நான் அவ்வளவு பெறுமதி மிக்கவனா?
தியானம்: 2025 டிசம்பர் 8 திங்கள் | வேதவாசிப்பு: 1யோவான் 4:9-17

பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன் நீ என்னுடையவன் (ஏசா.43:1).
ஒரு விருது வாங்கிய மகன், தனக்காகத் தனது தகப்பன் எதையெல்லாம் விட்டுவிட்டு, தன்னை ஆளாக்கினார் என்று பெருமையாக சபையில் அறிவித்தான். அந்த வைபவம் முடிந்த பின்னர் ஒரு பத்திரிக்கையாளர் இந்த முதிய தகப்பனிடம், ‘நீங்கள் மிகுந்த வறுமையிலிருந்தாலும் இந்த மகனை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பாமல், உங்களை வருத்தி இவனை இந் நிலைக்குக் கொண்டு வந்தீர்களே, எப்படி?’ என்று கேட்க, அந்த முதியவர் பதிலாக: “இவன் என் மகன். தாயின் வயிற்றில் இருந்தபோதே நான் இவனை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். இவனே என் எல்லாம். எனது ஏழ்மையோ, வருத்தமோ, கிடைத்த சொற்ப பணமோ, மக்களின் ஏளனங்களோ யாவுக்கும் மேலாக இவன் எனக்கு மிகவும் பெறுமதியானவன். இவனுக்காக இல்லாமல், யாருக்காக நான் செய்வது?” என்று கேட்டார்.
இப்படியிருக்க, பரலோக சந்தோஷங்களையும், வரப்பிரசாதங்களையும் விட்டு, இந்தப் பாழாய்ப்போன பூமிக்கு வருவதற்கு இயேசு ஏன் இவ்வளவு சிரமப்பட்டார்? இந்தப் பூமியிலே ஒரு பெறுமதியற்ற, தாழ்மையான, மிகவும் பரிகசிக்கப்பட்ட 33 வருட குறுகிய வாழ்வு வாழ அத்தனை சந்தோஷங்களையும் விட்டு இயேசு இறங்கி வந்தது ஏன்? அன்று எகிப்தின் கொடுமை தாங்காமல் இஸ்ரவேலர் ஒரு மீட்புக்காகக் கூக்குரலிட்டனர். கர்த்தர் மோசேயை எழுப்பினார். இஸ்ரவேல் அற்புதமாக மீட்கப்பட்டு, சுதந்திரபூமியில் நிலை நாட்டப்பட்டது. இங்கே மனிதன் தான் பாவி என்பதை உணர்ந்து மீட்புக்காகக் கூக்குரலிட்டானா? ஆனால், பரம தகப்பன், தன் சாயலில் படைக்கப்பட்டவன், தனக்குப் பெறுமதியானவன் அழிவுக்கு உட்படுவதை விரும்பாமல், அவனை மீட்கும்படிக்கு ‘பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினார் என்று நாங்கள் சாட்சியிடுகிறோம்’ என்கிறது வேதவாக்கியம். இதுதான் பரிசுத்தமான, எதையும் எதிர்பாராத அகாபே’ அன்பு. இந்த அன்பு எதற்காகத் தன்னை அர்ப்பணித்தது? தம்மைவிட்டுத் தொலைந்துபோன ஒரு பெறுமதியான பொக்கிஷத்தைத் தேடி, அதைச் சிறைப்பிடித்து வைத்திருந்த எதிரியிடமிருந்து அதை வல்லமையோடு மீட்டு, அது தமக்குரியது என்று உரிமை கோருவதற்கே தவிர, வேறு எதற்காக?
இந்தப் பெறுமதிமிக்க பொக்கிஷம் யார்? நாமேதான்! “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது” (1யோவா.4:10). அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து,’ நம்மை மீட்கும்படி தம்மைப் பலியாக்கும்படி தம்மைத்தாமே ஒப்புவிக்குமளவுக்கு அவர் நம்மைப் பெறுமதிமிக்கவர்களாகக் கருதிய அன்புக்கு ஈடாக நான் என்ன செய்வேன்?
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, தொலைந்துபோன உம்மைவிட்டு தூரமாய் இருந்த எங்களை மீட்டுக்கொள்ளும்படியாக எங்களைத் தேடிவந்தீரே.! ஸ்தோத்திரம். ஆமென்.