அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (மார்ச்-ஏப்ரல் 2013)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(13) பொஹீமிய மொழிபெயர்ப்பு

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பலர் சங்கீதப்புத்தகங்களையும் வேதாகமத்தின் வேறு சில பகுதிகளையும் லத்தீன் மொழியிலிருந்து பொஹீமிய மொழிக்கு மொழிபெயர்த்துள்ளனர். புதிய ஏற்பாடு 1475 இல் பொஹீமிய மொழியில் அச்சிடப்பட்டது. முழு வேதாகமமும் 1488 இல் வெளிவந்தது. 16ஆம் நூற்றாண்டில் இம் மொழிபெயர்ப்பு பல தடவைகள் திருத்தப்பட்டு, பல இடங்களிலும் பிரசுரிக்கப்பட்டது. 1579இற்கும் 1593இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு குழுவினர் மூலமொழி வேதாக மங்களை ஆதாரமாய்க் கொண்டு, பொஹீமிய மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து 6 பகுதிகளாக வெளியிட்டனர். இதுவே புரட்டஸ்தாந்து சபைகளில் அங்கீகாரம் பெற்ற பொஹீமிய வேதாகமமாக இருந்தது.

1620 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரோமன் கத்தோலிக்க சபையைச் சாராத எவரும் பொஹீமியாவிலும் மொரேவியாவிலும் வேதாகமத்தை அச்சிடுவது தடை செய்யப்பட்டதோடு, ரோமன் கத்தோலிக்க சபைக்காக லத்தீன் மொழியிலிருந்து பொஹீமிய மொழிக்கு வேதாகமத்தை மொழி பெயர்க்கும் முயற்சிகளும் ஆரம்பமாகின. இதன் பயனாக 1677 இல் புதிய ஏற்பாடும் 1715 இல் முழுவேதாகமமும் வெளிவந்தது. பிற்காலத்தில் இது திருத்தி மொழி பெயர்க்கப்பட்டது. ஸில்கா என்பவர் 1933இல் புதிய ஏற்பாட்டின் பொஹீமிய மொழி பெயர்ப்பொன்றை வெளியிட்டார்.

(14) பல்கேரிய மொழிபெயர்ப்பு

பழைய பல்கேரிய மொழியே ஸ்லோவெனிக் மொழியாகும். இம்மொழியில் வேதாகமம் மொழிபெயர்க்கப் பட்ட வரலாற்றை 7ஆம் அத்தியாயத்தில் பார்த்துள்ளோம். பழைய ஸ்லோவெனிக் மொழியிலிருந்து நியோ ஃபைட்டஸ் பெட்ரொஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட பல்கேரிய மொழி வேதாகமம் 1840 இல் சிமிர்னா எனுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது. 1859 இல் புக்காரெஸ்ட் எனுமிடத்தில் வெளியிடப்பட்ட பல்கேரிய புதிய ஏற்பாடு நேரடியாக மூலமொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும்.

எபிரேய மொழியிலிருந்து பல்கேரிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாடு மூன்று பகுதிகளாக 1862 இற்கும் 1864 இற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்தது. 1891இல் பல்கேரிய ஓர்த்தடொக்ஸ் சபை, வேதாகமத்தைத் திருத்தி மொழிபெயர்க்க ஒரு குழுவை நியமித்தது. இவர்களால் திருத்தப்பட்ட பல்கேரிய வேதாகமம் சோஃபியா எனுமிடத்தில் 1925இல் பிரசுரிக்கப்பட்டது. ரொபர்ட் தோமஸ் என்பவருடைய தலைமையின் கீழ் இன்னுமொரு குழு 1921இல் புதிய ஏற்பாட்டையும் 1923இல் முழு வேதாகமத்தையும் பல்கேரிய மொழியில் வெளியிட்டது.

