எதிர்வினையும் மறுமொழியும்!

அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2013)
Dr.உட்ரோ குரோல்

பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள் (மாற்கு 15:1).

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஓர் இந்து சகோதரி, தனது உறவினர்களால் அதிக துன்பத்துக்குள்ளானார். ஓர் ஊழியக்காரர் அவரிடம், “உன் கணவர் கோபமடைந்து உன்னை அடிக்கும்பொழுது நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த இந்து சகோதரி “நான் அன்றைய உணவினை அதிக சுவையுள்ளதாகவும், வீட்டினை அதிக சுத்தமாகவும் வைப்பேன். அவர் கோபமாகப் பேசும்பொழுது நான் அமைதியாக மறுமொழி கூறுவேன். நான் கிறிஸ்தவளாய் மாறினது மாத்திரமல்ல, நல்ல மனைவியாகவும் மாறிவிட்டேன் என்பதனை என்னுடைய ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்துவேன்” என்று பதிலளித்தார். ஊழியரின் வார்த்தைக்குச் செவி கொடுக்காதவர் தனது மனைவியின் அமைதியான செயலுக்கு இணங்கினார். கிறிஸ்துவுக்காக அவரை ஆதாயப்படுத்த அவரது மனைவியை தூயஆவியானவர் உபயோகித்தார்.

எதிர்ப்புகளுக்கு நீங்கள் என்ன எதிர்வினை தருகிறீர்கள்? நீங்கள் அவமதிக்கப்பட்டாலும், தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டாலும், அமைதியாய் இருக்கிறீர்களா அல்லது ஆவேசமடைகிறீர்களா? உங்களை சபிக்கிறவர்களை நீங்களும் சபித்து பழிக்குப்பழிவாங்க துடிக்கிறீர்களா?

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அநியாயமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டு பிரதான ஆசாரியரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். கெத்செமனே தோட்டத்தில் அவர் அடைந்த வியாகுலத்தை அவரைக் காட்டிக்கொடுத்தவனுடைய செயல் அதிகமாக்கினது. அவருடைய பிரதான சீடரான பேதுரு அவரை மூன்றுமுறை மறுதலித்தார். போர்ச் சேவகர்களுடைய பரியாச வார்த்தைகளாலும் சித்திரவதையினாலும் அன்று இரவு முழுவதும் துன்புற்றார்.

“பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்” (மாற்கு 15:1). அதிகாலையில் கூடிய சனகெரிப் சங்கம் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தது. அவர்மேல் தவறான குற்றஞ்சுமத்தி, அவரை அநியாயமாய் தூஷிக்கவும் செய்தார்கள். ஆனால் அவரோ மறுமொழி எதுவும் கூறவில்லை என்று மாற்கு நற்செய்தியாளர் கூறியுள்ளார். தன்னைக் கொடூரமாய் நடத்தினவர்களை எதிர்க்காமலும், தன்மேல் சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமலும் அமைதியாய் நின்றவரைப் பார்த்த பிலாத்து ஆச்சரியப்பட்டார்.

எகிப்துக்குச் சென்ற ஆங்கிலேயப் படையில் ஓர் இளம் இராணுவ அதிகாரி இருந்தார். அவர் ஒரு துடிப்பான கிறிஸ்தவர். அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதன் காரணத்தை வினவியபொழுது, “நாங்கள் எகிப்துக்கு வரும்பொழுது மால்டா தீவில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு அந்தரங்க காரியதரிசியும் எங்களுடன் வந்தார். நாங்களோ அவரை சிறுமைப்படுத்தினோம். ஓர் இரவு அதிகக் களைப்புடனும், ஈரமான உடையுடனும் வந்தார். ஆனால் படுக்கைக்குச் செல்லுமுன்னர் முழங்காற் படியிட்டு ஜெபித்தார். ஈரமும் சேறுமான என்னுடைய காலணிகளுள் ஒன்றினை அவர் தலைமேல் வைத்து விட்டு, மற்றொன்றால் அவரை அடித்தேன். ஆனால் அவரோ தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் என்னுடைய இரண்டு காலணிகளும் சுத்தம் செய்யப்பட்டு, மெருகூட்டப்பட்டு என் படுக்கையருகே வைக்கப்பட்டிருந்தன. எனது செயலுக்கு அவரது மறுமொழியாக அது அமைந்தது. அவருடைய அச்செயல்பாடு என் இருதயத்தை உடைத்துவிட்டது. அன்றைய தினமே நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

நம்மை அநியாயமாய்க் குற்றம் கூறுபவர்களை நாம் எதிர்க்கக் கூடாது. நமது பண்பைப் பழிப்பவர்களையும் கடுஞ்சொற்களால் நம்மைத் தாக்குபவர்களையும் சகித்துக் கொண்டு, இயேசுகிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்ற நம்மை ஒவ்வொரு நாளும் அதிகாலமே அர்ப்பணிக்க வேண்டும். அப்பொழுதுதான் மகிழ்ச்சியற்ற மக்கள் நடுவே வாழும் நாம் மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.

அதிகாலைப் பாடல்

நிந்தைகளையும் அவமானத்தையும்
எனக்காக சிலுவையில் சுமந்தாரே.
தம்முயிர் தந்து எனக்கு மன்னிப்பை
அளித்த இரட்சகர் இயேசுவுக்கு
என்றும் பாடுவேன் அல்லேலூயா!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை