அந்த மகிமை!

தியானம்: மார்ச் 31 ஞாயிறு; வாசிப்பு: 2கொரிந்தியர் 5:1-17

‘அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.’
(லூக்கா 24:6)

இலங்கையிலுள்ள சிவனொளி பாதமலையின் உச்சியிலிருந்து, அல்லது தென் இந்தியாவிலுள்ள கன்னியாகுமரி கடலோரத்திலிருந்து அதிகாலையில் வானம் வெளுத்து சூரியன் எழும்புகின்ற காட்சியைக் கண்டிருக்கிறீர்களா? அது ஒரு அற்புதக் காட்சி. இருண்டிருந்த வானத்தில், மெதுவாக ஒளிக்கற்றைகள் வெளுத்து வெளிவர முயற்சிக்கும்போதுள்ள அந்த மகிமை அற்புதம்! பின்னர் மெதுமெதுவாக ஒரு எரிகின்ற பந்துபோல சூரியன் எழும்பும்போது அதன் மகிமை சொல்லிமுடியாது. அதைப் பார்த்துக்கொண்டு நின்றபோது, தேவனால் படைக்கப்பட்ட இந்த சூரியன் எழும்பும்போது அதன் மகிமை இத்தனை அற்புதம் என்றால், மரணத்தின் இரும்பு பிடியை உடைத்துக் கிழித்து இயேசு உயிர்த்தெழுந்த காட்சி எப்படியிருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. மேலெ ழுந்த சூரியனை ஒரு அளவுக்கு மிஞ்சி கண்கொடுத்துப் பார்க்க முடியாதபோது, கிறிஸ்து உயிர்த்தெழுந்த காட்சியை மனிதக் கண்கள் எப்படிப் பார்த்திருக்க முடியும்? பாவ இருளுக்குள் சுருண்டுபோயிருந்த உலகத்தால் தேவகுமாரனை மரணத்துள் அடக்கிவைக்க முடியவில்லை. பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டபோது (ரோமர் 6:4) அதை தடுத்துநிறுத்தவோ, மறைக்கவோ யாரால் கூடும்?

நடந்ததை அறியாத பெண்களுக்கு கல்லறை வாசலில் நல்ல செய்தி காத்திருந்தது. இன்று நான் யாரைத் தேடி அலைகிறேன்? இயேசு உயிர்த்தெழுந்த செய்தி எனக்குப் புதிதல்லவே! அன்று கிறிஸ்துவில் வெளிப்பட்ட அந்த மகிமையின் பிரகாசம் இன்று நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும், ஏன் இன்னமும் இருண்ட வாழ்க்கை? கிறிஸ்து எழுப்பப்பட்டதால், இன்று புதிதான ஜீவனைப் பெற்றிருக்கிற என் வாழ்விலே, மரணத்தை வென்ற அந்த வெற்றியின் சாயல் வெளிப்படுகிறதா?

இயேசுவின் மரணத்திலும் உயிர்த்தெழுதலிலும் நான் இணைக்கப்பட்டிருப்பது மெய்யானால் நான் அதைக் கொண்டாடி அனுபவிக்கலாமே! என் தீய இச்சைகள், பாவத்தில் எனக்கிருந்த கவர்ச்சிகள் பிணைப்புகள் யாவும் அறுந்து போயின. இப்போது அறுபடாத அன்பினால் இயேசுவோடு நான் இணைக்கப்பட்டுள்ளேன். ஆதலால், பாவம் இனி என்னை ஆள முடியாது. இனி நான் பழைய வாழ்வு வாழ முடியாது. பழைய கெட்ட உறவுகள், பழைய இச்சைகள், பழைய பழக்கங்கள், பழைய நினைவுகள், நினைவுகளில் எழுகின்ற வீண்போராட்டங்கள் எல்லாவற்றிலிருந்தும் உயிர்த்த கிறிஸ்து என்னை விடுவித்து விட்டார். நான் என் இயேசுவுக்கே சொந்தம். நான் தோற்றுப்போகிறவன் அல்ல.

ஜெபம்: “பிதாவே, உயிர்த்த இயேசு எனக்குள் வாழுகிறார் என்ற விசுவாசத்தைத் தந்தீர் ஸ்தோத்திரம். அந்த வல்லமை என்னில் வெளிப்பட என்னை நடத்தும். ஆமென்.”