மோசேயின் சாந்தகுணம்
தியானம்: 2026 பிப்ரவரி 5 வியாழன் | வேத வாசிப்பு: எண்ணாகமம் 12:1-16

… நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார் (எண்ணாகமம் 12:8).
மோசேயைப்போல சாந்தகுணம் உள்ளவன் பூமியிலே இல்லையென்று வேதாகமம் சொல்லுகிறது (வச.3). ஆனால் இன்று நாம் வாழும் உலகத்தில் சாந்தகுணமுள்ளவர்களுக்கு, குட்டக் குட்டக் குனிகிறவன், பேசத்தெரியாதவன் என்று பல பெயர்களை சூட்டுவதுண்டு. ஆனால் கர்த்தருக்குள் உண்மையாய் இருக்கிறவன் சாந்தகுணம் உள்ளவனாய் இருந்தால் அவனுக்காகக் கர்த்தர் வந்து நிற்பார் என்பதுதான் இந்தப்பகுதியில் நாம் காணும் சத்தியமாகும்.
இங்கு ஆரோனும், மிரியாமும் மோசேக்கு விரோதமாகப் பேசினார்கள். எத்தியோப்பிய ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியதால் அவர்கள் இவ்விதமாகப் பேசுகிறார்கள். ஏன் தேவன் மோசேயைக்கொண்டு மாத்திரம்தான் பேசுவாரோ, ஏன் எங்களைக்கொண்டு பேச மாட்டாரோ என்று பேசத்துணிந்தார்கள். அங்கே மோசே சாந்தகுணமுள்ளவனாக நின்றபோது, அவனுக்காக யுத்தம் செய்ய தேவன் அங்கே வந்து நின்றார். “என் தாசனாகிய மோசே என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்” என்று கர்த்தர் சொன்னதைக் கவனியுங்கள். நாம் ஜெபித்தால் கர்த்தர் வந்து நிற்கமாட்டார். நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அதுதான் முக்கியம். “என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன” என்றார் கர்த்தர். மோசே தன் சகோதரர்களோடு சண்டை போடவில்லை. தான் செய்தது சரிதான் என்று நியாயப்படுத்தவும் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டபோதும் அவன் சாந்தமாய் நின்றான். அவனுக்காக கர்த்தர் அவர்களை விசாரித்தார். நாம் கர்த்தருக்குள் உண்மையாய் இருக்கும்போது, நமக்கு விரோதமாய் எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் என்பது கர்த்தருடைய வாக்கு. கர்த்தர் நமக்காக நிற்பார்.
அவ்வாறே, கர்த்தருடைய ஊழியக்காரருக்கு விரோதமாக நாம் பேசுவதைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருப்போம். அவர்களை அழைத்தவர் கர்த்தர்; அவர்கள் தவறிடும் போதும் அதை அவர் நியாயம் விசாரிப்பார். நாம் தேவ காரியத்தில் அநாவசியமாய் தலையிட வேண்டாமே. நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராய் இருக்கிறதுபோல நாமும் நமது நடக்கைகள் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாய் இருக்கப் பிரயாசப்படுவோம். மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று கைகாட்டுவதற்கு முன்பதாக நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். அன்று தேவன் மிரியாமைத் தண்டித்தார். அவளது செயல்காரணமாக. பின்பு மோசே, மிரியா முக்காக தேவனிடத்தில் வேண்டிக்கொண்டான். இது அவனது சாந்தகுணத்தைப் பிரதிபலிக்கின்ற உன்னதமான செயல் அல்லவா!
ஜெபம்: அன்புள்ள ஆண்டவரே, மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று கைகாட்டும் முன்பதாக நாங்கள் எங்களை நிதானித்து அறிந்துகொள்ள கிருபை தாரும். ஆமென்.