• Dr.உட்ரோ குரோல் •
(செப்டம்பர் – அக்டோபர் 2025)

12. பிலதெல்பியா சபை!

மே-ஜூன் இதழில் சவக்கிடங்கின் தேவாலயமான சர்தை சபையை ஆராய்ந்தோம். அது வெளிப்புறத்தில் செழித்துக்கொண்டிருந்தாலும் உள்ளே உயிரற்று இருந்தது.

இவ்விதழில் பிலதெல்பியா சபையைப் பற்றி ஆராய்வோம். பிலதெல்பியா என்பதற்கு சகோதர “அன்பு” என்று பொருள். சர்தை சபைக்கு தென் கிழக்கே 25 மைல் தொலைவில் மிக அழகான ஒரு பள்ளத்தாக்கில் பிலதெல்பியா அமைந்துள்ளது. இதனை நான் “வாய்ப்புகளின் விசுவாசமுள்ள தேவாலயம்” என்று பெயரிட்டுள்ளேன். ஏனெனில் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்தனர். மேலும் தேவன் அவர்களுக்குக் கொடுத்த வாய்ப்புகளை முழுவதும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். இச்சபை சர்தை சபைக்கு முரணானது. சர்தை உண்மையாக இல்லை. அவர்கள் பெரியதொரு கட்டிடத்துக்குள் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பிலதெல்பியா தேவனிடத்தில் விசுவாசமாக இருந்தது. மேலும் அதைச் சுற்றியுள்ள சமுதாயத்தை ஆர்வத்துடன் அணுகியது. இன்று இந்த தேவாலயம் மத்திய துருக்கியிலுள்ள பிலதெல்பியா நகரத்தில் காணப்படவில்லை. இந்நகரம் கிரேக்க மொழியில் பைசண்டைன் என்று அழைக்கப்படுகிறது. இன்றோ அவ்வாலயத்தின் சிதைந்த மூன்று தூண்களும் நடைபதையில் சில அடையாளங்களும் மட்டுமே காணப்படுகின்றன.

ஒரு காலத்தில் இச்சபை செழிப்பான தேவாலயமாக இருந்தது. இச்சபை அச்சமுகத்தின் தொடர்பு சாதன சபை என்பேன்; ஏனென்றால் அவர்களுக்கு எல்லாவற்றுடனும் தொடர்பு இருந்தது. மேலும் அந்நகரம் வர்த்தக பாதையில் இருந்ததால், அனைத்துவகையான வணிக வண்டிகளும் பிலதெல்பியா வழியாகவே வரும். இது கிரேக்க மொழி பேசாத நகரங்களில் அம்மொழி பேசும் மையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நகரமாகும். ஆசியா மைனரில் கிரேக்க மொழி பேசுவதில்லை. அப்பகுதியில் கிரேக்கமொழி பேசவேண்டும் என்பதே அவர்களது தேவையாயிருந்தது. ஏனெனில் மத்திய துருக்கியின் லீதியா பேரரசில் லீதியன் மொழியே மிகவும் சக்திவாய்ந்ததாய் இருந்தது. ஆனாலும் இறுதியில் பெர்சியர்களுக்கும் பின்னர் கிரேக்கர்களுக்கும் அடிமையானது. ஆனால் கி.பி. 20இல் லீதிய மொழியும் மறைந்துவிட்டது. பிலதெல்பியா சபைக்கும் பரவலாக இதுவே நடந்தது.

இப்பகுதியில் கிரேக்க மொழியே பேசப்பட்டது. இதன்விளைவாக பிலதெல்பியா சபை சக்தி வாய்ந்ததாகத் தொடர்ந்தது. ஏனெனில் கிரேக்கமொழியே அதன் தொடர்பு மொழியாக இருந்தது. 14ஆம் நூற்றாண்டுவரை இச்சபை தொடர்ந்தது. ஆனால், இன்று அது இஸ்லாமிய சமுதாயமாக மாறிவிட்டது. ஏழு சபைகளிலும் இது ஒன்றே நற்செய்தியை அறிவித்த சபை. அந்த நற்செய்தியை பாதுகாப்பதில் இச்சபை கவனமாயிருந்தது. ஆனால் சர்தை சபை இதில் தோற்றுவிட்டது. சர்தை சபை உலகத்துடன் ஒத்துப்போவதிலும், வேதாகம கருத்துக்களை மறுதலித்த தவறையும் செய்தது. ஆதியிலிருந்த அன்பை விட்டுவிட்டது. ஆனால், பிலதெல்பியா அவ்வாறல்ல.

