அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2013)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(8) பிரெஞ்சு மொழிபெயர்ப்பு
20 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் தேசத்து சீர்திருத்த சபைகளின் முயற்சியினால் ஒஸ்ட்டர்வால்ட் என்பவரின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேதாகமம் திருத்தப்பட்டு, 1910 இல் பிரான்ஸ் வேதாகமச் சங்கத்தினால் பாரீசில் பிரசுரிக்கப்பட்டது. பிற்காலத்தில் இவ்வேதாகமம் பல தடவைகள் திருத்தப்பட்டது. 1929 இல் நவீன பிரெஞ்சு மொழி வேதாகமம் வெளியிடப்பட்டது. 1947 இல் இன்னுமொரு புதிய பிரெஞ்சு மொழி பெயர்ப்பு வேதாகமமும் வெளி வந்துள்ளது. அதேசமயம் ரோமன் கத்தோலிக்க சபையினரும் பல பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேதாகமங்களை வெளியிட்டுள்ளனர்.
(9) ஸ்பானிய மொழிபெயர்ப்பு
கி.பி. 13 ஆம் நூற்றாண்டளவில் ஸ்பானிய மொழியிலும் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. 1233 இல், டாரகோனா எனுமிடத்தில், எவரும் தங்களது வீடுகளில் தம் சொந்த மொழியில் பழைய ஏற்பாட்டை வைத்திருக்கக் கூடாது எனும் அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அச் சமயம், மக்கள் மத்தியில் பழைய ஏற்பாட்டின் ஸ்பானிய மொழி பெயர்ப்புப் பிரதிகள் இருந்தமையே இத்தகைய ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணமாகும். எனினும் 13ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பத்தாவது அல்பொன்சோ அரசனானபோது, முன்னைய அரசனுடைய காலத்திலிருந்த தடையை நீக்கியதோடு ஜெரோம் என்பவரது லத்தீன் மொழி பெயர்ப்பிலிருந்து ஒரு ஸ்பானிய மொழிபெயர்ப்பு வேதாகமத்தைத் தயாரிக்கும்படி கட்டளையிட்டான். அதேசமயம், சில யூதமதபோதகர்களும் எபிரேய மொழியிலிருந்து ஸ்பானிய மொழிக்கு வேதாகமத்தின் பல பகுதிகளை மொழிபெயர்த்துள்ளனர். யூதர்களினால் மொழி பெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாடு 1553 இல் திருத்தப்பட்டு அச்சிடப்பட்டது. இதற்கும் முன்பே 1543 இல் பிரான்சிஸ்கோ டி என்ஸினாஸ் என்பவரினால் புதிய ஏற்பாடு கிரேக்கத்திலிருந்து ஸ்பானிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. எனினும் இவரது மொழி பெயர்ப்பு பிழையான போதகங்களுக்கு வழிவகுக்கக்கூடிய விதமாக அமைந்திருப்பதாகக் கூறப்பட்டதோடு, அச்சிடப்பட்ட பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மொழி பெயர்ப்பாளரும் சிறையிலிடப்பட்டார். இவரது புதிய ஏற்பாட்டின் ஒருசில பிரதிகள் மட்டுமே தற்போது உள்ளன.
1556இல் இன்னுமொரு ஸ்பானிய மொழிபெயர்ப்புப் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இவ்வேதாகமம் ஜுவான் பெரஸ் என்பவரினால் கிரேக்கத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இது பற்றி ரோம சபை விசாரணை நடத்துமென்பதனால் பெரஸ் ஜெனீவாவுக்குத் தப்பிச் சென்றார். இதனால் அங்கேயே அவரது வேதாகமம் பிரசுரிக்கப்பட்டு ஜுலியன் ஹெர்னான்டஸ் என்பவரினால் ஸ்பெயினுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இவர் அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்பட வேண்டியதாயிற்று. கசியோடோரா ரெய்னா எனும் ஸ்பானிய சபை சீர்திருத்தவாதி 1557இல் மூலமொழிகளில் இருந்து ஸ்பானிய மொழிக்கு வேதாகமத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினார். இரு ஏற்பாடுகளையும் கொண்ட இவரது ஸ்பானிய மொழிபெயர்ப்பு வேதாகமம் 1569 இல் பேசல் என்னுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது. இவ்வேதாகமம் சீர்திருத்த இயக்கத்தின் செல்வாக்கிற்குட்பட்டு, ஸ்பெயினிலிருந்து ஓடிச்சென்ற சிப்ரியானோ வலோரா என்பவரினால் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. இவரது ஸ்பானிய மொழி புதிய ஏற்பாடு 1596 இல் லண்டனிலும் பழைய ஏற்பாடு 1602 இல் அம்ஸ்டர் டாமிலும் பிரசுரிக்கப்பட்டது.
