சீராக்கிடும் இரட்சிப்பு
தியானம்: ஏப்ரல் 1 திங்கள்; வாசிப்பு: எபிரெயர் 12:5-11
‘…இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்
பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச்
சிட்சிக்கிறார்.’ (எபிரெயர் 12:10)
சிறுவயதிலே அதிகம் சுட்டித்தனம்பண்ணி பெற்றோரிடம் அதிக அடிகள் வாங்கியவன் நான்தான். அமைதியான சுபாவம் கொண்ட என் தகப்பனார், கோபம் வந்து பிரம்பை எடுத்தால் செம்மையாக அடித்துவிடுவார். ஒருநாள் நன்றாக அடிவாங்கினேன். அடிவிழுந்த இடங்கள் தடித்துவிட்டது. அம்மா எண்ணெய் பூசிவிட்டார். துக்கத்தோடு அமர்ந்திருந்த என்னைத் தகப்பனார் அழைத்தார். ‘உன்னை ஏன் அடித்தேன் தெரியுமா?’ என்று கேட்டார். நான் பயத்தில் தலைகுனிந்து நின்றேன். என் முகத்தைத் தன் கையால் உயர்த்திய அவர், ‘நீ ஒரு கீழ்ப்படிதலுள்ள மகனாக கடவுளுக்குப் பயந்து வாழும் ஒரு நல்ல மனிதனாக வளரவேண்டும் என்பதற்காகவே அடித்தேன்’ என்று சொன்னபோது, அவருடைய கண்களில் கண்ணீர் பனித்திருப்பதைக் கண்டேன். அன்றிலிருந்து என்னைத் திருத்திக்கொண்டேன். எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை விரும்பியோ வேண்டுமென்றோ தண்டிப்பதில்லை. அன்பின்நிமித்தம், பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாயிருக்க வேண்டுமென்றுமே சிட்சிக்கிறார்கள்.
தேவபிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்ட நம்மில் தேவன் விரும்பாத பல காரியங்கள் இருக்கலாம். அவற்றை நாம் உணராமல் மனம்போனபடி வாழும்போது, வேத வசனங்கள், தேவ செய்திகள், தியானங்கள் மூலம் நாம் தேவனால் எச்சரிக்கை செய்யப்படுகிறோம். நாம் இதை உணராமல், இவற்றை அசட்டை செய்து வாழ்ந்தால், தமது சித்தத்தின்படி வாழ அழைத்தவர் நம்மைச் சிட்சித்துச் சீராக்கவேண்டிய நிலையேற்படுகிறது. சிட்சையை நாம் அற்பமாக எண்ணாமல் மனதார ஏற்று, உணர்வடைந்து நமது வாழ்வை மாற்றி சரிசெய்து கொள்ள வேண்டும். தேவன் நம்மீது வைத்துள்ள அன்பையும் கரிசனையையும் மனதிலே கொண்டு அவருக்கு நன்றி செலுத்தி, தவறுகளை திருத்தி அவருடைய வார்த்தைகளுக்குள் அடங்கி நடக்கவேண்டும். அதுதான் உத்தமம்.
பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்ற நாம் ஏனோதானோ என்று வாழுவதைத் தேவன் விரும்புவதில்லை. தேவ சாயலைப் பெற்ற நாம் (ஆதி.1:27) அவரைப்போல பூரணராக (மத்.5:48), பரிசுத்தம் அன்பு கொண்டு, அவருக்கே மகிமை கொண்டுவருபவர்களாக (மத். 6:16), சகலத்திலும் கீழ்ப்படிகின்றவர்களாக வாழ வேண்டுமென்றே விரும்புகிறார். உலகில் நல்ல பிள்ளைகளாக வாழ்வதற்கு நமது தகப்பன் நம்மைச் சிட்சிக்கும்போது அவர்களுக்கு அடங்கி நடக்கின்ற நாம், நித்தியத்திற்கு நம்மைத் தகுதிப்படுத்தும்படி பிழைக்கத் தக்கதாக நம்மைச் சிட்சித்து நடத்துகிற பரம தகப்பனுக்கு அடங்கி நடந்து, அவரை நாம் பிரியப்படுத்துவது மிகவும் அவசியமல்லவா!
ஜெபம்: “என்னை அழைத்த அன்பின் நேசரே, நீர் என்னைச் சிட்சிக்கும்போது அற்பமாய் எண்ணாமல் என்னைச் சரிசெய்து உம் வழி நடக்க உதவியருளும். ஆமென்.”