ஆத்துமாவின் கீதம்!

தியானம்: ஜுன் 3 திங்கள்; வாசிப்பு: சங்கீதம் 103:1-9

‘என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி;
அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே’
(சங்கீதம் 103:2).

ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த சங்கீத வார்த்தைகள், “Let all that I am, praise the Lord” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, எனக்கிருக்கிற சகலமுமே கர்த்தரைத் துதிப்பதாக என்று இது அர்த்தம் பெறும். இந்த சங்கீத வார்த்தைகளை நாமும் தாவீதைப்போல அனுபவித்துத் தியானித்துப் பார்ப்போமானால், நாம் இப்போது செய்வதுபோல, ஒரு ஆராதனை முடிவுக்கும், ஜெபத்தின் முடிவுக்கும் அடையாளமாக இந்த சங்கீத வசனங்களைச் சொல்ல மாட்டோம்.

இந்த வசனங்களில், உடன்படிக்கையில் நிலைத்திருக்கிறவரும், வாக்குத்தத்தத்தில் மாறாதவருமான தேவனுக்கும் தாவீதுக்கும் இடையிலான உறவின் நெருக்கம் தெளிவாய்த் தெரிகிறது. ஆடுகளுக்குப் பின்னே திரிந்த தன்னை, குடும்பத்திலே கடைசியாய் நின்ற தன்னை, தான் நேசிக்கும் முன்னரே தன்னை நேசித்த தேவன் கண்டாரே என்பதை சிந்திக்கச் சிந்திக்க, தாவீதினால் தன் ஆத்துமாவில் பொங்கிவழியும் மகிழ்ச்சியை அடக்கிவைக்க முடியவில்லை. தேவன் தன்னையா கண்டார், தன்னையா நேசித்தார் என்பதை தாவீதினால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆம், தாவீதின் உள்ளம் அன்பினாலும் நன்றியினாலும் நிறைந்திருந்தது என்பதை நாமும் உணரக்கூடியதாக இருக்கிறது. அடுத்தது, தாவீதின் இப்பாடல், அவருடைய தீவிரமான பாடலாக இருக்கிறது. அதாவது, தேவனைத் துதிக்கவும் ஸ்தோத்தரிக்கவும் தன்னிலுள்ள எதையும் அவர் பின்வைக்கவில்லை. ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் இந்தப் பாடலில் அவர் ஊற்றியிருப்பது தெரிகிறது. மாத்திரமல்ல, தேவன் தனக்குச் செய்த ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து, அவற்றை ஒவ்வொன்றாய் சொல்லிச் சொல்லித் துதித்துப் பாடுகின்ற இந்த சங்கீத வார்த்தைகளைப் பார்க்கும்போது, இந்தப் பாடல் தாவீதின் உதடுகளிலிருந்து அல்ல, ஆத்துமாவின் ஆழத்திலிருந்து வெளிவந்தது என்பதை மறுக்கமுடியாது.

நமக்காகத் தமது குமாரனையே பலியாகத் தந்த நம் தேவனை நாம் எப்படித் துதிக்கிறோம்? துதியும் ஸ்தோத்திரமும் ஆத்துமாவின் ஆழத்தில் இருந்து எழும்பவேண்டும். தேவனைத் துதிக்கும்போது நாம் எதனையும் மிச்சம் வைக்கக்கூடாது. நம்மில் உள்ள சகலமும் தேவனைத் துதிக்கட்டும். அதற்கு, அன்றாட வாழ்விலே நாம் தேவனைக் கிட்டிநெருங்கி, அவரோடு நேரம் செலவிடவேண்டும். பெயருக்கும் புகழுக்கும் பாடப்படுகின்ற பாடல்கள் ஆத்துமாவின் கீதங்கள் அல்ல. நம்மில் உள்ள எல்லாவற்றுடனும் ஆத்துமாவின் ஆழத்திலிருந்து தேவனை ருசித்து அனுபவித்து அவரை ஸ்தோத்தரிப்போமாக.

ஜெபம்: “என் அன்பின் தேவனே, நீர் மீட்டுக்கொண்ட என் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் உம்மை நேசிக்கும் நேசத்தாலும், நன்றியாலும் நிறையட்டும். ஆமென்”.