1793ஆம் ஆண்டுவரை ஸ்பானிய மொழி வேதாகமம் ஸ்பெயினுக்கு வெளியே வேறு நாடுகளிலேயே அச்சிடப்பட்டது. சீகோவியாவின் பிஷப்பாயிருந்த மிகெல் என்பவரினால் லத்தீன் மொழியிலிருந்து ஸ்பானிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் 1793 ஆம் ஆண்டு ஸ்பெயினிலுள்ள வெலன்சியா எனுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது. இதன் திருத்தப்பட்ட பதிப்பு 1794 இற்கும் 1797 இற்கும் இடைப்பட்ட காலத்தில் மெட்ரிட் எனுமிடத்தில் 19 பகுதிகளாக வெளியிடப்பட்டது. 1825இல், மூல மொழிகளுடன் ஒப்பிட்டு திருத்தப்பட்ட ஸ்பானிய மொழிபெயர்ப்பு மெட்ரிட் இல் வெளியிடப்பட்டது. பிற்காலத்தில் இதன் பல பதிப்புகள் வெளிவந்த போதிலும் மிகெல் இன் மொழிபெயர்ப்பின் உபயோகத்தை இதனால் நிறுத்த முடியவில்லை. 1916இல் அமெரிக்க – ஸ்பானிய மக்களது கூட்டு முயற்சியில் ஒரு புதிய ஸ்பானிய மொழிபெயர்ப்பு மெட்ரிட் இல் வெளியிடப்பட்டது. 1944 இல் மூலமொழிகளிலிருந்து ஸ்பானிய மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமம் மெட்ரிட் இல் ரோமன் கத்தோலிக்க சபையினரால் வெளியிடப்பட்டது. 1947 இலும் இதே விதமாக இன்னுமொரு புதிய ஸ்பானிய மொழிபெயர்ப்பு வேதாகமம் வெளிவந்தது.
(10) நோர்வேஜிய மொழி பெயர்ப்பு
1814இல் அரசியல் ரீதியாக நோர்வே டென்மார்க்கிலிருந்து பிரிவடைந்ததின் பின்னர், நோர்வே நாட்டு மக்களது மொழியும் வளர்ச்சியடைந்து புதிய நோர்வேஜிய மொழி உருவாகியது. இதனால் புதிய நோர்வேஜிய மொழியிலும் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட வேண்டியதாயிற்று. ஜேக்கப் வின்ட்பேர்க் என்பவர் 1853 இல் பழைய ஏற்பாட்டையும் 1856 இல் புதிய ஏற்பாட்டையும் புதிய நோர்வேஜிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர் ஒரு சில புதிய நோர்வேஜிய வேத மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. பல வேதபண்டிதர்களைக் கொண்ட குழு 1889 இல் புதிய ஏற்பாட்டையும், 1921 இல் பழைய ஏற்பாட்டையும் புதிய நோர்வேஜிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது. 1931 இல் வெளிவந்த புதிய நோர்வேஜிய மொழிபெயர்ப்பு பழைய ஏற்பாடு சபைகளில் வாசிப்பதற்கான அங்கீகாரம் பெற்றிருந்தது. 1938 இல் இன்டர்போ என்பவரால் திருத்தி மொழிபெயர்க்கப்பட்ட புதிய நோர்வேஜிய மொழி வேதாகமத்தை நோர்வேஜிய வேதாகமச் சங்கம் வெளியிட்டது.
(11) ஐஸ்லாந்திய மொழிபெயர்ப்பு
13ஆம் நூற்றாண்டிலேயே வேதாகமத்தின் ஒருசில பகுதிகள் ஐஸ்லாந்திய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1540 இல் டென்மார்க்கிலுள்ள ரொஸ்கில்டி எனுமிடத்தில் ஐஸ்லாந்திய மொழி புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. கொட்ஸ்கால்க்ஸன் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்ட இவ்வேதாகமம் 20 ஆம் நூற்றாண்டுவரை பல தடவைகள் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதேபோல 1584 இல் ஹொலா எனுமிடத்தில் வெளியிடப்பட்ட இன்னுமொரு ஐஸ்லாந்திய மொழிபெயர்ப்பிலும் பல திருத்தப் பதிப்புகள் வெளிவந்துள்ளன. இது ஹொலா எனுமிடத்தில் பிஷப்பாக இருந்த தொர்லாக்சன் என்பவரது முயற்சியினால் தயாரிக்கப்பட்ட வேதாகமமாகும். 1908இல் இவ்வேதாகமம் திருத்தி மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
(12) சுவீடிஷ் மொழிபெயர்ப்பு
15 ஆம் நூற்றாண்டளவில் வேதாகமத்தின் சில பகுதிகள் சுவீடிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. 1526 இல் புதிய ஏற்பாடு ஸ்டொக்ஹொல்ம் எனுமிடத்தில் சுவீடிஸ் மொழியில் வெளியிடப் பட்டது. குஸ்டாவஸ் வாச எனும் அரசனது உத்தரவின்படி ஓலஸ் பெட்ரி என்பவர், மாட்டின் லூத்தரது ஜெர்மன் மொழிபெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு இச் சுவீடிஷ் மொழிபெயர்ப்பு வேதாகமத்தைத் தயாரித்தார். 1541 இல் முழு வேதாகமமும் சுவீடிஷ் மொழியில் வெளியிடப்பட்டது. மாட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழி பெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட இவ் வேதாகமம் லொரென்ஷஸ் பெட்ரி என்பவரது முயற்சியினால் உருவானதாகும். 1618இல் இவ்வேதாகமத் தின் திருத்தப்பதிப்பு வெளிவந்தது. 1703இல், இது மறுபடியுமாகத் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. மூலமொழியை ஆதாரமாய்க் கொண்டு ஒரு புதிய சுவீடிஷ் மொழி வேதாகமத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மெலின் என்பவருடைய மொழிபெயர்ப்பு ஆறு பகுதிகளாக 1858இற்கும் 1865இற்கும் இடைப்பட்ட காலத்தில் லுன்ட் எனுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் பலர் வேதாகமத்தை சுவீடிஷ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.
1917 இல் லூத்தரன் சபையின் அங்கீகாரத்தோடு ஒரு சுவீடிஷ் வேதாகமம் வெளிவந்தது.