நேர்மை!

தியானம்: ஜுன் 24 திங்கள்; வாசிப்பு: 1சாமுவேல் 2:30-36

‘என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்;
என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று
கர்த்தர் சொல்லுகிறார்.’ (1சாமுவேல் 2:30)

வாழ்வின் வெற்றி தோல்வியிலே பெரும் பங்கு வகிக்கும் நமது சிந்தனையோட்டத்தின் இன்னொரு பக்கம் ‘நேர்மை’. நல்லது கெட்டது எது, சரி பிழை எது என்றும் பகுத்தறிவதற்கு நேர்மை அவசியம். நமது மனது நேர்மையாய் சிந்திக்குமானால், செயலிலும் நேர்மை விளங்கும். நாம் நேர்மை தவறும் போது, நாம் ஆராதிக்கும் தேவனைத்தான் அசட்டைசெய்கிறோம். தேவனை நாம் கனப்படுத்தினால் அவரும் நம்மைக் கனப்படுத்துவார்; நாம் அவரை அசட்டைபண்ணினால் அவரல்ல, நாமேதான் கனஈனப்படுவோம்.

சிறிய ஹோட்டல் ஒன்றை அப்பிரதேசத்து சுகாதார ஆய்வாளர் சோதனை போட வந்தார். அவர் சொன்ன மாற்றங்களைச்செய்ய பல ஆயிரங்கள் செலவாகும். உரிமையாளர் விழித்தார். அதைக் கண்ட ஆய்வாளர், ஒரு ஐநூறு ரூபாய் இவற்றைச் சரிசெய்துவிடும். மறுத்தால், இரண்டு வாரத்தில் இத்தனை மாற்றங்களையும் செய்யவேண்டும், தவறினால் கடையை இழுத்து மூடிவிட வேண்டும் என்றார். இங்கே நேர்மைக்கு விலை வெறும் ஐநூறு ரூபாய். துணிக் கடையொன்றில், பட்டுத் துணியை அளவெடுக்கும்போது துணியைச் சற்று இழுத்து அளவெடுக்கும்படி உரிமையாளர் ஊழியரிடம் கூறினார். அதற்கு அவர், ‘உங்கள் பட்டுத்துணியை இழுத்தால் நீளும். ஆனால், என்னுடைய மனச்சாட்சி நீளாது’ என்றாராம். பின்நாட்களில் வேதாகமத்திற்கு விளக்கவுரை எழுதும் அளவுக்கு தேவன் இவரை உயர்த்தினார். இவர்தான் ஆடம்கிளார்க். கிறிஸ்தவ பணியிலே, செலவீனத்தை அதிகமாகக் காட்டும்படி ஒரு ஊழியர் வற்புறுத்தப்பட்டார். ஆனால், அவரோ உறுதியாக மறுத்துவிட்டார். கர்த்தருக்கே மகிமை!

வேலை நேரத்தைக் களவாடுவது, பணவிஷயத்தில் தடுமாறுவது, கைக் கூலி கொடுப்பது வாங்குவது, பொய் தகவல்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது என்று பல நேர்மையற்ற செயல்கள் நம் மத்தியிலும் உண்டு. அன்று ஏலியின் பிள்ளைகள் முறைகேடாக மட்டுமல்ல, நேர்மையற்ற வழியிலும் நடந்தார்கள். அதன் முடிவு மிகவும் பரிதாபமாக இருந்தது. தவறுகளைக் கண்டும் காணாதவர்கள்போலவும், அவற்றுக்கு ஒத்துப்போகிறவர்களாகவும், உண்மையை மறைத்து பிரச்சனைக்குத் தப்பித்துக்கொள்கிறவர்களாகவும் நடக்க கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமக்கு சோதனைகள் வரும். நேர்மையாக வாழ்ந்து என்ன பயன் என்று அலுத்துக்கொள்கிறவர்களும் உண்டு. சகலவற்றிற்கும் தேவனிடத்தில் பதிலும் உண்டு. பலனும் உண்டு. எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர்மையைத் தவற விடாதிருக்க தேவ ஆவியானவர் நமக்கு உதவுவாராக. தகுந்த நேரத்தில் தேவன் நம்மை உயர்த்தும்போது உலகம் நமக்குத் தலைவணங்கும் என்பது உறுதி.

ஜெபம்: “பிதாவே, என்ன சோதனை வந்தாலும் உமது நாமத்திற்கு கனஈனம் வராதபடி நான் வாழ, நீரே என்னை நடத்தும். ஆமென்.”