நீ தேவனுக்குப் பெருமைக்குரியவனா?

தியானம்: டிசம்பர் 22 சனி; வாசிப்பு: யோபு 1:6-12

‘…உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து,
பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல
பூமியில் ஒருவனும் இல்லை.’ (யோபு 1:8)

‘ஐயா, நான் சமுதாயத்திலே மதிப்புடன் வாழுகிறேன். ஆனால், என் உள்ளத்திலோ கட்டுப்படுத்தமுடியாத பலவீனங்களுடன் வெளியே சொல்ல முடியாத எண்ணங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறேன். அவை பிறருக்குத் தெரிந்தால் வெட்கம். வழி சொல்லுங்கள்’ என ஒரு அதிகாரி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

அன்று, கர்த்தருடைய சந்நிதியில் தேவபுத்திரர் கூடிய கூட்டத்தில் வந்து நின்ற சாத்தானிடம், ‘எங்கிருந்து வருகிறாய்’ என்று கர்த்தர் கேட்டதற்கு, அவன், ‘பூமியெங்கும் உலாவி வருகிறேன்’ என்றான். அப்போது கர்த்தரே யோபுவைச் சுட்டிக்காட்டி, பெருமையாக சவாலிட்டுப் பேசினார். அப்போதும் பூமியில் ஏராளம் ஜனங்கள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால், கர்த்தரால் பெருமையாக சுட்டிக் காட்டக் கூடியதாக ஒரேயொரு மனிதன்தானா காணப்பட்டான்? அதேசமயம், தேவசந்நிதியில் அன்று நடந்த கூடுகை இன்று நடக்குமானால், கர்த்தர் உங்களையும் என்னையும் சுட்டிக்காட்டி சாத்தானுக்குச் சவால்விடக்கூடுமோ என்றதொரு கேள்வியையும் நம்மை நாமே கேட்டுப்பார்ப்போம்!

அன்று யோபுவுக்கு இல்லாத பெரியதொரு கிருபை இன்று நமக்குண்டு. அதுதான் கிறிஸ்துவினாலுண்டான மீட்பு. இன்று தேவசந்நிதியில் கூடுகை நடக்குமானால், சாத்தான், ‘பூமியெங்கும் சுற்றிவருகிறேன் என சாதாரணமாகச் சொல்லமாட்டான். ‘நீர் உம்முடைய குமாரனை இந்த மனுஷருக்காகவா கொடுத்தீர். அவர் பிறப்பைக் கொண்டாடுகிற மக்களைப் பார்த்தேன். அவர்கள் யாவரும் நான் வகுத்த வழியில் நின்றுதான் கொண்டாடுகிறார்கள். ஆராதனைகளிலே பிறந்த கிறிஸ்துவுக்கல்ல, தங்கள் திறமைகளுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள், அதுவும் என் திட்டம்தான். அவர்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுகிறார்கள்; ஆனால் அவர்களது உள்ளமோ கிறிஸ்துவினிடத்தில் இல்லை என்பதைப் பார்த்தீரா?’ இப்படியாக எத்தனை கதை சொல்லுவான். இது ஒரு கற்பனைதான். ஆனால், ஒரு உண்மையை நாம் மறுக்கமுடியாது. நமது ஒவ்வொரு காரியத்தையும் சாத்தானும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான். நமது வெளிவாழ்வில் நாம் பக்தியுள்ளவர்களாய் நல்ல கிறிஸ்தவர்களாய் பிறருக்குத் தென்படலாம். ஆனால், நமது சீர்கேடான உள்வாழ்வை, மறைவான மனப்போராட்டங்களை தேவனுக்கு மறைக்கமுடியாது. அந்தவகையில், இந் நாட்களில் அதிலும் இந்த விடுதலை நாட்களில், கர்த்தரால், நம்மைச் சுட்டிக் காட்டி சாத்தானுக்கு சவாலிடமுடியுமா? கர்த்தர் நம்மைக் குறித்துப் பெருமைப் படமுடியுமா? நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.

ஜெபம்: “பிதாவே, நான் உமக்குப் பெருமைக்குரிய பிள்ளையாகவா, அல்லது, உமது நாமத்தைப் பரிசுத்த குலைச்சலாக்கும் பிள்ளையாகவா வாழுகிறேன் என்பதைக் காண என் கண்களைத் திறந்தருளும். ஆமென்.”