தன்னைச் சுற்றியுள்ள உலகத்துக்கு தாக்கத்தை அளிக்க வாஞ்சையான இச்சபைக்கு நீங்கள் என்ன கூறுவீர்கள்? இதற்கான பதிலை வெளி.3:7,8இல் நாம் காணலாம். “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.” ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உண்மையான பாராட்டுகளை இதில் நாம் வாசிக்கிறோம்.

முதலாவதாக, “உன் கிரியைகளை நான் அறிந்திருக்கிறேன் என்கிறார்.” அம்மக்கள் ஆண்டவருக்காக செய்த சிறிய காரியங்களையும் அவர் பாராட்டுகிறார். இரண்டாவதாக, “திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.” அதாவது, விசுவாசமுள்ள இம்மக்கள் தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தை ஆதாயப்படுத்துவதில் உள்ள தடைகளை அறிந்துள்ளனர். ஆனால், இயேசு அவர்களுக்கு வழியைத் திறந்துகொடுத்தார். இன்று நாம் திறந்த வாசலையுடைய சமுதாயத்தில் வாழ்கிறோம். வரலாறு காணாதவிதத்தில் நற்செய்தியை அறிவிக்க நமக்கு ஏராளமான வாய்ப்புகளும் வசதிகளும் தரப்பட்டுள்ளன. கடந்த 15 அல்லது 20 வருடங்களைக்காட்டிலும் வானொலி, சமுகஊடகம், மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின்மூலம் இன்று நாம் உலகினைச் சந்திக்கிறோம்.

இச்சபைக்கு இயேசு “இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” என்றார். அவர்களுக்கு மின்னஞ்சல், வானொலி, இணையம், தொலைக்காட்சி மற்றும் நமக்கிருக்கும் பல்வேறு அறிவியல் சாதனங்கள் அவர்களுக்கு இல்லை; ஆனால், தேவன் அவர்களுக்கு வழியைத் திறந்தார். அதன் வழியே செல்ல அவர்கள் தயாராக இருந்தனர்.

அது முக்கியமற்ற ஒரு சிறிய நகரத்தில் இருந்த மிகச்சிறிய சபை. அங்கு வல்லமையான போதகர்கள் இல்லை. ஆனால், அவர்கள் தங்களை அழைத்த தேவனின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்தனர். எனதோன் அவர், “கிறிஸ்துவின் நாமத்துக்கு நீங்கள் உண்மையாயிருந்தீர்கள். நாட்டின் மிகப்பெரிய சபையுடன் நான் உங்களைப் பட்டியலிடவில்லை. உங்களுக்கு நான் இக்கடிதம் எழுதுவதாலேயே நீங்கள் நினைக்கப்படுவீர்கள். இதைத் தவிர வேறுவிதத்தில் நீங்கள் நினைவில் இருக்கப்போவதில்லை” என்கிறார்.

ஆசியா மைனரில் (பென்சில்வேனியாவில்) உள்ள இந்நகரத்தைப் பற்றி உங்களுக்கும் எனக்கும் தெரியாது. இச்செய்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்குத் தெரிவித்ததினாலேயே (வெளிப்படுத்தல் 3) அறியவந்தது. இச்சபை ஏன் மிகவும் முக்கியம் வாய்ந்தது “இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன். என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்” (வெளி.3:9-10).

பிலதெல்பியா சபை உண்மையாக இருந்தது; ஆனால், உலகின் பார்வையில் அது வெற்றி பெறவில்லை. அது மிகப்பெரிய சபையோ, பிரபலமான சபையோ, செழிப்பான சபையோ அல்ல; அது உண்மையான சபை. மிகப்பெரிய, பழமையான, வசதியான சபைகளுக்கு நான் வாய்ப்பின் கதவுகளைத் திறக்கவில்லை; ஏனெனில் அவை உண்மையாக இல்லை. நீ எனக்கு உண்மையாக இருந்தபடியால் நானும் உனக்கு உண்மையாக இருப்பேன். இது இச்சபைக்கு கிடைத்த மிகப் பெரிய வாக்குறுதியாகும்.

நமக்கு தொல்லைகள், கஷ்டங்கள், வியாதிகள் எதுவுமே வராது என தேவன் ஒருபோதும் வாக்குறுதி தந்ததில்லை. நாம் ஏழைகளாவதில்லை என்றும் அவர் கூறவில்லை. “ஒவ்வொரு கிறிஸ்தவனும் செல்வந்தனாகவும், நோயற்றவனாகவும் இருக்கவேண்டும்; அவ்வாறு இல்லையெனில் உங்களுக்கு போதுமான விசுவாசம் இல்லை என்று பொருள்” என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அது நற்செய்தியல்ல, நற்செய்திக்கு எதிரானது. வேதாகமம் அவ்வாறு போதிக்கவில்லை. இப்புவியில் வாழும் தேவபக்தியுள்ள அநேகர் செல்வந்தராக இல்லை. எனவே நாம் பணக்காரராக இருப்பது தேவனுடைய தெரிந்தெடுப்பு அல்ல.

