தனிமை ஒருபோதும் இல்லை!
அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2013)
– Dr.உட்ரோ குரோல்
அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ்
வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி,
அதின்மேல் எண்ணெய் வார்த்து,…. (ஆதியாகமம் 28 : 18)
இஸ்ரவேலின் கோத்திர பிதாவாகிய யாக்கோபு தமது வாழ்வில் தனித்திருந்தது அபூர்வம். அவருடைய வாழ்க்கை மற்றவர்களுடன் பிணைந்தே அமைந்திருந்தது. அவருக்கு நான்கு மனைவிகள், பன்னிரண்டு பிள்ளைகள். பிறப்பிலும் அவர் தனிமையைக் காணவில்லை. இரட்டைப் பிள்ளைகளுள் ஒருவராகப் பிறந்தார். எனவே அவரது வாழ்க்கை மற்றவர்களுடன் பின்னிப் பிணைவதாகவே தேவனால் திட்டமிடப்பட்டிருந்தது. மரித்த பின்னரும் அவருடைய தாத்தா, பாட்டி, பெற்றோர், மனைவி லேயாள் ஆகியோருடைய கல்லறையிலேயே அடக்கம்பண்ணப்பட்டார்.
ஆனால், ஒரு நேரத்தில் அவர் தனித்திருந்தார். தமது சகோதரனாகிய ஏசாவை ஏமாற்றி சேஷ்ட புத்திரபாகத்தை வாங்கிய பின்னர் தமது தகப்பனாரின் ஆசீர்வாதத்தையும் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டார். தமக்கு கானானியப் பெண்களில் மனைவியைத் தேடாமல், தூர இடமான பதான் அராமில் தன் தாயாரின் சகோதரனான லாபானின் குமாரத்திகளை மணக்க எண்ணினார். இது தம்மைக் கொல்ல நினைத்த சகோதரனின் கோபத்துக்குத் தப்பியோட ஒரு நல்ல காரணமாக அமைந்துவிட்டது.
பெற்றோரைத் துறந்து, வீட்டை மறந்து, பழிவாங்கப்படுதலுக்குத் தப்பியோடிய இந்த நாடோடி பெயெர் செபாவின் வடதிசையிலிருந்து ஆரானுக்குப் பயணம் செய்தார். லூஸ் என்ற ஊரின் அருகாமையில் வந்த பொழுது தனது கடந்தகால வாழ்வினைத் திரும்பிப்பார்த்தார். ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமானவர் தனக்கும் தேவனாயிருப்பாரா? என்று எண்ணியவர் தனிமையை உணர்ந்தார். தனது சகோதரர் தன்னைத் துரத்திவருவது போன்ற பயம் அவரைப் பிடித்தது. ஒவ்வொரு மரத்தின் பின்னரும் பாறைகளின் பின்னரும் ஏசாவின் உருவம் இருப்பதைப் போன்ற பிரமை அவருக்கு உண்டானது. இறுதியில் களைப்புற்றவராய் ஒரு கல்லை தலைக்கு வைத்து உறங்கி விட்டார்.
இரவிலே யாக்கோபு ஒரு கனவினைக் கண்டார். அது சாதாரணக் கனவு அல்ல. தேவாதி தேவனிட மிருந்து வந்த வெளிப்பாடு. “இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவ தூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர் களுமாய் இருந்தார்கள்” (ஆதி.28:12).
அந்த கனவின் ஆச்சரியமான பகுதி என்னவென்றால், “அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப் போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்” (ஆதி.28:13-15).
கர்த்தருடைய வார்த்தைகள் யாக்கோபின் செவிகளுக்கு இசையாய் ஒலித்தது. அதிகாலையிலே யாக்கோபு எழுந்து தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி அதின் மேல் எண்ணெய் வார்த்து அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டார்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. இந்தக் கனவுக் காட்சி யாக்கோபின் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. தேவனைப் பற்றிய புதிய மனப்பான்மையைக் கொண்டவரானார். யேகோவா தேவன் அறியப்படாதவரோ, தூரத்தில் இருப்பவரோ அல்ல. அந்த தனிமையான இடத்திலும் தன்னோடு இருப்பவர் என்பதை அறிந்துகொண்டார். பரலோகத்தில் வாசம்பண்ணும் தேவனுக்கும், மண்ணுலகில் வாசம்பண்ணும் மனிதர்களுக்கும் ஒரு தொடர்பு சாதனம் உருவாகியிருப்பதை அறிந்து மகிழ்ந்தார்.
யாக்கோபுக்கு வெளிப்படுத்தப்பட்ட இந்த ஏணி இயேசுகிறிஸ்துவைக் குறிக்கிறது. அவரே பரலோகத்தையும் பூலோகத்தையும் தொடர்பு கொள்ளச் செய்யும் ஏணி. இவர் மூலமாகவே நாமும் இரட்சிக்கப்பட்டு தேவனிடம் சேரமுடியும். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே” (1தீமோ.2:5). ஆம், இயேசுகிறிஸ்துவே நமது மத்தியஸ்தர், ஜெபஏணி மற்றும் தூதுவர்.
மனிதர்களுடன் தேவன் தொடர்பு கொள்ளுவார் என்ற உண்மை யாக்கோபுக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்த அறிவு அவரது தனிமையுணர்வை விரட்டிவிட்டது. யாக்கோபுக்கு கர்த்தர் கூறின “இதோ, நான் உன்னோடே இருக்கிறேன்” என்ற வாக்குறுதி தேவனுடைய சுதந்திரர்கள் யாவருக்கும் உரியதாகும். குமாரனாகிய இயேசுகிறிஸ்துவும். “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார். ஆம், நாம் தனித்து விடப்படவில்லை. இம்மானுவேலாகிய தேவன் நம்மோடிருக்கிறார்.
அதிகாலைப் பாடல்:
துன்பத்தின் பள்ளத்தாக்கிலே நான் சோர்ந்து நடக்கும்போது
என் இரட்சகர் எனது பாரசிலுவையைத் தூக்க உதவுவார்;
காரிருள் என்னைச் சூழ்ந்து, உலக கவலைகள் நெருக்கினாலும்
என் இரட்சகர் என்னோடிருக்கிறார் என்று நம்புவேனே.