எசேக்கியாவுக்கும் சோதனையா?
தியானம்: 2025 நவம்பர் 20 வியாழன் | வேதவாசிப்பு: 2இராஜா.20:1-7; 2நாளா.32:22-31

எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத் தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான் (2நாளாகமம் 32:25).
செழிப்பு உபதேசங்கள் நிறைந்துள்ள இந்நாட்களில், கஷ்டங்களும் சோதனைகளுமே நம்மை உருவாக்கும் ‘தேவனுடைய உபகரணங்கள்’ என்றால் நம்மால் ஏற்க முடியுமா? ஆண்டவர் நமக்குச் செய்த நன்மைகளை நாம் திரும்பிப்பார்க்க வேண்டும். அவர் நம்மை இரட்சித்து, தமது பிள்ளையாக்கினாரே, இதற்கும் மேலான ஒரு அற்புதம் இருக்கமுடியாது. இப்படியிருக்க உண்மையாகவே நாம் கர்த்தருக்கு முன் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா?
சகலமும் நன்றாய் நடந்து, வெற்றிகள் கிடைத்து, செழிப்பு பெருகும்போது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த இடத்தில்தான் இன்று அநேகர் விழுந்துபோகிறார்கள். இது மனமேட்டிமைக்கு வழிவகுக்கும். அன்று எசேக்கியாவுக்கும் இதுதான் நடந்தது. கர்த்தர் தனது வியாதியைக் குணமாக்கி, ஆயுசைக்கூட்டி ஆசீர்வதித்த பின்னர், அவனுக்குள் மனமேட்டிமை உண்டானது. தேவன் பெருமையுள்ளவர்களை எதிர்க்கிறார் என்று வேதத்தில் காண்கிறோம்.
“அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்” (2நாளா 32:31). இந்த வாக்கியம் நம்மையும் எச்சரிக்கட்டும். எசேக்கியாவுக்கு நடந்த அதிசயத்தைக் கேள்வியுற்று பாபிலோன் ராஜா பிரபுக்களை அனுப்பிவைத்த விஷயத்தில், எசேக்கியா என்ன செய்கிறான் என்பதைக் கவனிப்பதற்காக கர்த்தர் ஒரு அடி பின்னே நின்றார் என்று சொல்லலாம். மாறாக, கர்த்தர் அவனை சோதிக்கவில்லை. சற்று தள்ளி நின்று கவனித்தார். எசேக்கியாவோ அவர்களை அங்கீகரித்து, தேவனுக்கு மகிமை செலுத்துவதைவிட்டு, தான் சவரித்ததுபோல, சகல பொக்கிஷங்களையும் அவர்களுக்குக் காண்பித்து பெருமைப்பட்டான். இதன் விளைவாக சகலமும் பாபிலோனால் கைப்பற்றப்படும் என்றும் அவனது சந்ததியும் பாபிலோனிலே வேலைக்காரராவார்கள் என்றும் சொல்லப்பட்டது.
அன்பானவர்களே, பெருமை, மனிதனைக் கொல்லுகின்ற நஞ்சூட்டப்பட்ட ஆயுதம் என்றால் மிகையாகாது. நாம் விடுகின்ற மூச்சுக்கூட தேவனுடைய கிருபையே. நமக்கு உண்டாயிருக்கிற அனைத்தும் அவராலே மட்டும்தான் ஆகிறது. ஆசீர்வாதங்களைக் குறித்து பெருமைப்படும்போது ஆசீர்வதித்தவரை நாம் புறம் தள்ளிப்போடுகின்ற அபாயமுண்டா? ஆண்டவர் இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் ஒருமுறை தன்னும் தமது தெய்வீகத்தை வெளிப்படுத்தவே இல்லை. மரணம் நேரிட்டபோதும், அந்தத் தாழ்மை அவரில் ஜொலித்துக்கொண்டே இருந்தது. இன்று நம்மை ஆராய்ந்து சகல மேன்மையையும் கர்த்தருக்கே செலுத்தி, “நான்” என்ற பெருமை வாழ்வின் எந்த மூலையில் இருந்தாலும் இப்போதே அதை அகற்றிப்போடுவோமாக.
ஜெபம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, நான் என்ற பெருமை, மனமேட்டிமை என்ற வியாதி எங்களுக்குள் வந்திடாதபடி தாழ்மையின் இருதயத்தை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.