எனக்கு நானே…
தியானம்: ஏப்ரல் 27 சனி; வாசிப்பு: எஸ்தர் 7:1-10
‘அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின
தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்.’
(எஸ்தர் 7:10)
சிலசமயங்களில் நாம் எதிர்கொள்ளுகிற பிரச்சனைகளுக்கு நாமேதான் காரணமாகி விடுகிறோம். நாம் பிறருக்கு விரோதமாக நினைக்கின்ற காரியங்கள் நமக்கே விரோதமாகத் திரும்பிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதை நம்மால் வெளியே சொல்ல முடியாதிருந்தாலும், அதை உணர்ந்து, தேவபாதம் பணிந்து மனந்திரும்பவேண்டியது மிகவும் அவசியம்.
இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆமான். ஆமானை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருந்த சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை ராஜா தாமாகவே உயர்த்திவைத்தார். இது ஆமானுக்கு கிடைத்த பெரியதொரு அதிர்ஷடம். மாத்திரமல்ல, அரண்மனை வாசலிலுள்ள ராஜாவின் ஊழியக்காரர் ஆமானை வணங்கி நமஸ்கரிக்கவும் வேண்டும் என்றும் ராஜா கட்டளையிட்டிருந்தார். எல்லோரும் அப்படியே செய்தார்கள். ஆனால், மொர்தெகாய் செய்யவில்லை. அதற்கு அவன் தான் யூதன் என்று சக ஊழியரிடம் பதில் சொல்லியும் இருந்தான். அதைப் பேசாமல் விட்டிருக்கலாம்; ஆனால் ஆமானின் பெருமை விடவில்லை; அகங்காரம் அவனை அமைதியாக இருக்கவிடவில்லை. அதற்காக மொர்தெகாய்மீது காட்டவேண்டிய கோபத்தை முழு யூதர்கள்மீதும் காட்ட திட்டம் போட்டான் ஆமான். அதுதான் அவன் செய்த மிகப்பெரிய தவறு. அத்துடன் மொர்தெகாயைத் தூக்கிப்போட ஒரு தூக்குமரத்தையும் செய்வித்தான். நடந்தது என்ன? ஆமான் செய்து வைத்த தூக்குமரத்திலே ஆமானே தூக்கிலிடப்பட்டான்.
நாம் பிறருக்குத் தீங்கு நினைப்போமானால், எப்படியோ அது நமக்கே திரும்பி வரும் என்று பெரியவர்கள் சொல்லுவது சாதாரணமான விஷயமல்ல. கெத்செமனே தோட்டத்தில் இயேசுவைப் பிடிக்கவந்தபோது பேதுரு, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டிப்போட்டார். அப்பொழுது பட்டயத்தை உறையிலே போடச் சொன்ன ஆண்டவர், ‘பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்’ என்றார். ஒருவனை நேரடியாகக் கொன்றுபோடுவதற்கும், அவனுக்கு விரோதமாக சூழ்ச்சியான காரியங்களைச் செய்வதற்கும் என்னதான் வித்தியாசம்? ஆகவே, எவருக்கும் எதிரான வீண் காரியங்களில் ஈடுபடாதிருப்போமாக. பிறருக்கு விரோதமாகப் பேசும் வீண் வார்த்தைகள், வீண் குற்றச்சாட்டுக்கள் எனக்கு விரோதமாக நானே எய்கின்ற அம்பு போலாகிவிடும். தவறுகளைச் சுட்டிக்காட்டி கண்டித்து நடத்துவது ஒன்று; தவறுதான் என்று நியாயந்தீர்த்து, தீர்ப்பும் வழங்குவது இன்னொன்று. இரண்டாவதைக் கண்டிப்பாக நமது வாழ்வில் தவிர்த்துக்கொள்வோமாக.
ஜெபம்: “தேவனே, எந்தச் சூழ்நிலையிலும் பிறருக்கு விரோதமாக செயல்படவோ, நினைக்கவோ முற்படாதபடி நீரே என்னை ஆண்டு நடத்தும். ஆமென்.”