அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2013)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

இந்திய மொழிபெயர்ப்புகள்

கிரேக்கம், லத்தீன், எபிரேயம் மற்றும் பல மொழிகளையும் படித்த வில்லியம் கேரி 1779இல், தனது 18 ஆவது வயதில் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று, வேதப்படிப்பிலும் சபை ஊழியங்களிலும் தீவிரமாக ஈடுபட்டார். 1785இல் மூல்ட்டன் என்னும் இடத்திலிருந்த ஒரு சிறிய பப்டிஸ்ட் சபையின் ஊழியராகினார். இருவருடங்களின் பின்பு சபைப் போதகராக அபிஷேகிக்கப்பட்டு லெய்ஸ்ட்டர் எனுமிடத்திலிருந்த சபைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். சகல ஜனங்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் எனும் கட்டளை, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுடைய காலத்துக்கு மட்டுமானது என கிறிஸ்தவர்கள் கருதிய கால கட்டத்தில், வில்லியம் கேரி, இயேசு கிறிஸ்துவை அறியாத மக்கள் வாழும் நாடுகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 1791இல் அதைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினார்.

புத்தகம் வெளிவந்து 3 நாட்களுக்குப் பின்னர், நொட்டின்ஹம் எனுமிடத்தில் ஏசாயா 54:2 ஐ அடிப்படையாய்க் கொண்டு பிரசங்கித்ததோடு, “தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்; தேவனுக்காகப் பெரிய காரியங்களைச் செய்” எனக் கூறியமை, அநேகருக்கு வெளிநாட்டு மிஷனரிப் பணியின் மீது ஒருவித வாஞ்சையை ஏற்படுத்தியது. இதன் பயனாக உருவானதே பப்டிஸ்ட் மிஷனரி சங்கமாகும்.

வில்லியம் கேரி பப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தின் சார்பில் 1793ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். ஆரம்பத்தில் பலவிதமான பிரச்சனைகளுக்கும் உபத்திரவங்களுக்கும் ஊடாகச் சென்ற வில்லியம் கேரி, 1800ஆம் ஆண்டுவரை இந்தியாவிலுள்ள மால்டா எனுமிடத்திலிருந்த ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தவாறே சுவிசேஷத்தை அறிவித்ததோடு, இந்திய மொழிகளையும் கற்று வந்தார். வில்லியம் கேரி மால்டாவிலிருக்கும்போது, அவரது 5 வயது மகள் மரணமடைந்ததோடு அவரது மனைவியும் மனநிலை பாதிக்கப்பட்டவளானாள். அப்படியிருந்தும், வில்லியம் கேரி ஒவ்வொரு நாளும் பலமணி நேரங்கள் வேதாகமத்தை வங்காள மொழியில் மொழி பெயர்ப்பதில் செலவிட்டார்.

1800 இல் புதிதாக வந்த பப்டிஸ்ட் மிஷனரிகள் கல்கத்தா நகருக்கு அருகிலிருந்த செரம்பூர் எனுமிடத்துக்குச் சென்றனர். இதனால் வில்லியம் கேரி தன் குடும்பத்தினரோடு செரம்பூருக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அவர் தனது வாழ்வின் எஞ்சிய 44 வருடங்களும் அங்கிருந்தவாறே வேதாகமத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார். புதிதாக 1800 இல் வந்த மிஷனரிகளில், யோசுவா மார்ஷ்மன், வில்லியம் வார்ட் எனுமிருவரும் மொழிபெயர்ப்பு வேலைகளில் வில்லியம் கேரிக்கு உதவி செய்தனர். வில்லியம் கேரி செரம்பூரில் இருந்த காலத்தில் வங்காளம், சமஸ்கிருதம், மராத்தி எனும் மூன்று மொழிகளில் முழுவேதாகமத்தையும் மொழி பெயர்த்துள்ளதோடு, இன்னும் பல மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளை மொழிபெயர்த்துள்ளார். வில்லியம் கேரியும் அவரது உதவியாளர்களும் செரம்பூரில் உருவாக்கிய அச்சகம், 1832 ஆம் ஆண்டு வரை 40 இந்திய மொழிகளில் வேதாகமப் பகுதிகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. 1840இல் வில்லியம் கேரி, வேதாகம மொழிபெயர்ப்புச் சங்கத்தை உருவாக்கினார். இந்திய மொழிகளில் வேதாகம மொழிபெயர்ப்புப்பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே இச்சங்கத்தின் உருவாக்கத்திற்கான காரணமாகும்.

