சகலவிதமான ஆறுதலின் தேவன்!
தியானம்: 2025 டிசம்பர் 1 திங்கள் | வேதவாசிப்பு: 2கொரி.1:2-5

… பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகல விதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம் (2கொரி. 1:3).
இவ்வருடத்தின் கடைசி மாதத்திற்குள் பிரவேசிக்க கர்த்தர் கிருபை செய்திருக்கிறார். நம்மை கரம்பிடித்து குறைவுகளை நிறைவாக்கி செம்மையாய் வழிநடத்தி வந்த தேவனை முழுமனதோடும் முழுஇருதயத்தோடும் அவரைத் துதித்து ஸ்தோத்திரிப்போம். இம்மாதத்தில் நம் அனைவரின் குடும்பத்தேவைகள் அனைத்தையும் கர்த்தர் சந்திந்து நடத்தப் போதுமானவராயிருக்கிறார். கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார் (சங்.121:7). துதியோடும் ஸ்தோத்திரத்தோடும் இந்த மாதத்தை ஆரம்பிப்போமாக.
கடந்துவந்த பதினொரு மாதங்களிலும், பலவித சோதனைகள், இழப்புகள், பொருளாதார பிரச்சனைகள், வியாதிகள் என்று பலவற்றை நாம் கடந்து வந்திருந்தாலும், ஒரு நாளிலாவது அல்லது ஒரு சமயத்திலாவது நாம் மகிழ்ச்சியாய் இருந்திருப்போம்! அதற்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். ஏனெனில், அந்த மகிழ்ச்சியின் வேளைக்கு அடிகோலியது நாம் சந்தித்த கஷ்டங்களேதான் என்றால் மிகையாகாது. பவுல் இந்த நிருபத்தை எழுதியபோது, என்ன மன நிலையில் இருந்தார் என்பதை அவரது ஒவ்வொரு வாக்கியமும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. “பலத்திற்கு மிஞ்சின” அதிகமான வருத்தத்துக்கூடாகச் சென்ற இவர், எந்த நிலையிலும் சோர்ந்துபோகவுமில்லை, தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தாமல் இருந்ததுமில்லை. அவரால் இது எப்படி முடிந்தது? பவுலைக் கர்த்தரேதான் அழைத்தார், பவுலும் ஆண்டவருடைய ஊழியத்தை மாத்திரமேதான் செய்தார். ஆனால், உபத்திரவங்கள், கொலைமிரட்டல்கள், அடிகள், உதைகள் என்று ஏராளமானவற்றை சந்திக்க நேரிட்டது. இருந்தும் ஒவ்வொரு தடவையும் அவர் கர்த்தரின் பிரசன்னத்தை அதிகமதிகமாக உணர்ந்தார். இல்லையானால், “சகலவிதமான ஆறுதலின் தேவன்” என்று பிதாவாகிய தேவனுக்கு ஒரு நாமத்தைச் சூட்டியிருப்பாரா?
“இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருந்த” சிமியோன், குழந்தை இயேசுவைக் கண்டதும், அவரைக் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்தான் (லூக்.2:25,28). ஆம், ஆண்டவர் நமக்கு ஆறுதலின் தேவனாக இருக்கிறார். அவர் ஆறுதல் செய்வதால் நமது பிரச்சனைகள் யாவும் மாறிப்போம் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால், எப்போதும் இப்படி இருந்தால், பிரச்சனைகள் நீங்குவதற்கு மாத்திரமே நாம் தேவனைத் தேடுகிறவர்களாகி விடுவோம். ஆக, அவர் ஆறுதல் செய்யும்போது, தைரியத்தையும் பெலத்தையும்கூட நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதையும் பவுல் உணர்த்துகிறார். இதனால், கஷ்டங்களுக்குள் அகப்பட்டு அவதியுறுகின்றவர்களுக்கு ஆறுதல் செய்கின்ற திராணியை நாம் பெற்றுக்கொள்கிறோம். நம்மிடம் ஆறுதல் தேடிவருகிறவர்கள் விஷயத்தில், வாழ்வில் எங்கோ ஒருநாள் அவர்களின் அதே பிரச்சனைக்கு நாம் முகங் கொடுத்திருப்பதால் அதன் வலிகளை நாம் உணருவோம்; அப்போது, அவர் களை ஆறுதல்படுத்தி பெலப்படுத்தி அனுப்புவது நமக்கு இலகுவாக இருக்கும். அப்போது நம்முடன் அவர்களும் தேவனை ஸ்தோத்திரிப்பார்கள் அல்லவா!
ஜெபம்: எங்களுக்கு ஆறுதலளிப்பதற்காக வந்துதித்த தேவனே, இப்புதிய மாதத்தை எங்களுக்கு ஆசீர்வதித்துத்தாரும். உமது ஆறுதலால் எங்களை நிரப்பும். ஆமென்.