அது ஒரு சிறிய சபை. மேலும் அது சமுதாயத்துக்கு புறம்பான சபை. ஆனால், தேவனுக்கு உண்மையாயிருந்த சபை. எனவே தேவன் எபேசு, தியத்தீரா மற்றும் சர்தை சபைகளுக்கு திறக்காத வாய்ப்பின் கதவுகளை இச்சபைக்குத் திறந்து கொடுத்தார்.

என்னுடைய ஒரு நண்பர் பெரிய சபையின் போதகராக இருக்கிறார். அச்சபையின் வளர்ச்சிக்கான காரணங்களை அவரிடம் கேட்டேன். அதற்கு மறுமொழியாக அவர், “தேவனுடைய ஆவியானவரின் செயல்களைக் குறித்து நாம் ஒன்றும் சொல்லமுடியாது. தேவன் அவர்களை அழைத்த அழைப்புக்கு அவர்கள் உண்மையாய் இருத்தலே வெற்றிக்கு அழைத்துச்செல்லும். தேவன் சிலரை அழைத்துச் சொல்வதில் அவர்கள் உண்மையாய் இருக்கும்பொழுது அந்த சபை அதீத வளர்ச்சியடையும்.” ஆனால், சிலர் உண்மையாயிருந்தும் சபை சிறியதாகவே இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

சபை வளருவதற்கான இரகசியம் எதுவெனில் அது வளரும் சமுதாயத்தில் துவக்கப்படவேண்டும். அப்பொழுது இயற்கையாகவே சபை வளரும். சுற்றிலும் வீடுகள் பெருக இடங்கொடுங்கள். அப் பொழுது நீங்கள் வளருவீர்கள். ஆனால் வளர்ச்சியற்ற, செயல்பட இயலாத இடங்களில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் இது போன்ற சபைகளில் அங்கத்தினராயும் ஏன் போதகர்களாகவும்கூட இருக்கிறீர்கள். ஒரு சிறிய விவசாய கிராமத்தில் உங்கள் சபை இருந்தால் அது மிகப்பெரிய சபையாக மாறமுடியாது. ஏனெனில் அங்கு போதுமான மக்கள் இல்லை. அப்பொழுது என்ன செய்வீர்கள்?

பிலதெல்பியா சபைக்கு கர்த்தர் கூறியதை நீங்களும் செய்யுங்கள். உங்கள் வீட்டு முற்றத்தில் சாத்தானின் சபை இருந்தாலும், உங்கள் வீட்டின் பின்புறத்தில் தவறான மதவழிபாட்டு முறைகள் இருந்தாலும், தேவன் உங்களை அழைத்த அழைப்புக்கு உண்மையாய் இருங்கள். “தேவனும் உங்களுக்கு உண்மையாய் இருப்பார்.” “என் வசனத்தை நீ காத்துக்கொண்டபடியால், வரப்போகும் சோதனை காலத்துக்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்” (வெளி.3:10) என்ற வாக்குறுதியைத் தருகிறார். இந்த உறுதிமொழியை நாம் தவறவிடக்கூடாது.

பிலதெல்பியா சபைக்கு அவர்கள் யாரென்றும், அவர்களது செயல்களைப் பற்றியும் அவர் ஒரு உண்மையான மதிப்பீட்டை வழங்கினார். இப்பொழுது இந்த சபையை நான் வாய்ப்புகளின் ஜெபவீடு என்று அழைக்கிறேன். இது மிகப்பெரிய சபையாக இல்லாததினால் ஜெபவீடு என்றும், உண்மையாக இருந்து கிடைத்த வாய்ப்புகளைச் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதால், வாய்ப்புகளின் விசுவாச சபை என்று அழைக்கிறேன். வாய்ப்புகள் வரும்போது விசுவாசமான சபைகள் அவற்றை செயல்படுத்துகின்றன. தேவன் அளித்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி உண்மையாயிருந்த சபை இந்த பிலதெல்பியா சபையாகும். 9 மற்றும் 10 வசனங்களிலிருந்து தேவன் இந்த சபையைப்பற்றி மிகவும் திருப்தியடைந்தார் என நாம் பார்க்கிறோம். “என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்” (வசனம் 10) என்று அவர் கூறுகிறார்.

