எதிர் திசையில் …

தியானம்: 2024 மே 28 செவ்வாய் | வேத வாசிப்பு: யோனா 1:1-3; 2:1-10

YouTube video

யோனா ….தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான் (யோனா 1:3).

பஞ்சத்தில் உணவுக்காக தேவனை நம்பமுடியாமல், அந்நிய தேசத்தைத் தெரிந்தெடுத்த எலிமெலேக்குவுக்கு இந்த யோனா சற்றும் சளைத்தவர் அல்ல. பாவத்தினால் அழிந்துபோகவிருந்த நினிவே பட்டணத்து மக்களிடம் போய், தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரித்து, தேவனிடம் திரும்பினால் இரக்கமும் மன்னிப்பும் தர தேவன் வல்லவர் என்ற செய்தியை சொல்லும்படி யோனாவுக்கு தேவன் உத்தரவிட்டார். யோனாவின் காலத்திலே இந்த நினிவே, அசீரியாவின் மிக முக்கியமான பட்டணமாக இருந்தது. ஆனால், இதுவொரு மிகவும் கொடூரமான பட்டணமாகும். இஸ்ரவேல் தேசத்திலிருந்து வடகிழக்கேயிருந்த இந்த பட்டணத்திற்குப் போகும்படி யோனா பணிக்கப்பட்டார். இந்தப் பட்டணத்தாரை யோனா வெறுத்ததினால், இஸ்ரவேலின் தேவனுடைய இரக்கத்தை அவர்கள் பெற்றுக்கொள்வதையும் யோனா விரும்பவில்லை. இவர்கள் மனந்திரும்பிவிடுவார்களோ என்ற பயமும் யோனாவுக்கு இருந்தது (யோனா 4:2). ஆகையால் யோனா கர்த்தருடைய வார்த்தையைவிட்டு எதிர்ப்புறமாக ஓடினார்.

இப்படிதான் நாமும்; கர்த்தர் தம்முடைய வார்த்தையினூடாக ஒரு திசையைக் காட்டுவார். நாமோ எதிர்த்திசையாகத் திரும்பிவிடுகிறோம். இதற்கு பயமோ, பிடிவாதமோ, நமது பெலத்துக்கு மிஞ்சி கர்த்தர் நம்மிடம் கேட்கிறார் என்ற நினைவோ, நமது தேவனுடைய அன்பு நமக்குத்தான் என்று நமக்குள் இருக்கும் சுயநலமோ, எதுவும் காரணமாகலாம். ஆனால், கர்த்தரே நமக்கு ஒரு பொறுப்பைத் தரும்போது, அவருடைய இரக்கத்தையும் அன்பையும் நாம் அணைபோட்டுத் தடுக்கலாமா? யோனா இப்படி மறுதிசையிலே ஓடுவதைத் தெரிந்துகொண்டே ஒடினார். ஆனால், தேவனுடைய வழியைவிட்டு ஓடுவது எவ்வளவு பயங்கரமான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். இப்பாடத்தைக் கற்றுக்கொள்ள பெரிய விலைக்கிரயம் யோனா செலுத்தவேண்டியதாயிற்று. மூன்று நாட்கள் மீனின் வயிற்றினுள்ளே இருப்பது என்பது இலேசான காரியமா?

பிரியமானவர்களே, ஒரு காரியமாக தேவன் நம்மை உந்தித் தள்ளுவாரானால் அந்தக் காரியத்தில் தேவன் கரிசனையாக இருக்கிறார் என்பது உண்மை. அந்தக் காரியத்தைச் செய்ய நாமே உகந்தவர் என்று தேவன் காண்கிறார் என்பதும் உண்மை. இவ்விரண்டில், நமக்கு என்ன தெரிந்தெடுப்பு இருக்கிறது? போ என்றால் போவதுதானே. இதை மறந்து, தேவனுடைய வார்த்தையை விட்டு விலகி, யோனாவைப்போல ஆபத்தில் சிக்கித் தவிக்கிற தேவ பிள்ளையே, இப்போதே தேவனிடம் திரும்பு. உனக்காக வைத்திருக்கும் வேலையை தேவன் உன்னைக்கொண்டே நிறைவேற்றுவார்.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, பொய்யான மாயையைப் பற்றிக்கொள்கிறவர்கள் தமக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். நானோ உம்மைத் துதிப்பேன். ஆமென்.