• சுவி. சுசி பிரபாகரதாஸ் •
(நவம்பர் – டிசம்பர் 2025)

நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டை பண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார் (மல்கியா 1:6).

இவ்வருடத்தில் கர்த்தரை எதினாலே அவருடைய நாமத்தை அசட்டை பண்ணினோம் என்பதனைக் குறித்து நாம் கற்றுக்கொள்ளவும், சிந்தித்துப் பார்க்கவும் அழைக்கப்படுகிறோம். நம் வாழ்வில் கர்த்தரை அசட்டை பண்ணலாம் அல்லது நம் வாழ்வில் கர்த்தரை கனம் பண்ணலாம். இன்றைக்கு நம்மை நாம் கேட்க வேண்டிய ஒரு கேள்வி உண்டு. இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து இறுதிவரை தேவனை அசட்டை பண்ணி வாழ்ந்தேனா அல்லது கனம் பண்ணி வாழ்ந்தேனா என்று கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும்.

இச்செய்தியின் மூலம் தூய ஆவியான வர்தாமே நம்மோடு இடைபடுவாராக. அன்பானவர்களே! மல்கியாவின் நாட்களில் வாழ்ந்த காலத்தின் மக்களிடத்தில் மூன்று காரியங்கள் காணப்பட்டன.

முதலாவது அவர்கள் தவறான வார்த்தைகளை பேசி கர்த்தரை அசட்டைப் பண்ணினார்கள். கர்த்தருக்குள் வாழ்ந்த அவர்கள் இப்போது வழுவிப்போனார்கள். அவர்களது பின் வாங்கிப்போன அனுபவம் அவர்களது வார்த்தைகளிலேயும் உரையாடல்களிலேயும் அவர்களின் அறிக்கைகளிலேயும் வெளிப்பட்டது. “கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப் போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே” என்றார்கள் (மல்கி. 1:7). இப்படி இவர்கள் பேசினது கர்த்தருடைய நாமத்தை அசட்டை செய்வதாயிருந்தது. உள்ளத்தின் நிறைவினால் வாய் பேசுமல்லவா! வீணான வார்த்தைகளை குறித்தும் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளைக் குறித்தும் நாம் கணக்கு கொடுக்கவேண்டும் என்பதை நாம் அறியவேண்டும். “நீங்கள் எனக்கு விரோதமாய் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது” (மல்கி.3:13) என்று கர்த்தர் அந்த ஜனங்களைக் குறித்துச் சொன்னார். “தேவனை சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளை கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்? இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்; தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரீட்சை பார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல்கி.3:14,15). கர்த்தரையும் கர்த்தருடைய செயல்களையும் அவரது நியாயத் தீர்ப்புகளையும் தவறாக மதிப்பிட்டு தவறானவைகளை பேசி, தங்களது விசுவாச பெல வீனங்களை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

பிரியமானவர்களே! இவ்வருடத்தில் நாமும் கூட தவறாக பேசவில்லையா? தேவ தீர்ப்புகளைத் தவறாக கணித்து மதிப்பிட்டு முறுமுறுத்து புலம்பவில்லையா? தேவனை சேவிப்பதினால் என்ன லாபம் என்று கேள்வி கேட்கவில்லையா? அப்படி கேட்கும் சகோதர, சகோதரியே! கர்த்தருடைய செயல்கள் நியாயத்தீர்ப்புகள் தவறாதவைகள், அவரைப் பற்றி தியானிப்பவர்களுக்கு ஒரு ஞாபகபுஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டுள்ளது. அவருடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பேசினதை அவர் கவனிப்பார். நாம் அவருக்கு முன்பாக செம்மையாய் நடப்போமானால் நிச்சயமாய் நன்மையை தருவார். ஆதலால் தவறான வார்த்தைகள் பேசுவதற்கு தேவ பெலத்துடன் முற்றுபுள்ளி வைப்போமாக.

இரண்டாவதாக தவறான முறையில் காணிக்கை கொடுப்பதினாலும் கர்த்தரை அசட்டை பண்ணினார்கள். மல்கியா 1:8 ஆம் வசனம், “நீங்கள் கால் ஊனமானதைப் பலியிடக் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்”.

