நலமடைந்த நாகமான்

தியானம்: ஏப்ரல் 19 வெள்ளி; வாசிப்பு: 2இராஜாக்கள் 5:1-14

‘…தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில்
ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின்
மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.’ (2இராஜா.5:14)

சீரிய ராஜாவின் படைத்தலைவனும் பராக்கிரமசாலியுமான நாகமான் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டான். இஸ்ரவேலிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட ஒரு சிறு பெண் நாகமானின் மனைவிக்குப் பணிவிடைக்காரியாக அவனுடைய வீட்டிலே இருந்தாள். தன்னுடைய எஜமான் நோயினால் வாடுவதையும், தன் எஜமாட்டி துக்கத்தோடிருப்பதையும் கண்ட அவள், வியாதி நீங்கி மகிழ்வுடன் வாழ நல்ல யோசனையொன்றைச் சொன்னாள். அதன்படி ராஜாவிடம் நிருபத்தைப் பெற்றுக்கொண்டு இஸ்ரவேலுக்கு போனான் நாகமான். இதைக்கேட்ட இஸ்ரவேலின் ராஜா கோபமடைந்தபோதும், எலிசா அவரைச் சமாதானப்படுத்தி நாகமான் தன்னிடம் வரட்டும் என்றார். நாகமானும் வந்தான். ஆனால், எலிசாவோ அவன் எதிர்பார்த்தபடி எதுவும் செய்யாமல், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணும்படி ஒருவனிடம் சொல்லி அனுப்பினார். நாகமான் கோபமடைந்து, திரும்பிப்போக எண்ணினான். அவனது ஊழியக்காரர் வந்து, ‘தகப்பனே அந்த தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தை செய்யச் சொன்னால் நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம்பண்ணும் சுத்தமாவீர் என்றுதானே சொன்னார். அதைச் செய்யும்’ என்று கேட்டுக்கொண்டனர். அப்படியே நாகமான் எலிசா சொன்னபடியே ஏழுதரம் முழுகி எழுந்திருந்தபோது சுத்தமானான்.

ஒரு சிறு அடிமைப்பெண் மூலமாகவே நாகமானுக்குரிய சுகம் கிடைத்தது. ஒரு அடிமையின் சொல்லை எங்கேயாவது ஒரு எஜமான் கேட்பானா? நாகமான் கேட்டான், சுகம் பெற்றான். எனினும், இஸ்ரவேல் ராஜாவின் கோபம், யோர்தானில் ஏழுதரம் முழுக நாகமான் இணங்காமை எல்லாம் நடைபெற்றபோதும், திரும்பவும் ஒரு காரியம் நடக்கிறது. இங்கே நாகமான் தனது ஊழியரின் சொல் கேட்டு யோர்தான் நதியில் முழுகினான். தனக்கு கீழுள்ளவனையும் மதிக்கும் குணம் இந்த நாகமானிடம் காணப்பட்டது. அதனிமித்தம் நாகமான் அற்புத சுகத்திற்குப் பாத்திரனானான். தன் வேலைக்காரருக்குப் பேசுவதற்கு உரிமை கொடுத்து, அவர்களின் நியாயமான முடிவைத் தான் உடனடியாக ஏற்றுக் கொண்டு, கீழ்ப்படிந்த நாகமான் அதினால் சந்தோஷமடைந்தான்.

இந்தச் சம்பவத்தினூடாக பல பாடங்களை நாம் கற்றுக்கொண்டாலும், இன்று ஒரு விஷயத்தை நமது மனதில் நிறுத்திக்கொள்வோம். அடிமை என்றோ, நமக்குக் கீழே வேலைப் பார்க்கிறவர்கள் என்றோ பெருமையுடன் நடக்காமல், அவர்களுக்கூடாகவும் தேவன் நமக்கு ஆலோசனை தரக்கூடும் என்று எண்ணி, நமக்குக் கீழ் உள்ளவர்களையும் நாம் அன்பாக நடத்துவோமாக. அதுவே மிகப்பெரிய தேவனின் ஆசீர்வாதங்களை நமக்கு நிச்சயம் கொண்டுவரும்.

ஜெபம்: “ஆண்டவரே, நீர் அடிமையாகிய என்னை நேசித்தது போல, எனக்குக் கீழுள்ளவர்களையும் நேசித்து நடக்கும் மனதைத் தாரும். ஆமென்.”