சமுகத்தை விட்டு விலகாமல்…
தியானம்: 2025 நவம்பர் 28 வெள்ளி | வேதவாசிப்பு: சங்கீதம் 51:1-13

உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும் (சங்கீதம் 51:11).
அன்றாட வாழ்விலே நாம் சாதாரணமாக இருந்தாலும், நமது அன்றாட கடமைகளை ஒழுங்காகச் செய்தாலும், ஆவிக்குரிய விசுவாச வாழ்விலே ஒரு தேங்கிய நிலை அல்லது சோர்ந்துபோன நிலை, நமக்கு சில சமயங்களிலே உண்டாகிறதல்லவா? அந்த சந்தர்ப்பங்களில் நாம் என்ன செய்கிறோம்? நமது தேங்கிய அல்லது வளராத நிலைமையை உணராமல் அல்லது உணர்ந்தும் அதை சீர்செய்ய முயற்சிக்காமல் இருப்போமானால் அது மிகுந்த ஆபத்தைக் கொண்டுவரும்.
அன்று தாவீது ராஜாவும் ஆசைப்படக் கூடாததில் ஆசை வைத்து, கொலை பாதகத்துக்கு ஆளானார். இந்தப் பெரிய பாவத்தைச் செய்துவிட்டும் ஒன்றும் தெரியாதவர்போல அமைதியாக இருந்தார். கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்துவிட்டதையோ, அந்தப் பாதகத்தினிமித்தம் தேவனுக்கும் அவருக்குமிருந்த உறவில் உடைவு உண்டானதையோ, தேவசமுகத்திலிருந்து தான் விலகிவிட்டதையோ, தெரிந்தும் தெரியாமலும் உணர்வற்றிருந்தார். தன் அன்றாடக காரியங்களில் என்றும்போல ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். நாத்தான் வந்து உணர்த்தியபோதுதான் தூங்கிக்கொண்டிருந்த அவருடைய உணர்வு விழித்தெழும்பியது. தான் தேவசமுகத்திலிருந்து விலகிவிட்டதையும், பாவம் செய்து தேவனுடைய ஆவியானவரைத் தான் துக்கப்படுத்தி அவரை புறம்பே தள்ளிவிட்டதையும் உணர்ந்து பாவ உணர்வுடன் கதறி ஜெபிக்க ஆரம்பித்தார்.
தேவபிள்ளையே, தேவசமுகத்தைவிட்டு விலகுவதைப் போன்றதொரு கொடிய அனுபவம் யாருக்கும் வரக்கூடாது. இதற்கு மூலகாரணம் பாவம். பாவம் நமக்குக் குறுக்கே வரும்போது கூடவே பிரிவையும் கொண்டுவருகிறது. தேவன் நம்மைவிட்டு விலகுகிறவர் அல்ல; மாறாக, நாமே தேவ சமுகத்திலிருந்து விலகிவிடுகிறோம். பரிசுத்தாவியின் கட்டுப்பாட்டிலிருந்து நாமாகவே விலகுகிறோம். பாவமும் பரிசுத்தமும் ஒரே இடத்தில் இருக்க முடியாதே! நாம் வெளியரங்கமாக கிறிஸ்தவ வாழ்வில் சுறுசுறுப்பாக இருந்தாலும், நமது விசுவாச வாழ்க்கையைக் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டும். நாம் எப்போதும் அவர் அருகே இருந்து நிறைவாழ்வு வாழவேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். ஆகவே, அறிக்கை செய்யாத, செய்யப்படாதக் காரியங்களை இப்போதே அறிக்கை செய்வோமாக. தேவசமுகத்தைவிட்டு ஒருபோதும் நாம் விலகக்கூடாது. நமது பாவங்களின் பின்விளைவுகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும், நம்மை அவர் மன்னித்து, மெய்யான மனமகிழ்ச்சியைத் தந்து, நம்மைத் தமக்குள் நிலைநிறுத்த நம்முடைய தேவன் வல்லவராகவே இருக்கின்றார். நாம் அவரிடம் செல்வோமா?
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, உணர்வுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். உமது சமுகத்தை விட்டு ஒருபோதும் விலகாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.