என்னை அறிந்த தேவன்!
அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2013)
– Dr.உட்ரோ குரோல்
நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என்
விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும் (சங்கீதம் 88:13).
இந்த இதழில் நாம் தியானிக்க இருக்கும் பகுதி ஓர் இருண்ட மிக சோகமான சங்கீதமாகும். தேவனுடைய பாதத்தில் ஒரு பக்தன் தனது பாரமான இருதயத்தை ஊற்றி, அவர் சமுகத்தில் ஆறுதலையும் தேறுதலையும் தேடும் ஒரு பகுதி இதுவாகும். சங்கீதக்காரன் தனது கைவிடப்பட்ட நிலையை உணர்ந்தவராய் இச்சங்கீதத்தைப் பாடியுள்ளார். ஆயினும் விண்ணப்பம் பண்ணுவது நம்பிக்கையின் துளிரை வெளிப்படுத்துகிறது. தனது நிர்க்கதியான நிலையிலும் நம்பிக்கையைத் தேடும் சங்கீதக்காரன் அது தேவனிடத்தில் மாத்திரமே உண்டு என்பதை அறிந்துள்ளார்.
நீங்களும் தனிமையாகவும் கைவிடப்பட்டவராயும், உணருகிறீர்களா? தேவனும் உங்களை மறந்துவிட்டார் என்று புலம்புகிறீர்களா? உலகின் போராட்டங்களைச் சந்திப்பதற்கு உதவியற்றவராய் எண்ணுகிறீர்களா? அப்படியானால் நீங்களும் இச்சங்கீதக்காரனுடன் சேர்ந்துகொள்ளலாம். தான் தேவனால் கைவிடப்பட்டவராயும், தனது ஜெபம் கேட்கப்படவில்லை என்றும் வருந்தினார். தனது கூப்பிடுதலுக்கு தேவன் செவிகொடுக்கவில்லை என்று கவலை கொண்டார்.
இவ்வாறு கலக்கமுற்ற அவர், தான் மரணத்திற்குச் சமீபமானது போலவும், பிரேதக் குழிகளிலே கிடப்பவர்களைப் போலவும், தேவனுடைய கோபத்தின் அலைகளால் வருத்தப்படுவதாயும், இரவும் பகலும் துக்கத்தால் அழுவதாயும் கூறுகிறார். ஆயினும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்துக்கு முன்னர் எழுந்து ஜெபிக்க ஆரம்பித்தார். அதிகாலமே தேவனைத் தேடுவதில் கரிசனை கொண்டார். ஆயினும் அவருடைய பிரச்சனை தீரவில்லை. தேவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. தேவன் தன்னை அறியவில்லை என்றும், பரலோக தேவனுக்கு அறிமுகமில்லாத கூட்டத்தில் தான் இருப்பதாகவும், தனது ஜெபத்தைக் கேட்க தேவனுக்கு நேரமில்லை என்றும் எண்ணிக்கொண்டார். இவை யாவும் அவரது சுய எண்ணங்களே. இவற்றில் எதுவும் உண்மையல்ல.
வடக்குக் கடற்கரைப் பகுதியின் பாறைகளில் ஒருவித கடற்பறவை இனம் காணப்படுகின்றது. இப்பறவைகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி சிறிய இடத்தில் வசிக்கும். இடநெருக்கடியால் பெண் பறவைகள் தங்களது முட்டைகளை அருகருகே வரிசையாக வைத்திருக்கும். அனைத்து முட்டைகளும் ஒன்றுபோலவே காணப்படினும் தாய்ப்பறவை தனது முட்டைகளை அறிந்திருக்கும். யாராவது ஒருவர் அந்த முட்டைகளை வேறிடத்தில் மாற்றி வைத்துவிட்டாலும்கூட, பல்லாயிரம் முட்டைகளுக்கிடையே அந்த தாய்ப்பறவை தன்னுடையதை அடையாளம் கண்டு அவற்றை பழைய இடத்துக்கே கொண்டு வந்து வைத்துவிடும். மனிதக் கண்களுக்கு அவை ஒன்று போலவே தோன்றினாலும் அப்பறவை தன்னுடையதை அறிந்து பாதுகாத்துக் கொள்ளும்.
ஆனால் இப்பறவையைவிட நமது பரம பிதா தம்முடைய பிள்ளைகளிடத்தில் அதிக கரிசனை உடையவராய் இருக்கிறார் என்று சத்திய வேதம் நமக்குக் கூறுகிறது. அவர் நம்மை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார். நம் தலையிலுள்ள மயிரின் எண்ணிக்கையும் அவருக்குத் தெரியும். நம் ஒவ்வொரு எண்ணத்தையும் சிந்தனையையும் அவர் புரிந்துகொள்ளுகிறார். நமது உணர்வுகள் அவருக்குப் புரியும். நாம் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தையும் அவர் அறிவார். அதிகாலைமுதல் இரவுவரை நம் காரியங்கள் எல்லாவற்றிலும் அவர் அக்கறை எடுக்கிறார்.
பிதாவின் சித்தமில்லாமல் எந்த ஒரு அடைக்கலான் குருவியும் கீழே விழுவதில்லை என்று இயேசு கிறிஸ்து தம்முடைய சீடர்களுக்கு கூறினார். அவைகளைப் பார்க்கிலும் விசேஷித்தவர்களாகிய நம் வாழ்விலும் நமது பரமபிதா கரிசனை கொண்டுள்ளார். நாம் தேவனால் கைவிடப்பட்டவர்கள் அல்லவே. நாம் அவருடைய பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருந்துவருகிறோம்.
அதிகாலைப் பாடல்
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்;
இது பரம சிலாக்கியமே