தேவனின் அனாதி ஏற்பாடு

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2013)
– Dr.உட்ரோ குரோல்

விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்;
கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்;
நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள்
எம்மாத்திரம் என்றார்கள் ( யாத். 16:7).

விண்வெளிக்கு அப்பால் காலங்களை பின்னோக்கிக் கடந்து செல்லும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தால், வரலாற்றில் தேவனுடைய கரம் வழி நடத்தினதை நாம் அறிந்து கொள்ளலாம். மனித சமுதாயத்தில் தேவனுடைய செயல்பாட்டை அப்பொழுது நம்மால் தெளிவாக உணரமுடியும். இவைகளை ஒரு மனிதனுடைய ஆயுள் நாட்களில் காண்பது கடினம். ஆனால் இவ்வாறு காலத்தையும் விண்ணையும் கடந்து நாம் செல்ல முடியாததால் தேவனுடைய பராமரிப்பை நம்மால் அறியமுடியாது என்று கூறிவிட முடியாது.

சத்திய வேதாகமம், நிழலுருக்களையும் குறியீடுகளையும் உபயோகித்து பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை ஆச்சரியமான முறையில் வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டது புதிய ஏற்பாட்டில் நிறை வேறியதை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, தேவன் உலக வரலாறை தாம் நியமித்த வழியிலேயே நடத்திச் செல்லுவதை நாம் காணலாம்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி, சிவந்த சமுத்திரத்தைக் கடந்த இஸ்ரவேல் புத்திரர்கள், சீன் வனாந்தரத்தின் வழியாகப் பிரயாணம் செய்யவேண்டியதாயிற்று. அவர்களுடைய புளிப்பில்லாத அப்பங்கள் தீர்ந்துவிட்டன. அந்தப் பாலைவனத்தில் அவர்களை பசியும் தாகமும் வாட்டின. தங்களுடைய பழைய எகிப்தின் வாழ்வே சிறந்தது, அங்கேயே இருந்திருக்க வேண்டுமென்று இஸ்ரவேலர் முறுமுறுத்தனர். ஆனால், பசியோடிருந்த திரளான இஸ்ரவேலருக்கு வானத்திலிருந்து அப்பங்களைத் தருவேன் என்று தேவன் தன்னிடம் வாக்களித்த செய்தியை மோசே ஜனங்களுக்குத் தெரிவித்தார்.

“விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறு முறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்” (யாத்.16:7)

மன்னா என்று அழைக்கப்பட்ட இந்த வானத்து அப்பம், கொத்துமல்லி அளவாயும், வெண்மை நிறமாயும் இருந்தது. அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மனுக்குலத்துக்கு தேவன் தந்த அப்பமாகிய கிறிஸ்துவை இது குறிப்பதாய் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஜீவ அப்பம் நானே. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்” (யோவா. 6:47-51).

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர் புசித்த மன்னா புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் நிழலுருவாக இருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. சுத்தமான வெள்ளை மன்னா ஆரவாரமில்லாமல் அமைதியாக இரவில் வானத்திலிருந்து இறங்கியது போலவே குழந்தையாகிய இயேசுவும் ஓர் அமைதியான இரவில் இந்த பூமியில் பிறந்தார். யாத்திராகமம் 16ஆம் அதிகாரத்தில் ஒன்பது வசனங்கள் அதிகாலையைப் பற்றிக் கூறுகிறது. நாமும் ஜீவ மன்னாவாகிய இயேசுகிறிஸ்துவை அதிகாலையில் தேடவேண்டும். “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங்.63:1). அதுமாத்திரமல்ல, நம் வாழ்வின் ஆரம்பத்திலும் தேவனை அறிந்திடவேண்டும். “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” (பிர. 12:1).

மன்னா என்பது தேவன் அருளிய ஈவு. இந்த அப்பத்தைப் பெற்றுக் கொள்ள இஸ்ரவேலர் எந்த கிரியையும் செய்யவில்லை. அவர்களது முறுமுறுத்தலுக்காக அதைப் பெற்றுக் கொள்ளவும் தகுதியற்றவர்களாயிருந்தனர். ஆனாலும் தேவன் அவர்களுக்கு தூதர்களின் அப்பத்தைக் கொடுத்தார். தேவனுடைய இரட்சிப்பை நாம் சம்பாதிக்கவோ, நமது கிரியைகளினால் நம்மைத் தகுதிபடுத்திக்கொள்ளவோ முடியாது. “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபே.2:8).

ஆதி இஸ்ரவேலருக்கு தேவன் அளித்த ஜீவன் இந்த மன்னா; ஆனால் மனுக்குலம் அனைத்துக்கும் நித்திய ஜீவனை அளிப்பது வானத்து அப்பமாகிய கிறிஸ்து. மன்னா இல்லாதிருந்தால் இஸ்ரவேலர் வனாந்தரத்தில் மாண்டிருப்பார்கள். ஜீவஅப்பமாகிய கிறிஸ்து இல்லாதிருந்தால் மனுக்குலம் முழுதுக்கும் நித்திய மரணமே தீர்ப்பாகக் கிடைத்திருக்கும்.

தேவனுடைய வல்லமையான கரம் இன்றைய வரலாற்றையும் நடத்தி வருகிறது. பல காலங்களுக்கும் அவருடைய ஜீவனளிக்கும் கிருபை இருந்து வருகிறது. “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவா.3:16). இது இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய அனைத்துக் காலத்துக்கும் உரியது. தேவனுடைய அனாதி ஏற்பாடு யாவருக்கும் உரியது.

அதிகாலைப் பாடல்

பாதை காட்டும், மா யெகோவா பரதேசியான நான்,
பலவீனன், அறிவீனன், இவ்வுலோகம் காடுதான்;
வானாகாரம் வானாகாரம் தந்து என்னைப் போஷியும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை