இரண்டு!

அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 2 சாமுவேல் 24:1-15

அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையில் விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான் (2 சாமு. 24:14).

இரண்டு பாவங்கள்:

தாவீதின் மிகப் பெரிய பாவம் என்ன என்று வேதாகம வாசகர்களிடம் கேட்டால் அவர்களில் பெரும்பாலனோர், “பத்சேபாளுடன் அவர் செய்த விபசாரம்” என்று கூறுவார்கள். அது உண்மையில் மிகப்பெரிய பாவந்தான்; மாம்சத்தின் திடீர் உணர்ச்சியால் செய்யப்பட்ட அப்பாவம் ஐந்து மரணங்களை ஏற்படுத்தியது. பத்சேபாளின் கணவர் உரியா இறந்தார், அவளது குழந்தை இறந்தது, தாவீதின் மற்ற மூன்று மகன்களும் இறந்தனர். ஆனால், தாவீது மக்களை தொகையிட்டபோது அது எழுபதாயிரம் பேருக்கு மரணத்தைக் கொண்டுவந்தது. இது ஆவியின் பெருமை மற்றும் வேண்டு மென்றே செய்த பாவமாகும்!

தாவீது தனது விபசாரத்தை ஒப்புக் கொண்டபோது, “நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்” என்று கூறினார். மாம்சத்தின் பாவம், எண்ணங்களின் பாவம் ஆகிய இரு வகையான பாவங்கள் உள்ளன (2கொரி.7:1). மேலும் நாம் முதலாவதை வலியுறுத்தவும், இரண்டாவதைக் குறைக்கவும் முனைகிறோம். ஆனால், எண்ணங்களின் பாவங்கள் பயங்கரமான விளைவுகளையும் கொண்டுவருவது நிச்சயம். ஆண்டவராகிய இயேசு, கோபத்தை கொலையோடும், இச்சையை விபசாரத்தோடும் ஒப்பிட்டுள்ளார் (மத்.5:21-30). அவர் வரிவசூலிப்பவர்களிடமும் பாவிகளிடமும் இரக்கம் காட்டினார். ஆனால், அவர் பெருமைமிக்க வேதபாரகர்களையும் பரிசேயர்களையும் “பிசாசின் பிள்ளைகள்” என்று அழைத்தார்.

இரண்டு விளைவுகள்:

தாவீதின் அரசாங்கத்தில் அவனது பாவம் வலியையும் துக்கத்தையும் கொண்டுவர அனுமதித்தார். அது தாவீதை ஆழமாகக் காயப்படுத்தியது. ஆனால், தேவன் தமது கிருபையினாலும் கருணையினாலும் தாவீதின் பாவங்களை மன்னித்து பெரும் சோகத்திலிருந்து நன்மையை வெளியே கொண்டுவந்தார். பத்சேபாளுக்குப் பிறந்த சாலொமோன் தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினார்; அதில் தேவனுக்குப் பலிகளைச் செலுத்தினார். இரக்கமுள்ள தேவனால் மாத்திரமே ஒரு மனிதனின் இரு கொடிய பாவங்களை நீக்கி அவன்மூலமாய் ஆலயத்தைக் கட்டமுடியும். நம் தேவன் கருணையில் பெரியவர் (1 பேதுரு1:3). மற்றும் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் (எபே.2-4). மற்றும் மற்றவர்களின் கரத்தில் விழுவதைவிட அவரது கைகளில் விழுவது எளிது. சங்கீதம் 25:6இல் தாவீது தேவ னின் இரக்கங்கள் மென்மையானவை என்று கூறினார்.

இரண்டு சிங்காசனங்கள்:

நாம் தகுதியற்றவர்கள் எனினும் அவர் தமது கிருபையினால் மன்னிக்கப்படும் தகுதியை நமக்குத் தருகிறார். நாம் அவருடைய கிருபையின் சிங்காசனத்திற்கு வந்து இரக்கத்தைப் பெறலாம் (எபி.4:16). நமது தேவன் இரக்கமும் கருணையும் உள்ளவராக இருப்பதால் நாம் நமது விருப்பப்படி பாவஞ்செய்ய சுதந்தரமாக இருக்கிறோம் என்று பொருளாகாது (ரோமர்6:1-2).

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு மன்னிப்பைப்பெற பிதாவாகிய தேவன் ஒருவழியை உண்டாக்கியுள்ளார்; அது கடவுளின் கருணை; ஆனால் கடவுளின் அரசாட்சியை மறந்துவிடாதீர்கள்; அது நீதியின் சிங்காசனம். மன்னிப்பு மலிவானது அல்ல; அது இயேசுவின் உயிரால் வாங்கப்பட்டது. தாவீது தனது சிம்மாசனத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கவும் மக்களைத் தொகையிடவும் சுதந்தரமாக இருந்தார். ஆனால் அவரது செயல்களின் விளைவுகளை மாற்றவோ தடுக்கவோ தாவீதுக்கு சுதந்திரம் இல்லை.

இரண்டு உறுதிமொழிகள்:

முதலாவது தேவனின் இரக்கம் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. சாத்தான் ஒரு குற்றஞ்சாட்டுபவன் (வெளி. 12:10). மேலும் அவன் நம் பாவங்களை நினைப்பூட்டுவதன் மூலம் நம்மை வருத்தப்படுத்த முயலுகிறான். தேவன் நம்மை ஒழுங்குபடுத்தும்போது நாம் எப்படி உணர்கிறோம் என்றாலும், தேவனின் வாக்குறுதிகளை நாம் சந்தேகிக்கக்கூடாது. நம்முடைய பாவங்களின் விளைவுகள் வேதனை தருவதாக இருக்கலாம். ஆனால் இந்த துக்கங்கள் நாம் மறக்கப்பட்டுவிட்டோம் என்று அர்த்த மல்ல. 1 யோவான் 1:9இன் வாக்குறுதி உண்மை. அதனை நாம் விசுவாசத்துடன் உரிமை கோரலாம்.

இரண்டாவதாக, பாவத்தால் மனம் வருந்தி, அதன் நினைவுகளால் கலங்கிக் கொண்டிருக்கும் இருதயத்துக்கு மீகா தீர்க்கதரிசி “அக்கிரமத்தை மன்னித்து, தம்முடைய பரம்பரையின் எஞ்சியதை மீறுகிற உம்மைப் போன்ற தேவன் யார்? அவர் தமது கோபத்தை என்றென்றும் வைத்திருப்பதில்லை, ஏனென்றால் அவர் இரக்கத்தில் மகிழ்ச்சியடைகிறார். அவர் மீண்டும் நம்மேல் இரக்கம் காட்டி நம் அக்கிரமங்களை அடக்குவார். எங்கள் பாவங்கள் அனைத்தையும் கடலின் ஆழத்தில் போட்டு விடுவீர்” (மீகா7: 18-19) என்று ஆறுதல் வார்த்தைகளை கூறியுள்ளார்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை