இயேசுவைப் போல…

தியானம்: 2026 ஜனவரி 9 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 1:9-14

YouTube video

…. கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார் (யோவான் 1:14).

பாடசாலை வைபவத்திலே பிள்ளைகள் ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த வேறு ஒருவரைப்போல உடை உடுத்து நடித்துக் காட்டிக்கொண்டிருந்தனர். ஒரு மாணவி, ஒரு நீண்ட பிரம்பை வைத்து பிள்ளைகளை மிகவும் கடினமாகத் தண்டிப்பதுபோல நடித்தாள். அவளிடம் கேட்டபோது, “நான் என் கணித ஆசிரியரைப்போல நடித்துக்காட்டினேன்” என பதில் சொன்னாள். அந்த ஆசிரியை வெட்கத்தில் தலைகுனிந்தார். ஆனால், இயேசுவைப்போல் வாழ்வது என்பது, ஒருபோதும் கோபம் கொள்ளாத தன்மை, முகத்திலே எந்நேரமும் ஒரு அமைதி, புன்சிரிப்பு, அவிசுவாசிகளைத் தவிர்த்தல் இப்படியாக ஒரு நூதன வாழ்வைத்தான் நாம் நினைப்பதுண்டு. ஆனால் இவை நமது வெளிவாழ்வின் போர்வையாகக்கூட இருக்கலாம். இவைதான் கிறிஸ்துவின் தன்மை என்று நாம் நினைப்போமானால் நாம் ஆண்டவரையும் தவறாகப் புரிந்து கொண்டதாகிவிடும்.

தம்முடைய பிதாவின் வீடாகிய ஆலயம் கள்ளர் குகையாக்கப்பட்டதைக் கண்டபோது, இயேசு சவுக்கெடுத்ததையும் காசுக்காரரின் காசுகளைக் கொட்டி விட்டதையும் நாம் மறக்கலாமா! “மதிகேடரே! குருடரே!” என்று யூதமத வழி காட்டிகளைக் கடிந்துகொண்ட தேவனை மறக்கலாமா! இயேசு எல்லோரையும் நேசித்தார்; ஆனால் எல்லோரையும் நம்பவில்லை (யோவா.2:24). அவர் துக்கமாயிருந்தார். சில சமயங்களில் அழுதார். பகைவர்களையும் நேசித்தார், தம்மை நேசித்தவர்களையும் நேசித்தார் (யோவா.14:21-23). இனத்தார் அவரைப்பார்த்து, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்றனர் (மாற்.3:21). யூதர்களோ அவரைப் பார்த்து, பிசாசு பிடித்த பைத்தியக்காரன் என்றனர் (யோவா.10:20). ஆனால் “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்” என்று கிறிஸ்துவின் சிந்தையை ஒரே வாக்கியத்தில் அருமையாய் விளக்கினார் யோவான் (யோவான்1:14). அந்தக் கிருபையும் சத்தியமும் அவர் வாழ்வில் மரணபரியந்தம் பிரதிபலித்துக்கொண்டே இருந்தன.

ஆண்டவருடைய சகல நடக்கைகளும், நோக்கங்களும், செயல்களும் மற்றவர்மீது அவர் வைத்திருந்த கரிசனையையும் அன்பையும் வெளிப்படுத்தியது. அவர் பாவிகளை நேசித்தார். ஆனால் நாமோ, நமது சுயநல நோக்கங்களுக்காய் கோபப்படும்போது, இயேசுவும் கோபித்தாரே என்கிறோம். நாம் தவறு செய்து, அதன் விளைவாய் பாடுபடும்போது, இயேசுவும் பாடுபட்டாரே என்கிறோம். சுயபரிதாபத்துடன் அழுதுவிட்டு, இயேசுவும் அழுதாரே என்கிறோம். தேவபிள்ளையே, அப்படியல்ல; அவருடைய சிந்தை நமக்கு வேண்டும். அது மேலோட்டமான வாழ்வு அல்ல; கிறிஸ்துவின் நோக்கத்தைச் சுமந்தவர்களாக முதலில் நமது உள்ளான வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து வாழக் கற்றுக்கொள்வோமாக.

ஜெபம்: தகப்பனே, கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி மேலோட்டமான வாழ்க்கையை அல்ல; எங்களது உள்ளான வாழ்வில் மெய்யான அர்ப்பணிப்போடு வாழ்ந்து உம்மை மகிமைப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.