முற்றிலும் அழித்துப்போடு!

தியானம்: ஜுன் 19 புதன்; வாசிப்பு: 1சாமுவேல் 17:48-54

‘பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும்
எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.’
(1கொரிந்தியர் 9:25)

கடும்முயற்சி எடுத்து பெற்றுக்கொள்ளுகின்ற பலருடைய வெற்றிகள் வெகுவிரைவில் மங்கிப்போவதைக் கண்டிருக்கிறோம். அதற்கு பெருமையும், மேட்டிமையும்தான் மறைவிலுள்ள காரணங்களாக இருக்கும். இவையும் ஒருவிதத்தில் நமக்குள் எழுகின்ற இச்சையுள்ள எண்ணங்கள்தான்.

தாவீது – கோலியாத் சம்பவத்தில், என்னை மிகவும் கவர்ந்த பகுதி இதுதான்: ‘தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது. ஆகையால், தாவீது பெலிஸ்தன் அண்டை ஓடி, அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று, அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்.’ நெற்றிப்பொட்டில் கல்லடிபட்டு விழுந்தவன், எழுந்திருந்தால்… என்று ஒரு கணம் சிந்தித்து தாவீது தயங்கியிருந்தால் என்னவாகியிருக்குமோ! அடுத்தது, அவனை வீழ்த்திவிட்டதுடன் தன் வேலை முடிந்தது என்று தாவீது பெருமிதத்துடன் திரும்பியிருந்தால்…! மேலும், பயந்து நடுங்கிய சவுலைக் கேலிபண்ணி, பெலிஸ்தனை வென்ற பெருமையைத் தானே கொண்டாடியிருந்தால்…! ஆனால், தாவீதோ இஸ்ரவேலின் தேவனுக்குத்தான் செய்யவேண்டியது இன்னமும் முடியவில்லை என்பதை உணர்ந்தவன்போல தானே முன்னோக்கி ஓடினான். கோலியாத்தின் மேலே ஏறி நின்றான். என்ன கெம்பீரம்! கோலியாத்தின் பட்டயத்தையே உருவி, அவனுடையதாலேயே அவனைக் கொன்றுபோட்டான். இங்கேதான் இஸ்ரவேலுக்காக தாவீது பெற்றுக்கொண்ட வெற்றி உறுதியானது.

கோலியாத்திலும் கொடிய பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் தாவீது நமக்கு அருமையானதொரு பாடம் கற்றுத் தந்திருக்கிறார். சகேயுவும் அதைத்தான் செய்தான். எந்தப் பணம் அவனுக்குள் ஆசையை இச்சையைத் தூண்டி, தேவனுக்கும் மனுஷருக்கும் அவனை தூரமாக்கியதோ, மனந்திரும்பியவுடன், அதே பணத்தாலேயே தன் பண ஆசையை வேரோடு சாய்த்தான் சகேயு. அநியாயமாய் எடுத்த பணத்திற்குப் பதிலாக நான்கு மடங்காய் திரும்பக் கொடுக்கும் மனது நமக்கு வருமா? தேவனையும் நம்மையும் பிரித்துப்போடும் எதுவானாலும் அது நமக்கு எதிரிதான். அதனை எதிர்கொண்டு வீழ்த்தினால் போதாது. முன் ஓடி சத்துருவின் ஆயுதத்தாலேயே சத்துருவை முற்றாய் அழித்துப்போடவேண்டும். சில சமயங்களில், இது இருக்கட்டும், நான் தொடமாட்டேன் என்று சில காரியங்களை நாம் பின்வைப்போம். ஆனால், அதுவே மீள உயிர்கொண்டு நம்மை வீழ்த்தி அழித்துப்போடாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இன்றே தீர்மானம் எடுப்போமாக!

ஜெபம்: “பிதாவே, நான் எதிர்கொள்ளும் பாவ இச்சைகள் எதுவானாலும், அதனை முற்றாய் அழித்துவிட உரிய பெலனைத் தாரும். ஆமென்.”