இங்கு “இரண்டு காரியங்களை நான் செய்யப் போகிறேன். நீ எனக்கு உண்மையாக இருந்தபடியால் நான் உன் எதிரிகளை உன் காலடியில் விழப்பண்ணுவேன்; நீ என்னை உயர்த்தி, முக்கியப்படுத்தி உன் சபையின் மையமாக்கியதால், தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களை நான் உன் காலடியில் வரப்பண்ணுவேன். உன் எதிரியை நான் விழப்பண்ணுவேன்” என்று வாக்களித்தார்.

பிலதெல்பியா சபை தேவனுடைய அன்பை வெளிப்படுத்தும் சபை என்று சிலர் விமரிசித்தனர். ஆனால், தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாய்க் கீழ்ப்படியும் சில சபைகள் மற்ற சபைகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது. தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாய்க் கீழ்ப்படியும் சில பெரிய தேவாலயங்களை, குறைகூறும் பெரிய தேவாலயங்கள் சர்தை சபையைப்போலவே செத்த தேவாலயங்களாக இருக்க வாய்ப்பு உண்டு.

“நீ எனக்கு உண்மையாக இருப்பதால் முதலாவதாக நான் உங்கள் எதிரிகளை நான் அடக்குவேன் (வெளி 3:9); இரண்டாவதாக சோதனை காலத்துக்குத் தப்பும்படியாக நானும் உன்னைக் காப்பேன் (வெளி.3:10)” என்று தேவன் உயிருடன் இருக்கும் சபைக்கு வாக்களிக்கிறார்.

இது “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்” (சங்கீதம் 23:4) அதாவது, “உன் துன்ப நேரத்தில் நான் உன்னோடே இருப்பேன்” என்பது போன்ற சாதாரண வாக்குறுதி அல்ல. இது வித்தியாசமானது. அதாவது, சோதனை காலத்தில் நான் உன்னுடன் இருப்பது மாத்திரமல்ல; அச்சோதனைக்கு உன்னை விலக்கி காத்துக்கொள்ளுவேன். இது போன்ற வாக்குறுதிகளை நாம் அடிக்கடி காண்பதில்லை, எனவே அவர் தனது செய்தியை வசனம் 11-13இல் முடிக்கிறார். “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.”

புதிய எருசலேமைப்பற்றி நாம் பின்வரும் அதிகாரங்களில் பார்க்க இருக்கிறோம்; ஆனால் அவர் இங்கு அதை அறிமுகப்படுத்துவது மிக ஆச்சரியமல்லவா? “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:3). பிலதெல்பியா சபைக்கும் அவர் இதையே வாக்குப் பண்ணுகிறார். “உபத்திரவ காலத்துக்கு முன்பதாக நான் வந்து அவற்றை அகற்றுவேன்”

இரண்டாவதாக, “நான் உன்னை வலிமையாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குவேன்.” அவர்கள் தங்கள் கிரீடத்தை இழக்கப்போவதில்லை; அவர்கள் ஆலயத்தின் தூணாக இருப்பார்கள். இது அநேகமாக அவர்களது நிலைத்தன்மையைக் குறிக்கும் அடையாளமாக இருக்கும். மற்ற சபைகளைவிட இது நீண்டகாலம் இருந்தது. ஏனெனில், அது தேவனுக்கு அதிகமாய் உண்மையாய் இருந்தது.

இறுதியாக அவர் “தேவனுடைய நாமத்தை உன்மேல் எழுதுவேன்” என்கிறார் (வெளி. 3:12 பார்க்க). இது தேவனுக்குரிய அடையாளம். நாம் அவருடைய உள்ளங்கையில் வரையப்பட்டிருக்கிறோம், நம்முடைய நாமங்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது அவர் “தேவனுடைய நாமத்தை உன்மேல் எழுதுவேன்” என்கிறார். அதாவது “நீ யாரைச் சேர்ந்தவர் என்று ஒருவரும் குழம்பமாட்டார்கள்” என்பது பொருள். வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் ஒரு மனிதனின் பெயரையும் மக்கள்மீது எழுதப்படும் 666 என்ற எண்ணைப் பற்றியும் நாம் விரைவில் பார்க்க இருக்கிறோம். ஆனால், அந்த பேரழிவின் பெரும் உபத்திரவத்துக்கு முன்னரே இங்கு அவர் ” நான் உன்னை அகற்றி, 666 என்ற மனிதனின் நாமத்துக்கு பதிலாக என்னுடைய நாமத்தை (தேவனின் நாமம்) எழுதுவேன்” என்கிறார்.

