அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2013)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(16) ரஷ்ய மொழிபெயர்ப்பு
1821இல், ஒரு குழுவினால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு ரஷ்யமொழியில் வெளியிடப்பட்டது. 1820 இல் பழைய ஏற்பாட்டின் மொழி பெயர்ப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதன் பயனாக 1825 இல் ஆதியாகமம் முதல் ரூத் வரையிலான புத்தகங்கள் பீட்டர்ஸ் பேர்க் எனுமிடத்தில் இருந்த வேதாகமச் சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்டது. எனினும், அச்சமயம் முதலாவது நிக்கோலஸ் எனும் அரசன் தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டமையினால், ரஷ்ய வேதாகமச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அத்தனை வேதாகமங்களையும் எரிக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் ரஷ்ய வேதாகமச் சங்கமும் மூடப்பட்டது.
ஆனால், 1856இல் இரண்டாம் அலெக்சாண்டர் என்பவர் அரசனாகியதன் பின், மறுபடியுமாக வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பீட்டர்ஸ்பேர்க் பல்கலைக் கழக விரிவுரையாளரான லொவியஜின் என்பவருடைய தலைமையின் கீழ் ஒரு குழுவினர் சுவிசேஷப் புத்தகங்களை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து 1860இல் வெளியிட்டனர். 1875 இல், பழைய ஏற்பாட்டின் ரஷ்ய மொழிபெயர்ப்பு பீட்டர்ஸ்பேர்க்கில் அச்சிடப்பட்டது. பிற்காலத்தில் இதன் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.
(17) ஏனைய மொழிபெயர்ப்புகள்
கி.பி.16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சபை சீர்திருத்தத்திற்கு முன்பும், அதன் பின்பும், அநேகமாக ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு வேலைகள் ஆரம்பமாகின. 1869 இல் உக்ரேன், கலிசியா, புக்கோவினா எனுமிடங்களில் இருந்த மக்களுக்காக ருத்தீனிய மொழியில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படத் தொடங்கியது. அவ்வாண்டு வெம்பேர்க் எனுமிடத்தில் குலிஷ் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்ட பஞ்சாகமங்கள் ருத்தீனிய மொழியில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து குலிஷ், புளூஜ் என்பவரது உதவியுடன் முழு வேதாகமத்தையும் ருத்தீனிய மொழியில் மொழிபெயர்த்தார். இது 1903 இல் வியன்னாவில் பிரசுரிக்கப்பட்டது. 1921இல் இன்னுமொரு புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு ருத்தீனிய மொழியில் வெளிவந்தது. அதேசமயம் ரஷ்ய வேதாகமச் சங்கம் குறுகிய காலம் மட்டுமே செயல்பட்டாலும் 290 கிளைச் சங்கங்களை ஏற்படுத்தி 14 புதிய மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது. இச்சங்கத்தினால் மொத்தம் 26 மொழிகளில் வேதாகமங்களும் வேதாகமப் பகுதிகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
யூகோஸ்லாவியாவில் பேசப்படும் சேர்போ மொழியில் முதன் முதலாக 1495இல் சுவிசேஷப் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. அன்டோனியஸ் தல்மாத்தா என்பவர் புதிய ஏற்பாடு முழுவதையும் சேர்போ மொழியில் மொழிபெயர்த்தார். இது 1563இல் டியூபின்ஜன் நகருக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் பிரசுரிக்கப்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முழுவேதாகமமும் இம்மொழியில் வெளிவந்தது. அதேபோல செக்கோஸ் லவேக்கியாவின் ஒரு பகுதியான ஸ்லோவேக்கியா எனும் பகுதியில் பேசப்படும் ஸ்லோவக் எனும் மொழியிலும் வேதாகமம் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மொழிபெயர்க்கப்பட்டது. ரோம சபையினால் வெளியிடப்பட்ட இவ்வேதாகமத்தின் திருத்தப் பதிப்பு 1926இல் வெளிவந்தது. புரட்டஸ்தாந்து சபையினரது ஸ்லோவக் மொழிபெயர்ப்பு புதிய ஏற்பாடு 1913இலும், பழைய ஏற்பாடு 1936 இலும் வெளிவந்தது. யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியான ஸ்லோவேனியாவில் பேசப்படும் ஸ்லோவேனியன் மொழியில்1555ஆம் ஆண்டு மத்தேயு சுவிசேஷம் வெளியிடப்பட்டது.
இதை மொழிபெயர்த்த பிரிம்பொஸ் ட்ரூபர் என்பவர், 1577இல் புதிய ஏற்பாடு முழுவதையும் ஸ்லோவேனியன் மொழியில் வெளியிட்டார். ஸ்லோவேனியன் பழைய ஏற்பாடு ஜூரிஜ் தல்மாட்டின் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்டது. இது 1584இல் வெளிவந்தது. சீர்திருத்த சபையினரது இம்மொழி பெயர்ப்புகள், ரோம சபையின் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்ததோடு பல வேதப்பிரதிகள் அவர்களால் எரிக்கப்பட்டன. 18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ரோம சபையினர் தமது ஸ்லோவேனியன் மொழிபெயர்ப்பு வேதாகமத்தை வெளியிட்டனர்.
ஆசிய மொழிகளில் வேதாகமம்
16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சபைச்சீர்திருத்தம் ஐரோப்பிய மக்களது சொந்த மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படுவதற்கு ஏதுவாயிருந்தது போல, 17 ஆம் நூற்றாண்டிலிருந்து உருவாகிய பல்வேறு மிஷனரி சங்கங்களின் செயல்பாடுகள் காரணமாக, ஐரோப்பாவுக்கு வெளியே வேதாகமம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாயிற்று. இவற்றுள் ஆசிய நாட்டு மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்ட வரலாற்றை முதலில் பார்ப்போம்.
இந்திய மொழிபெயர்ப்புகள்
இந்தியா பல மொழிகள் பேசப்படும் ஒரு நாடாகும். இந்திய மொழிகளில் நம் தமிழ் மொழியிலேயே முதன் முதலில் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டது (கி.பி. 1714இல் ஆரம்பமான தமிழ் வேதாகம மொழி பெயர்ப்பு வரலாற்றை 10ஆம் அத்தியாயத்தில் விபரமாக பார்ப்போம்). இந்திய வேதாகம மொழிபெயர்ப்புப் பணியில் முக்கிய பங்கு வகிப்பவர், இங்கிலாந்திலிருந்து 1793ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிஷனரியாக வந்த வில்லியம் கேரி என்பவராவார். 1761 இல் இங்கிலாந்திலுள்ள வறிய குடும்பமொன்றில் பிறந்த இவர், ஆரம்பத்தில் ஒரு காலணி தயாரிக்கும் தொழிலாளியாகவே இருந்தார். அக்காலத்திலே கிரேக்கம், லத்தீன், எபிரேயம் மற்றும் பல மொழிகளையும் படித்த வில்லியம் கேரி 1779இல், தனது 18ஆவது வயதில் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று, வேதப்படிப்பிலும் சபை ஊழியங்களிலும் தீவிரமாக ஈடுபட்டார்.