(15) போலிஷ் மொழிபெயர்ப்பு

போலந்து நாட்டில் 14 ஆம் நூற் றாண்டளவில் மொழிபெயர்க்கப்பட்ட போலிஷ் மொழி சங்கீதப் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதிகள் பல இன்றும் உள்ளன. 1553 இல் முதல் தடவையாக புதிய ஏற்பாடு போலிஷ் மொழியில் அச்சிடப்பட்டது. 1561 இல் க்ராகெள எனுமிடத்தில் முழு வேதாகமமும் போலிஷ் மொழியில் வெளியிடப்பட்டது. போலிஷ் வேதாகமத்தின் இரண்டாவது பதிப்பு 18 பேர் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்டு 1563இல் லித்துவேனியாவிலுள்ள பிரெஸ்ட் எனுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது. போலிஷ் அரச குமாரனுடைய முயற்சியினால் உருவான இவ்வேதாகமம் மக்கள் மத்தியில் பிரபல்யமடையவில்லை.

1565 இல் அரச குமாரன் மரித்தபின், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கச் சபையைச் சேர்ந்த ஒருவர், தன்னால் கண்டு பிடிக்கக்கூடிய இவ்வேதாகமப் பிரதிகள் அனைத்தையும் எரித்துவிட்டார். பின்னர், சைமன்பன்டி என்பவர் இவ்வேதாகமத்தின் திருத்த மொழி பெயர்ப்பொன்றைத் தயாரித்து, 1572இல் நெஸ்விஸா எனுமிடத்தில் பிரசுரித்தார். ஜாக்குப் உஜெக் என்பவர் லத்தீன் மொழிபெயர்ப்பை ஆதாரமாய்க் கொண்டு மொழி பெயர்த்த போலிஷ் வேதாகமமே, ரோமன் கத்தோலிக்கச் சபையினரது அங்கீகாரம் பெற்ற வேதாகமமாகியது. இது 1599இல் க்ராகெள என்னுமிடத்தில் பிரசுரிக்கப்பட்டது. 1935 இல் இதன் திருத்தப் பதிப்பு வெளி வந்தது. 1632இல் டென்ஸிங் என்னுமிடத்தில் பிரசுரிக்கப்பட்ட போலிஷ் வேதாகமம், சீர்திருத்த, லூத்தரன், மொரேவிய சபைகளைச் சேர்ந்தவர் களது கூட்டு முயற்சியினால் உருவானதாகும். எனினும், நெசன் என்னுமிடத்தில் பிரதான பிஷப்பாக இருந்தவர், மத்தேயு 4:1 இல் ஏற்பட்ட ஒரு அச்சுப் பிழையைக் கண்டுபிடித்தமையினால், இதன் பிரதிகளை பறிமுதல் செய்து எரித்துவிட்டார். இதன் திருத்தப்பட்ட பதிப்பு போலந்திலும் வேறு பல இடங்களிலும் பிரசுரிக்கப்பட்டது. 1928இல் மைக்கேல் கொவால்ஸ்கி என்பவர் புதிய ஏற்பாட்டின் போலிஷ் மொழி பெயர்ப்பை ப்லொக் எனுமிடத்தில் வெளியிட்டார்.

(16) ரஷ்ய மொழிபெயர்ப்பு

16ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் பிரான்ஸ்சிஸ்கஸ் ஸ்கோரினா என்பவர் வேதாகமத்தின் பல புத்தகங்களை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்தார். இவர் மொழிபெயர்த்த பழைய ஏற்பாட்டின் 22 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகள் மற்றும் நிருபங்களும் இன்றுவரை இருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலான புத்தகங்கள் 1517இற்கும் 1519இற்கும் இடைப்பட்ட காலத்தில் ப்ராக் எனுமிடத்தில் அச்சிடப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டு வரை இதைத்தவிர வேறு எந்த மொழிபெயர்ப்பும் ரஷ்ய மொழியில் வெளிவரவில்லை. 1821 இல், ஒரு குழுவினால் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு ரஷ்ய மொழி யில் வெளியிடப்பட்டது.

(தொடரும்)