மேலும் புதிய எருசலேமாகிய தேவனுடைய நகரத்தின் நாமத்தையும் என்னுடைய நாமத்தையும் எழுதுவேன் என்கிறார். உங்கள் அனைவருக்கும் விமானத்தில் பறந்த அனுபவம் இருக்கும் என எண்ணுகிறேன். விமான நிலையத்தில் நீங்கள் செல்லவேண்டிய இடத்தையும் உங்களுடைய உடமைகளையும் சரிபார்ப்பார்கள். பின்னர் உங்களுடைய பெயரையும், நீங்கள் செல்லவேண்டிய இடத்தையும் ஒரு தாளில் குறித்து அதனை உங்கள் பயணப் பெட்டியுடன் இணைத்து வைப்பார்கள். அதைத்தான் இங்கு அவர் சொல்லியிருக்கிறார். உங்களுடைய அனைத்தும் சரியான இலக்கை அடைவதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

இறுதியாக, அவர் “நான் உங்களுக்கு ஒரு புதிய பெயரை வைக்கப்போகிறேன். உங்களை உயர்த்துவதை மட்டுமல்ல, உங்களுக்கு ஒரு புதிய நிலையையும் தருவேன். இதுவொரு உண்மையான சபை; நீங்கள் பெரிய சபை அல்ல, பெரிய சபையாகவும் மாறமுடியாது. நீங்கள் இப்பொழுது செய்துகொண்டிருக்கும் செயல்களையே தொடருங்கள்; அவை சரியான செயலே. உங்கள் சபையின் செயல்கள் என்னுடைய செயல்களே.”

நாமும் பிலதெல்பியா சபையின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் அல்லவா! “பணியில் கவனமாயிரு” என்று நம்மைப் பார்த்து ஆண்டவர் சொல்லவேண்டும் என விரும்புகிறோம். இது எனக்கு ஜாண் வாக்கர் என்பவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வை நினைவூட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நியூயார்க் பட்டணத்திலுள்ள ஸ்டேட்டன் தீவின் கலங்கரை விளக்கை முறைப்படுத்தும் பணியில் இருந்தார். அந்த விளக்கை செயல்படுத்தி எந்தவொரு கப்பல் சேதமும் வராதபடி செய்வதே அவருடைய வேலை. ஒருமுறை அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்க அரசாங்கத்தில் நான்கு ஆண்டுகள் பணிசெய்த அவருக்கு திடீரென்று உடல்நிலை குன்றியது. தனது மனைவி கேத்ரீனிடம், “எனக்கு அதிகமான வலி உள்ளது” என்று கூறினார். அவரது மனைவியும் மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டார். அவர்கள் ஒரு மருத்துவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். “அவர் ஜாண் வாக்கரைப் பரிசோதித்துவிட்டு நீங்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும்” என்று கூறி ஸ்டெர்ச்சரில் ஏற்றி ஸ்டேட்டன் தீவுக்கு வெளியே அனுப்பிவைத்தனர். செல்லும் முன்பதாக அவர் தமது மனைவியிடம், “கலங்கரை விளக்கில் முழுகவனத்தையும் செயல்படுத்து” என்று கூறினார். இதுவே அவரது இறுதி வார்த்தை. வேறுவகையில் சொல்வதானால், “நாம் இங்கு வந்த நோக்கத்தை நினைவில் கொள்; கலங்கரை விளக்கை கவனி” என்பதாகும்.

ஆனால், அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார். அவருடைய மனைவி மீண்டுமாக தனது இல்லமான கலங்கரை விளக்கத்துக்கு திரும்பினார். அடுத்த 30 ஆண்டுகளுக்கு கேத்ரீன் அந்த கலங்கரை விளக்கை சிறப்பாக முறைப்படுத்தி செயல்படுத்தினார். உண்மையான பெண்ணாக நீங்கள் அவளைக் கருதினால் பிலதெல்பியா சபையையும் அவ்வாறே கருதலாம். இந்த இதழில் உண்மையானதும் தேவன் கொடுத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட பிலதெல்பியா சபையைப் பார்த்தோம்.

சர்தை சபை, பிலதெல்பியா சபை, லவோதிக்கேயா சபை இம்மூன்றில் பங்குகொள்ள நமக்கு வாய்ப்பு கொடுத்தால் நாம் எதைத் தெரிந்தெடுப்போம்? நாம் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்திலும் உண்மையாயிருக்க தேவன் விரும்புகிறார். “ஒளியைக் காத்துக்கொள். எனக்கு முக்கியமான காரியங்களில் கவனமாயிரு” என்பதே தேவன் நமக்குத் தரும் இறுதி கட்டளையாகும். நாம் அதற்குக் கீழ்ப்படிவோமா!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை