மன்னிப்பின் மகத்துவம்
தியானம்: ஏப்ரல் 15 திங்கள்; வாசிப்பு: லூக்கா 15:11-24
‘என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்;
காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான்.
…அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.’ (லூக்கா 15:24)
இயேசு சொன்ன உவமையிலே, திரும்பி வந்த மகனைத் தகப்பன் ஏற்றுக்கொண்டமை ‘மன்னிப்பை’யும், அவனுக்குப் புதிய வஸ்திரங்களை அணிவித்தமை திரும்பி வந்தவனுக்குக் கிடைத்த ‘புதுவாழ்வை’யும் காட்டுகிறது.
வீட்டைவிட்டு ஓடிப்போன ஒரு மகன், மனம்போனபடி வாழ்ந்து, பணம் முழுவதும் விரயமானதும், தன் வீட்டை எண்ணிப் பார்த்தான். வீட்டிற்குத் திரும்ப நினைத்தாலும் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களா என்ற பயத்தில், ‘நான் மறுபடியும் வீட்டிற்கு வர விரும்புகிறேன். என்னை மன்னித்து ஏற்பீர்களா? என்னை மறுபடியும் ஏற்றுக்கொள்வதானால் அதற்கு அடையாளமாக, வீட்டுவாசலிலுள்ள மரத்தில் ஒரு வெள்ளைக் கொடியை கட்டிவையுங்கள். நான் வரும்போது அந்தக் கொடியைக் கண்டால் வீட்டிற்கு வருவேன். இல்லையெனில் திரும்பி சென்றுவிடுவேன்’ என்று ஒரு தகவலை அனுப்பினான். அந்தநாளும் வந்தது. மகன் வீட்டிற்குச் சமீபமாக வந்தபோது, ஒரு கொடி அல்ல; அந்த மரம் முழுவதுமே வெள்ளைக் கொடிகளால் நிறைந்திருந்ததைக் கண்டான். இது கதைதான். ஆனால், மன்னிப்பின் மகத்துவத்தை நாம் இதில் காண்கிறோம்.
இயேசு சொன்ன உவமையில் வந்த தந்தை, தன் சொத்தைப் பார்க்கிலும், தன் மகனை அதிகமாக நேசித்ததைக் காண்கிறோம். தன் மகனுக்காக அவன் ஆவலுடன் காத்திருந்தான் என்பதை, மகன் தூரத்தில் வரும்போதே அந்தத் தகப்பன் கண்டு ஓடிச்சென்று, மகனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான் என்பதிலிருந்து நாம் உறுதிப்படுத்தலாம். ஆம், அவன் மகனுக்காக ஏங்கி நின்றான். அவனுக்குள் தன் மகனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் எண்ணமே மேலோங்கியிருந்தது. திரும்பிவந்த மகனை அவன் எதுவும் கேட்கவில்லை. மகன் உடுத்தியிருந்த அழுக்கான கந்தை துணிக்குப் பதிலாக உயர்ந்த ஆடைகளும், பன்றி மேய்த்த கைக்குப் பதிலாக மோதிரமும், வெறுங்காலுக்கு காலணியும், தவிடும்கூடக் கிடைக்காதவனுக்கு சிறப்பான விருந்தும், பன்றிகளின் உறுமல்களைக் கேட்டவனுக்கு இசையோடு கூடிய பாடல்களும் அங்கே காத்திருந்தன. இந்தப் புதிய வாழ்வுக்கு காரணம் என்ன? தந்தையின் மன்னிப்பும், இரக்கமும், பலனை எதிர்பாராத அன்பும்தானே.
ஒரு சாதாரண தகப்பனுக்கே இந்த மனது இருக்குமானால், தமது சொந்தக் குமாரனையே பலியாகத் தந்து நம்மை மீட்டுக்கொண்ட உன்னத தகப்பனின் உள்ளத்தில் எவ்வளவு இரக்கமும் மன உருக்கமும் மன்னிப்பும் இருக்கும். மனந்திரும்பி வருகிற ஒவ்வொருவருக்கும் அவர் புதிய வாழ்வு தர ஆவலுடன் காத்திருக்கிறார். நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?
ஜெபம்: “திரளான மன்னிப்பினால் என் பாவங்களையும் அக்கிரமங்களையும் மன்னித்த தேவனே, என்றும் உம்முடன் வாழ கிருபை செய்தருளும்.” ஆமென்.