தற்புகழ்ச்சி வேண்டாம்!
தியானம்: 2026 ஜனவரி 30 வெள்ளி | வேத வாசிப்பு: மத்தேயு 12:9-16

தம்மைப் பிரசித்தம் பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார் (மத்தேயு 12:16).
ஒரு மண்டபத்திலே ஏராளமான மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். “மாணிக்கம் ஐயா, மாணிக்கம்தான். அவர் நல்லாயிருக்கணும்” என்ற பேச்சுத்தான் மண்டபத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒரு இளைஞன் இவர் யார் என்று அறியும் ஆவலோடு உள்ளே போனான். அங்கே, “ஒரு வாய் சோற்றுக்கு இந்த ஊர்மக்கள் என்னிடம் எப்படியாய் ஏமாந்து விட்டார்கள். இன்றைக்கு நானே பெரியவன். இதைத்தான் எதிர்பார்த்திருந்தேன்” என்று மாணிக்கம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆம், மக்கள் ஒருவேளை பசி ஆறவேண்டும் என்று அல்ல; தனது பெயர் பிரசித்தமாக வேண்டும் என்ற நோக்கத்திலேயே மாணிக்கம் இந்தக் காரியத்தைச் செய்தார். இப்படியே தமது பெயர் பிரபல்யமாகவேண்டும் என்பதற்காகவே பல குறுக்கு வழிகளைக் கையாளுகிற அநேகர் உண்டு. இது இயேசு போதித்த வழி அல்ல.
நான்குபேர் போற்றவேண்டுமென்று யார்தான் விரும்பமாட்டார்கள்? அதே சமயம் போற்றக்கூடாது என்பதற்காக நன்மை செய்யாமல் இருக்கலாமா? அல்லது தீமைதான் செய்யலாமா? ஆனால், ஆண்டவருடைய வாழ்க்கை வித்தியாசமானதாயிருந்தது. அவர் மக்களுக்குச் செய்த நன்மைகளை வேறு யார் செய்வார்? ஆனால், எந்தவிதத்திலும் தம்முடைய பெயர் பிரபல்யம் அடைவதை இயேசு விரும்பவில்லை. ஜெபஆலயத்தில் இருந்த சூம்பிய கையையுடையவனுக்கு இயேசு சுகம் கொடுத்ததைக் கேள்வியுற்று அநேகர் அவரைப் பின்பற்றி வந்தார்கள். அவர்களுடைய தேவைகளைச் சந்தித்த இயேசுவானவர், தம்மைப் பிரசித்தம் பண்ணாதபடி கண்டிப்பாகக் கட்டளையிட்டார். மாற்கு இந்த சம்பவத்தை அசுத்த ஆவிகளும், இவரைத் தேவகுமாரன் என்று சத்தமிட்டுச் சொன்னபோது, இயேசு அசுத்த ஆவிகளுக்குக்கூட தம்மை பிரசித்தம் பண்ண வேண்டாமென்று கட்டளையிட்டார் என்பதைக் குறிப்பிட்டு எழுதுகின்றார். ஏன்? மக்களும், பிசாசும் நினைத்திருந்தபடி அல்ல; தேவ ராஜ்யத்தை ஸ்தாபிக்கவும், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவுமே கிறிஸ்து உலகிற்கு வந்தார். ஒரு ராஜ்யத்தை அமைக்கவோ மக்களை ஆளவோ அல்ல; அவர்களை தேவ ராஜ்யத்தின் புத்திரராக ஆக்கவென்றே அவர் வந்தார். எல்லாவற்றிலும் தாம் அல்ல; பிதாவே மகிமைப்படவேண்டும் என்பதில் இயேசு கவனமாக இருந்தார்.
இன்று அநேகர் இயேசுவின் நாமத்தைச் சொல்லி தமக்குக் கனத்தைச் சம்பாதிப்பதைக் காண்கிறோம். அது தவறு. நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நமக்கல்ல, நன்மை செய்ய நம்மை அழைத்த தேவனுக்கே மகிமையைக் கொண்டுவரவேண்டும். நமக்குரிய கனம் தேவனிடமிருந்து வரட்டும். அதுதான் நமக்கு நல்லது. தற்புகழ்ச்சியை நாடாமல் எப்போதும் நான் அப்பிரயோஜனமுள்ள ஊழியன் என்று சொல்லக் கற்றுக்கொள்வோமாக!
ஜெபம்: தேவனே, உமது நாமத்தினாலே நாங்கள் செய்யும் நற்காரியங்களினால் எல்லா நாமத்திற்கும் மேலான உம்முடைய பரிசுத்த நாமம் மாத்திரம் கனப்படுத்தப்பட எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.