1.வேதாகமம் தேவனின் வெளிப்பாடாகும்!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (மே – ஜுன் 2024)
Dr.உட்ரோ குரோல்

2. மிகச் சிறப்பான வெளிப்பாடு

தேவனால் எழுதப்பட்ட புத்தகம் வேதாகமம்மட்டுமே! அது தனித்தன்மை வாய்ந்தது. அதைப்போல வேறொரு புத்தகமும் இல்லை. அதற்கு இணை ஏதுமில்லை. அந்த இனத்தில் அதுமட்டுமே உலகில் உள்ளது; தெய்வீக அதிகாரம் கொண்டது. வெளிப்படுத்துவதிலோ, அதி காரத்திலோ, மக்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமையிலோ, வேறு எந்தப் புத்தகமும் இதற்கு இணையில்லை.

தேவனுடைய உள்ளத்தில் இருப்பவை களைச் சிறப்பாக நமக்கு வெளிப்படுத்தும் புத்தகமாக வேதாகமம் இருக்கிறது. உண்மையில் நமக்குக் கிடைத்திருக்கும் அரிதான பொக்கிஷம் அதுவே.

சிலர் தேவனிடமிருந்து தரிசனங்களைப் பெற்றதாகக் கூறுகின்றனர்.

சிலர் சொப்பணங்களைக் கண்ட தாகக் கூறுகின்றனர்.

கர்த்தரிடமிருந்து “ஒரு வார்த்தை”யைப் பெற்றதாகக் கூறுகின்றனர்.

ஆனால், இவற்றில் எதுவும் வேதாகமத்தில் தேவனுடைய வசனத்தில் இருக்கும் “அதிகாரம்” இல்லை என்று நம்புகிறேன். “தங்களுடைய வார்த்தை தேவனுடைய வார்த்தைக்குச் சமம்” என்று கூறுகிறவர்கள் வேதாகமத்திலேயே கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இதைக் குறித்து அநேக எச்சரிக்கைகள் உண்டு.

தேவன் இஸ்ரவேலரிடத்தில், நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம் என்று எச்சரித்தார் (உபா. 4:2).

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்… அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்து கொள்ளுவார், நீ பொய்யனாவாய் (நீதி. 30:5,6).

மிகவும் கடினமான எச்சரிக்கை வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தில் உள்ளது.

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது; ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன் மேல் கூட்டுவார் (வெளி.22:18).

தேவன் தம்மை இயேசுகிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்துவது பரிபூரணமாக வேதாகமத்தில் காணப்படுகிறது. மேலும் இந்த உலகத்தில் படைப்புகள் மூலமும் தேவன் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். நாம் அறியவேண்டிய அனைத்துக்கும் தேவனோடு ஒரு சிறப்பான தொடர்பு இருப்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும்.

இயேசுகிறிஸ்துவின் மூலமாக நாம் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என் னும் இரகசியம் வேதாகமத்தில் உள்ளது (2தீமோ.3:15). நம்மை நேசிக்கும் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேதம் கூறுகிறது (2தீமோ. 3:16,17).

வேதவசனங்கள்மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்தி, நாம் அவரைப் பற்றி அறிந்துகொள்ள செய்யவில்லை. அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பு, அவர் தமது ஒரேபேறான குமாரனை நம்மை இரட்சிப்பதற்காக அனுப்பியதையும், அவரை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிப்படையலாம் என்றும், தேவனை அப்பா, பிதாவே என்று அழைக்கும் உரிமையைப் பெற்று அவரது பிள்ளைகளாக வாழலாம் என்றும் வேதம் நமக்குக் கற்பிக்கிறது. தேவன் மனிதனோடு பேசுகிறார் என்னும் புத்தகத்தில் ஜேம்ஸ் 1 பேக்கர் இப்படிக் கூறுகிறார்.

“ஒரு பொருளைக் கண்டுபிடிப்பது போலவோ, ஒரு உட்கருத்தை அறிந்து கொள்வதுபோலவோ உள்ளதல்ல வெளிப்பாடு; ஒரு சிறந்த கருத்து நமது உள்ளத்தில் தோன்றுவதும் வெளிப்பாடு அல்ல. மனிதன் தேவனைக் கண்டுபிடித்தல் வெளிப்பாடு அல்ல. தேவன் மனிதனைக் கண்டுபிடிப்பதும், தேவன் தம்மை மனிதனுக்குக் காட்டுவதுமே வெளிப்பாடு ஆகும்”.

தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிற படியால், நம்மை இந்த உலகத்தில் அமைதியாக அமர்ந்திருக்க விடமாட்டார். அவரைக் குறித்து சிந்தித்து, அதிசயித்துக் கொண்டு இருக்க விடமாட்டார்! உண்மை யிலேயே தேவன் என்மீது கரிசனை கொண்டுள்ளாரா? என்று அவனைக் கவலைப்படவும் அனுமதிக்கமாட்டார்.

தேவன் தமது வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். தமது திட்டத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நாம் வேதாகமத்தை வாசித்து, தேவனைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். நாம் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ளும்போது, நாம் நித்திய ஜீவனுக்குள்ள வழியை அறிந்துகொள்ளுவோம்.

வேதாகமத்தை வாசிப்பதன் மூலம் நாம் தேவனைப்பற்றி அறிந்துகொள்ளலாம். தேவன் தம்மை வெளிப்படுத்தியிருப்பதைக் கண்டுகொள்வோம். உங்களுக்கு தேவனைப்பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தால், உங்களுக்கு அவரைப்பற்றி அறிய விருப்பம் இருக்கு மானால், இன்றே வேதாகமத்தை வாசிக்க ஆரம்பியுங்கள்.

ஜெபத்துடன், கவனமாக வேதாகமத்தை வாசியுங்கள்.

நேரம் கிடைக்கும்போது, கடமைக்காக ஏதோ கொஞ்சம் என்று வாசிக்காதேயுங்கள், நீங்கள் அடிக்கடி சாப்பிடுவதுபோல, அடிக்கடி வேதாகமத்தையும் வாசியுங்கள். ஆவிக்குரிய நிலையில் நீங்கள் வளர்ந்து, கொழுத்துப் புஷ்டியாகி விடுவீர்கள்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்