவைத் தேர்தல் அமைதியாகவும் நியாயமான முறையிலும் நடைபெற பாரத்தோடு வேண்டுதல் செய்வோம். தேவன்தாமே வரும் நாட்களில் தேசத்தில் நல்ல மாறுதல்கள் ஏற்பட கிருபை செய்வாராக.
மத்தியதரை கடல்பகுதியில் நிலவிவரும் பதற்றமான போர் சூழ்நிலை மாறவும் இஸ்ரேல் தேசத்தில் தேவன்தாமே சமாதானத்தைக் கட்டளையிடவும் மன்றாடுவோம். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே (மத். 24:6) ஆண்டவராகிய இயேசு முன்னுரைத்தபடி கடைசி கால அடையாளங்களாக இவைகள் இருக்கிறபடியினாலே நாம் எச்சரிக்கையுள்ளவர்களாயிருந்து அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுவோம்.
சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் குடும்பமாக பங்குபெற்று, ஆதரவாளர் திட்டத்திலும் இணைந்து இவ்வூழியங்களை தாங்க அன்பாய் அழைக்கிறோம். சத்திய வசன ஊழியப்பணிகளினாலே தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தை தங்கள் சக நண்பர்கள், விசுவாசிகளுக்கு அறிமுகம் செய்துவையுங்கள்.
இவ்விதழில் மே மாதத்திற்கு கிறிஸ்தவ வாழ்வில் நாம் சந்திக்கும் போராட்டங்கள், அடையவேண்டிய இலக்கு இவைகளை தியானிக்கும்படியாக சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். ஜுன் மாதத்தில் பாவம் எவ்விதமாக மனிதனை வஞ்சித்துப்போடுகிறது என்றும் கர்த்தர் அவற்றிலிருந்து நம்மை விடுவிப்பதைக் குறித்தும், ஜெயமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதையும் குறித்தும் தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்