பொறுப்பை பொறுப்பாய் ஒப்படைத்தல்!
தியானம்: 2026 பிப்ரவரி 12 வியாழன் | வேத வாசிப்பு: எண்ணாகமம்; 27:12-20

சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும் படிக்கும்,… கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்த வேண்டும் என்றார் (எண்ணா.27:17).
இன்று உலகப்பிரகாரமான அலுவலகங்களிலும் சரி, ஆவிக்குரிய சபைகளிலும் சரி பொறுப்பை உதாசீனம் செய்வோரும், பொறுப்பை மற்றவர்களுக்குக் கொடுக்கத் தயங்குவோரும், எப்போதும் தாங்களே பொறுப்புக்களைச் செய்ய வேண்டும் என்ற நப்பாசையிலும் இருப்போரையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இங்கே தேவன், மோசேயும் ஆரோனும் தமது கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், தங்கள் இஷ்டத்துக்கு நடந்துகொண்டதால், அவர்களுக்குக் கானானுக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை மறுத்துவிட்டார். இப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுத்த தேசத்தைப் பார். அதன் பின் ஆரோன் அவன் ஜனத்தண்டை சேர்க்கப்பட்டது போல நீயும் சேர்க்கப்படுவாய்” என்கிறார். இந்த இடத்தில்தான் மோசே தனது பொறுப்பில் பொறுப்பாளியாக நிற்கிறார். தனக்குக் கானானுக்குள் பிரவேசிப்பதை தேவன் மறுத்துவிட்டார் என்றோ, அல்லது அதற்குள் பிரவேசிக்காமல் இங்கிருந்து பார்க்கவேண்டியதாயிற்றே என்றோ, அல்லது தான் மரிக்கப் போகிறேன் என்றோ அவர் கவலைப்படவில்லை. மாறாக, தான் வழி நடத்தி வந்த மக்கள் இனி மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல ஆவார்களோ என்றே கவலைப்பட்டார். தனது பணியை முன்னெடுத்துச் செல்ல இன்னுமொருவனை நியமிக்க வேண்டும் என்று தேவனிடத்தில் முறையிடுவதைக் காண்கிறோம். இந்த இடத்திலும் மோசே தனக்காகக் கவலைப்படாமல், இஸ்ரவேல் ஜனங்களுக்காகவே கவலைப்படுவதைக் காண்கிறோம். இது ஒரு நல்ல தலைவனுக்கான குணாதிசயம். தனது தலைமைத்துவம் முடிந்தாலும், ஜனங்கள் தொடர்ந்தும் இன்னுமொரு தலைவனால் சரிவர நடத்தப்படவேண்டும் என்று முழு மனதோடும் வேண்டி நிற்கும் தன்மை மதிக்கத்தக்கது.
இன்று நாம் காணும் தலைவர்களில் பலர், தனக்குப் பின் இன்னுமொருவன் தன்னைவிட அதிகமாய் செய்துவிடுவானோ என்ற பயத்தில், தங்கள் பொறுப்புக்களையும் சரிவர மற்றவரிடம் ஒப்படைக்கத் தயங்குவதுண்டு. எப்பொழுதும் தாம்தான் தலைமைத்துவத்தில் இருக்கவேண்டும், தன்னைப்போல இன்னுமொருவரால் எதையும் செய்யமுடியாது என்ற பெருமையான எண்ணங்களால் ஆளப்படுபவர்களும் உண்டு. பிரியமானவர்களே, தேவன் நமது கரங்களில் தந்த பொறுப்பை அவருக்காக முழுமனதோடு செய்ய முற்படுவோம். அந்தப் பொறுப்பை தேவனே இன்னுமொருவரிடம் ஒப்படைக்க எண்ணும்போது, சந்தோஷமாய் அதை விட்டுக்கொடுக்க முன்வருவோம். நான் நட்டேன் அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான். தேவனே விளையச் செய்தார் (1கொரி.3:6).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, நீர் எங்களை நம்பி தந்திருக்கும் பொறுப்புகளை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்கிறவர்களாய் காணப்பட எங்களுக்குதவும். ஆமென்.