அதிகாலையில் தேவனின் மகிமை
தியானம்: 2026 மே 9 சனி | வேத வாசிப்பு: யாத்திராகமம் 16:6-8

விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள் (யாத்திராகமம் 16:7).
ஏன்தான் இந்த நாள் விடிந்ததோ என்று சில நாட்களில் நாம் வருத்தப்படுவதுண்டு. அன்று காரியங்கள் எல்லாம் தலைகீழாகவே நடப்பது போலிருக்கும். நல்ல உடையில் காப்பி சிந்திவிடும்; வேலைசெய்து கொண்டிருக்கும் கணினி செயலற்றுவிடும். கட்டணம் கட்டுவதற்குக் காலக்கெடு முடிந்துவிட்டதாக அஞ்சலில் செய்திவரும். பள்ளிக்குச் சென்ற பிள்ளை விளையாட்டில் கை ஒடிந்தவனாக வீடு திரும்பலாம். இப்படிப்பட்ட வேளைகளில் ஒரு மூலையில் அமர்ந்து ஓவென்று அழத்தோன்றும்.
இஸ்ரவேலரும் இதுபோன்ற இன்னலை அனுபவித்தார்கள். வெப்பமான ஓரிடம், பயண களைப்பு, பசி, இவைகளால் தவித்து நின்றார்கள். ஒருவேளை எகிப்திலேயே இருந்திருக்கலாமோ என்றுகூட எண்ணினார்கள். அவர்கள் நினைத்ததைவிட பிரயாணம் மிகவும் கடினமாயிருந்தது. இச்சோதனைகளின் மத்தியிலும் தேவன் இரு காரியங்களைச் செய்தார். அவர்களது சரீரத்துக்குத் தேவையான மன்னாவைக் கொடுத்தார். மேலும் அவர்களது ஆத்தும தேவைக்காக அதிகாலையில் தம்முடைய மகிமையைக் காண்பிப்பதாக வாக்களித்தார். ஒரு நாளின் சவாலைச் சந்திப்பதற்கு சரீர சுகத்துடன் ஆத்தும நன்மைகளும் தேவைப்படுகிறது. அத்தேவைகளைச் சந்திப்பதற்கு தேவன் தெரிந்துகொண்ட நேரம் அதிகாலை வேளையாகும்.
ஏமாற்றங்கள் அதிகமாகிறபோதும், தொல்லைகள் பெருகும்போதும், அவைகள் நமது தேவனின் கிருபைகளை நோக்கும் நேரங்களாகக் காணப்படுகின்றன. ஆனால் அந்த நாளை ஆரம்பிக்கு முன்னரே நாம் தேவ சமுகத்திற்குச் சென்றிருந்தோமானால், என்னதான் தொல்லைகள் நேரிட்டாலும் கூட, அந்த நாள் நிச்சயமாகவே நன்நாளாகவே இருந்திருக்கும். ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கும்போது, அதிகாலையிலேயே தேவனுடைய பாதத்தில் காத்திருந்து ஆரம்பித்தோமானால் அன்று எந்த சூழ்நிலையையும் நாம் சந்திக்கத் தேவையான பெலத்தைத் தந்து, கர்த்தர் நம்மை ஆயத்தம் செய்வது உறுதி. அப்பெலத்துடன் நாமும் முன்னேறிச் செல்லலாம். காலையில் வழக்கத்திற்கு மாறாக ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்திருந்து அந்த நேரத்தை வேதத்தை வாசிப்பதிலும் ஜெபிப்பதிலும் நாம் செலவிடுவோமானால் நாம் நினைப்பதற்கும் மேலான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வது நிச்சயம். நாம் அதிகாலையில் முதலாவது தேவனைத் தேடும்போது அன்றைய காரியங்கள் எல்லாவற்றிலும் அவர் முதல்வராக இருப்பார். ஒருநாளை ஆரம்பிக்கும் விதமே அந்நாளை முடிக்கும் விதத்தை நிர்ணயிக்கிறது என்பதே யதார்த்தம்.
ஜெபம்: அன்பின் இயேசுவே, அதிகாலையில் இருட்டோடே எழுந்து ஓரிடத்திற்கு போய் ஜெபித்தீரே, நாங்களும் அவ்விதமாகவே அதிகாலையில் உம்மைத் தேட எங்களுக்கு உமது பெலனைத் தாரும். ஆமென்.