ஜீவனத்தின் பெருமை!

தியானம்: மார்ச் 18 திங்கள்; வாசிப்பு: மத்தேயு 4:8-11

‘உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே
ஆராதனைசெய்து,..’ (உபாகமம் 6:13)

ஆட்சியை, ஆஸ்தியை ‘ஜீவனத்தின் பெருமை’ தராது; அது தேவனை ஆராதிப்பதை அழித்துப்போடுகிறது. இதை அறிந்துகொண்டால் எத்தனையோ பிரச்சனைகளையும், உளரீதியான உடைவுகளையும் தவிர்த்துக்கொள்ளலாம்.

சரீரரீதியாகவும் உணர்வுரீதியாகவும் தோற்கடிக்கமுடியாதபோது, உளரீதியாக இயேசுவைத் தாக்கினான் சாத்தான். உலக ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் காட்டிய சாத்தான், ‘நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உனக்குத் தருவேன்’ என்றான். இங்கே இரு விஷயங்களைக் கவனிக்கவேண்டும். ஒன்று, பூமியும் அதன் நிறைவும் உலகமும் அதின் குடிகளும் கர்த்தருடையது. அப்படியிருக்க, இவன் யார் அவற்றையெல்லாம் இயேசுவுக்கு அள்ளிக்கொடுக்க? ஆக, ஒரு பொய்யான பேச்சினால் வஞ்சிக்கப்பார்த்தான். அதற்காக, நீ யார் எனக்குத் தர என்று இயேசு வாதிடவில்லை. ஏனெனில், அவனுடைய தந்திரம் என்னவென்பதை அவர் அறிந்திருந்தார். அடுத்து, இயேசு சாஷ்டாங்கமாய் விழுந்து சாத்தானைப் பணிய வேண்டுமாம். இதுதான் தந்திரம். சிலுவை சுமந்து, பாடனுபவித்து, பாவத்தைச் சுமந்து என்று எத்தனை உபத்திரவங்கள்? அதைப்பார்க்கிலும், ஒரு ஆராதனை ஒரு வணக்கம் அது போதும்; நீ வந்தவேலை முடிந்துவிடும் என்று இயேசுவைச் சோதனைக்குட்படுத்தினான் சாத்தான். தேவனுக்கு மாத்திரமே உரித்தான ஆராதனையை சாத்தான் தனதாக்கும் தந்திரத்தை இயேசுவானவர் உணர்ந்து, ‘அப்பாலே போ சாத்தானே’ என்று அதட்டினார்.

அன்று ஆதாமும் ஏவாளும் தேவர்களைப்போலாகி தேவனைவிட்டு, முழு ஆளுமையையும் தனதாக்கிக்கொள்ளும் பெருமையில் விழுந்தார்கள். அதாவது, அவர்கள் ஆட்சியை விரும்பினார்கள்; ஆராதனையையும் அதற்கு உரியவரையும் மறந்தார்கள். தங்களையே ஆராதனைக்குரியவர்களாக்க இச்சைப்பட்டார்கள். ஆனால், இயேசுவோ சாத்தானின் தந்திரத்தை முறியடித்து, தேவன் ஒருவரே ஆராதனைக்குரியவர் என்பதை நிலைநாட்டினார்.

‘என் வாழ்வை நானே தீர்மானிப்பேன், யாருக்கும் பயப்படமாட்டேன்’ என்ற பெருமையானது நமக்குள் உருவாகுமானால், அது சாத்தானின் சோதனை என்பதை உணரவேண்டும். நீ வாழ்வில் உயருவது நல்லது. அதற்காக முயற்சி பண்ணு, பிறர் தயவை நாடு, கடினமாக வேலைசெய். அதுதான் தேவசித்தம். அப்படியிருக்க, தேவசித்தத்தில் வாழுவதை நிறுத்தி, தேவனுக்குரிய ஆராதனையைக் களவாடினால், அது நம்மைப் படுகுழிக்குள் வீழ்த்திப்போடும். எந்த நிலையிலும் தேவனுக்கே கீழ்ப்படிந்து, அவருக்கே ஆராதனை செய்யத் தவறாதே.

ஜெபம்: “பிதாவே, என் ஜீவியத்திற்குரிய சகலத்தையும் நீரே நிர்ணயிக்கிறவர். உம்மை ஆராதித்து உம்மையே சார்ந்து வாழ கிருபை தாரும். ஆமென்.”