பலி செலுத்தும்போதும் காணிக்கை செலுத்தும்போதும் குறையில்லாததை பெலவீனம் இல்லாததை, நசல் இல்லாததை, படைக்க வேண்டும். இதுதான் தேவனுடைய நீதி. இருப்பினும் இவர்களோ நல்லதை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள். நசல் கொண்டதையும் பெலவீனத்தையும் கர்த்தருடைய சமுகத்தில் படைத்தார்கள். நாம் இப்படிப்பட்டதை உலக எஜமானனுக்கு செலுத்துவோமா? இல்லவே இல்லை. ஆனால் கர்த்தருக்கு செலுத்துகிறோம்.

நாம் தவறான முறையில் கொடுக்கும் காணிக்கையினாலும் அவரை அசட்டைப் பண்ணுகிறோம். எல்லாவற்றிலும் கர்த்தருக்கு முதலிடம் கொடுப்பதுபோல கர்த்தருக்கு காணிக்கை கொடுப்பதிலும் முதலிடம் வைக்கவேண்டும். நலமானதை, கொழுத்ததை தேவனுக்கு படைக்கவேண்டும். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டு வந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார் (ஆதி.4:4). காயீன் இவ்வாறு செய்யவில்லை. அருமையான தேவனுடைய பிள்ளைகளே, இதுபோல நாம் எவ்வாறு காணிக்கை செலுத்தினோம் என்பதை ஆராய்ந்துப் பார்ப்போமா? வருகிற புதிய ஆண்டிலே தேவனுக்கு நாம் சிறப்பானவைகளையும் உயர்ந்தவைகளையும் அவருக்கு காணிக்கையாகப் படைக்க தீர்மானிப்போம்.

மூன்றாவது தவறான உறவுகளாலும் கர்த்தரை அசட்டைப் பண்ணினார்கள். அன்பான சகோதர, சகோதரிகளே, மல்கியா 2:10ன்படி “அவனவன் தன்தன் சகோதரனுக்குத் துரோகம் பண்ணுவானேன்?” எல்லா ஜனங்களையும் அவர் படைத்ததினாலே அவரே எல்லாருக்கும் பிதாவாயிருக்கிறார். நமது சகோதரர்களுக்கு நாம் துரோகம் பண்ணுவதும் தவறான உறவுகளையே காட்டுகிறது. உறவுகள் நமது அர்ப்பணிப்பையும் விசுவாசத்தையும் பிரதிபலிக்கிறவையாகும். இன்று விசுவாச துரோகம், அன்பின் துரோகம், உபதேச துரோகமெல்லாம் மக்கள் மத்தியிலே மலிந்து போய் காணப்படுகின்றது. மனித உறவுகளை சரிப்படுத்த கிறிஸ்துவின் பலத்தை நாடுவோம். மல்கியா 2:14ல் “உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே” என்கிறார் கர்த்தர். தேவ சந்நிதானத்திலே உடன்படிக்கையை உடைத்துப் போட்டு வாழ்க்கைத் துணையைத் தள்ளி விடுவதை கொடுமை என்றும், அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்றும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (வச.16). இந்த ஆண்டில் நமக்கும் பிறருக்கும் உள்ள உறவை பாதுகாப்பதில் கிறிஸ்துவின் கிருபையையும் ஆவியானவரின் ஒத்தாசையையும் வேதவசனத்தின் வெளிச்சத்தையும் நாடி உள்ளோமா? தவறான உறவுகள், தகாத உறவுகள், உடைந்த உறவுகள், உடைக்கப்பட்ட உறவுகள் காத்தரை அசட்டை பண்ணும் என்பதை மறந்து விடக்கூடாது. ஆகவே, வரும் ஆண்டிலே பிறரோடு சரியான உறவை வைத்துக்கொள்ள தீர்மானம் செய்வோம்.

ஒரு புதிய ஆண்டிற்குள் நுழையப் போகிறோம். நமது தவறான வார்த்தைகளிலிருந்தும், தவறான முறையில் கொடுப்பதிலிருந்தும், தவறான உறவுகளிலிருந்தும் மனந்திரும்புவோம். அப்பொழுது தேவன் நம்மை ஆசீர்வாதமான புத்தாண்டை காணச்செய்வார். உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள்!