வில்லியம் கேரி செரம்பூரில் இருந்த காலத்தில் அவராலும், அங்கிருந்த மிஷனரிகளினாலும் மொழி பெயர்த்தும் திருத்தப்பட்டும் வெளியிடப்பட்ட வேதாகம மொழிபெயர்ப்புகளின் விபரம் வருமாறு:
வங்காள மொழி பெயர்ப்பு (1801 இல் பு. ஏ. 1802 – 1809இல் ப.ஏ.),
ஒரிய மொழி பெயர்ப்பு (1811 இல் பு. ஏ. 1819 இல் ப. ஏ.)
மகாடி மொழி பெயர்ப்பு (1824இல் பு. ஏ.),
அசாமி மொழி பெயர்ப்பு (1815 – 1819இல் பு. ஏ. 1832இல் ப.ஏ.),
காசி மொழி பெயர்ப்பு (1824இல்),
மணிப்பூரி மொழி பெயர்ப்பு (1814 – 1824இல்),
சமஸ்கிருத மொழி பெயர்ப்பு (1808 இல் பு.ஏ. 1811-1818இல் ப.ஏ.),
ஹிந்தி மொழி பெயர்ப்பு (1809 – 11 இல் பு.ஏ. 1813-1818இல் ப.ஏ.)
புரூஜ்பாசா மொழி பெயர்ப்பு (1822 -1832இல் பு.ஏ.),
கனூஜி மொழி பெயர்ப்பு (1815-1822இல் பு.ஏ.),
கோசாலி மொழி பெயர்ப்பு (1820 இல் மத்தேயு சுவிசேஷம்),
ஊடிபூரி மொழி பெயர்ப்பு (1822இல் பு.ஏ.),
ஜெய்பூரி மொழி பெயர்ப்பு (1815 இல் பு.ஏ.),
புகேலி மொழி பெயர்ப்பு (1821இல் பு.ஏ.),
மார்வாரி மொழி பெயர்ப்பு (1821இல் பு.ஏ.),
ஹரோதி மொழி பெயர்ப்பு (1822இல் பு.ஏ.)
பிக்கானெரி மொழி பெயர்ப்பு (1823இல் பு.ஏ.),
ஊஜெனி மொழி பெயர்ப்பு (1823இல் பு.ஏ.)
பாத்தி மொழி பெயர்ப்பு (1824இல் பு.ஏ.),
பல்பா மொழி பெயர்ப்பு (1832 இல் பு.ஏ.),
குமாஓனி மொழி பெயர்ப்பு (1826இல் பு.ஏ.),
குர்ஹ்வாலி மொழி பெயர்ப்பு (1832இல் பு.ஏ.),
நேபாளி மொழி பெயர்ப்பு (1821இல் பு. ஏ.),
மராத்தி மொழி பெயர்ப்பு (1811இல் பு.ஏ. 1820இல் ப.ஏ.),
குஜராத்தி மொழி பெயர்ப்பு (1820 இல் பு.ஏ.),
கொன்கனி மொழி பெயர்ப்பு (1819 இல் பு.ஏ, 1821 இல் பஞ்சாகமங்கள்),
பஞ்சாபி மொழி பெயர்ப்பு (1815 இல் பு. ஏ. 1822இல் பஞ்சாகமங்களும் சரித்திரப் புத்தகங்களும்),
மூல்தனி மொழி பெயர்ப்பு (1819இல் பு.ஏ.),
சிந்தி மொழி பெயர்ப்பு (1825இல் மத்தேயு சுவிசேஷம்)
காஷ்மீரி மொழி பெயர்ப்பு (1820 பு.ஏ. உம், 2 இராஜாக்கள் வரையிலான ப.ஏ.உம்),
டொக்ரி மொழி பெயர்ப்பு (1820 – 1826 இல் பு. ஏ.),
புஷ்தூ மொழி பெயர்ப்பு (1819இல் பு.ஏ.உம், ப.ஏ, சரித்திர புத்தகங்களும்),
பலூச்சி மொழி பெயர்ப்பு (1815 இல் மூன்று சுவிசேஷங்கள்),
தெலுங்கு மொழி பெயர்ப்பு (1818 இல் பு. ஏ. 1820 இல் பஞ்சாகமங்கள்),
கனாரிஸ் மொழி பெயர்ப்பு (1822இல் பு.ஏ.).

உண்மையில், இத்தனை மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட மூலகாரணமாயிருந்தவர் வில்லியம் கேரியே. அவரது அயராத உழைப்பும் விடாமுயற்சியும் பல இந்திய மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படுவதற்கு ஏதுவாயிற்று. இப்பகுதியில், சில முக்கியமான இந்திய மொழி பெயர்ப்புகளின் வரலாற்றை பார்ப்போம்.

(1) வங்காள மொழிபெயர்ப்பு

வில்லியம்கேரி மால்டாவில் இருக்கும் காலத்திலேயே வங்காள மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்க்கத் தொடங்கியிருந்தார். 1800இல் செரம்பூரில் மத்தேயு சுவிசேஷத்தின் வங்காள மொழிபெயர்ப்பு அச்சிடப்பட்டது. பின்னர் 1801இல், புதிய ஏற்பாடு முழுவதும் வங்காள மொழியில் வெளிவந்தது. 1806இல் இதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. 1834ஆம் ஆண்டு வில்லியம் கேரி மரணமடையும்போது இதன் 8 ஆவது பதிப்பின் அச்சு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. 1809இல் பழைய ஏற்பாட்டின் வங்காள மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. வில்லியம் கேரியின் மரணத்துக்கு முன்பு இதன் 5 பதிப்புகள் வெளி வந்திருந்தன.

(தொடரும்)