தேவனுக்குக் கீழ்ப்படிதல்

அதிகாலை வேளையில்… (மார்ச்-ஏப்ரல் 2013)
Dr.உட்ரோ குரோல்

அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப்
போதகம்பண்ணினார்கள்.  (அப்போஸ்தலர் 5:21)

கிரேக்க புராணத்தில் ஒரு பாரம் பரிய கதை உண்டு. கொந்தளிக்கும் கடலில் வயதான ஒரு மாலுமி தனது படகைச் செலுத்திக்கொண்டிருந்தார். அவரால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டபொழுது, அவர் “நெப்டியூன் கடவுளே, நீங்கள் விரும்பினால் என்னை மூழ்கடிக்கலாம் அல்லது என்னைக் காப்பாற்றலாம். எது நேர்ந்தாலும் நான் இந்தப் படகின் திருப்புக் கட்டையை கைவிடமாட்டேன்” என்று விண்ணப்பம் பண்ணினார். ஏற்றவேளையில் இந்த வயதான மாலுமி தன்னுடைய மனஉறுதியை வெளிப்படுத்தினார்.

ஆதித்திருச்சபை வளர்ச்சியடைந்து வந்த காலத்தில் அப்போஸ்தலர்களும் இயேசுவைப் பின்பற்றினவர்களும் அடிக்கடி ரோம அரசுக்கும் யூத மதசங்கத்தினரின் கண்டிப்புக்கும் ஆளானார்கள். அப்.5ஆம் அதிகாரத்தில் அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து விட்டார். மேலும் நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்ற கட்டளையையும் கொடுத்தார்.

விடுதலையடைந்த புதுத்தெம்புடனும் உறுதியுடனும் “அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள்” (வச.21). இயேசுவின் நாமத்தைக் குறித்துப் போதகம் பண்ணுவது தண்டனைக்குரியது என்று அறிந்திருந்தாலும் மனிதர்களுக்கு அஞ்சாமல், தேவனுடைய வார்த்தைக்கு அப்போஸ்தலர்கள் கீழ்ப்படிந்தனர். தேவாலயத்தில் அப்போஸ்தலர்கள் மீண்டும் போதகம் பண்ணுவதை அறிந்த மதத் தலைவர்கள் மூர்க்கமடைந்தனர். தேவாலயத்தைக் காக்கிற சேனைத் தலைவர்களும் பிரதான ஆசாரியர்களும் அவர்களை ஆலோசனை சங்கத்திற்குமுன் நிறுத்தினர். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: “நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம் பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்த வேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்” (அப்.5:28). வழக்கம் போலவே பேதுருவும் மற்ற அப்போஸ் தலரும்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” (அப்.5:29) என்று தைரியமாக முழக்கமிட்டனர். ஆம் அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைக் குறித்து வெட்கப்படாமல் அவருக்காகப் பாடுபடுவதைத் தெரிந்துகொண்டார்கள். கிறிஸ்துவின் நாமத்தை அறிவிக்க கர்த்தருடைய தூதனால் பெற்ற நேரடிக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர்.

மகாபிரடெரிக் அரசர் ஒருமுறை உயர் இராணுவ அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தார். ஹான்ஸ் வான் சீடென் என்பவர் அந்த நாளில் ஆலயத்தின் திருவிருந்துக்குச் செல்ல இருந்ததால் அந்த அழைப்பை நிராகரித்தார். மறுமுறை நடந்த விருந்தின்போது மகாபிரடெரிக்கும் அவரது விருந்தினர்களும் வான் சீடெனின் மத நம்பிக்கையைக் குறித்து பரியாசம்பண்ணி, தேவனுடைய பந்தியை ஏளனம் செய்தனர். இக்கட்டான அந்த சூழ்நிலையில் அந்த அதிகாரி எழுந்துநின்று, “மகாபிரபுவே, உம்மைவிட பேரரசர் ஒருவர் உண்டு. அவருக்கு மரணபரியந்தம் சேவிக்க வாக்குக் கொடுத்துள்ளேன். நான் ஒரு கிறிஸ்தவன். என் தேவனுடைய நாமம் அவமதிக்கப்படும்பொழுது நான் அமைதியாயிருக்க முடியாது. அவரது பண்பு சிறுமைப்படுத்தப் படுவதையும் ஏளனப்படுத்துவதையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் வெளியேற உம்முடைய அனுமதி வேண்டுகிறேன்” என்று பணிவுடன் கூறினார். வான் சீடென் கொலை செய்யப்படுவது உறுதி என்று கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அமைதி காத்தனர். ஆனால் அவர்கள் ஆச்சரியப்படும் விதமாய் மகாபிரடெரிக் வான் சீடென்னின் கரத்தைப் பற்றிக்கொண்டு மன்னிப்பு கோரினார். தொடர்ந்து விருந்தில் பங்கெடுக்கவும் வேண்டிக்கொண்டார். இனி இவ்வாறான ஆன்மீகக் காரியங்களைப் பரியாசம் பண்ணுவதில்லை என்றும் அவருக்கு வாக்களித்தார்.

மனிதருக்குக் கீழ்ப்படிவதைவிட தேவனுக்குக் கீழ்ப்படியவேண்டிய சூழ்நிலைகள் நமக்கும் ஏற்படலாம். அவ்வேளையில் அதன் பலனை அனுபவிக்க நாம் தயாராயிருக்க வேண்டும். ஹான்ஸ் வான் சீடென்னைப் போன்று பரியாசம் பண்ணப்படவோ அப்போஸ்தலர் களைப்போல சிறையிடப்படவும் கூடும். என்ன தண்டனை நமக்குக் கிடைக்கும் என்பது முக்கியமல்ல; நம்முடைய நிலைப்பாடு என்ன என்பதே முக்கியம். கிறிஸ்துவுக்காக துணிந்து நிற்பீர்களா?

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை