அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2013)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(1) வங்காள மொழிபெயர்ப்பு
1809இல் பழைய ஏற்பாட்டின் வங்காள மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. வில்லியம்கேரியின் மரணத்துக்கு முன்பு இதன் 5 பதிப்புகள் வெளி வந்திருந்தன.
வில்லியம்கேரியின் வங்காள மொழிபெயர்ப்பு வேதாகமத்தின் புதிய பதிப்புகள் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், குறிப்பாக 1816 இற்கும் 1819 இற்கும் இடைப்பட்ட காலத்தில் மால்டாவிலிருந்த ஜோன் எலர்ட்டன் என்பவர் மொழிபெயர்த்த வங்காள மொழி புதிய ஏற்பாட்டை கல்கத்தா வேதாகமச் சங்கக்கிளை வெளியிட்டது. மேலும், 1813இல் இந்தியாவுக்கு வந்த பாப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த யேட்ஸ் என்பவரும் 1827இல் சங்கீதப் புத்தகத்தையும், 1833இல் புதிய ஏற்பாட்டையும் வங்காள மொழியில் வெளியிட்டார். இவரது வேதாகமம் வில்லியம்கேரியின் மொழிபெயர்ப்பின் திருத்தப் பதிப்பாகும். 1844இல் யேட்ஸ், கேரியின் வங்காள மொழிபெயர்ப்புப் பழைய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்டார்.
1847இல் வென்கர் என்பவரினால் மறுபடியுமாக இவ்வேதாகமம் திருத்தப்பட்டது. 1862இல், முழு வேதாகமமும் வங்காள மொழியில் வெளியிடப்பட்டது. 1874இல் வங்காள மொழியின் நான்காவது திருத்தப் பதிப்பு வென்கரினால் வெளியிடப்பட்டது. 1909இல், வங்காள வேதாகமத்தின் 11ஆவது பதிப்பு வெளிவந்தது. இதற்குப் பிற்பட்ட காலத்தில் இன்னும் ஒரு சில வங்காள மொழி பெயர்ப்பு வேதாகமங்களும் வெளி வந்துள்ளன.
(2) உருது மொழிபெயர்ப்பு
தற்போதைய பாகிஸ்தானின் உத்தியோகபூர்வ மொழியான உருது இந்தியாவின் சில இடங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. 1805 இல் இம்மொழியில் 4 சுவிசேஷங்களும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. அதே சமயம், அவ்வாண்டு கல்கத்தாவிற்கு மிஷனரியாக வந்த ஹென்றி மாட்டின் என்பவர் 1809 இல் புதிய ஏற்பாட்டை உருது மொழியில் மொழிபெயர்த்து முடித்தார். வில்லியம்கேரியின் ஊழியப் பணிகளைக் கேள்விப்பட்டு அதனால் தூண்டப்பட்டே ஹென்றி மாட்டின் இந்தியாவுக்கு மிஷனரியாக வந்திருந்தார். இவர் இதற்கு முன்பு பெர்சிய மற்றும் அரபு மொழியிலும் வேதாகமத்தை மொழிபெயர்த்திருந்தார். இவர் இந்தியாவுக்கு வருவதற்கும் முன்பே இங்கிலாந்தில் உருது மொழியைக் கற்றதோடு, இந்தியாவுக்கு கப்பலில் வரும்போதும் அம்மொழியைப் படித்துக்கொண்டே வந்தார்.
1811ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து சென்ற ஹென்றி மாட்டின், 1812 அக்டோபரில் பெர்சியாவில் மரணமடைந்தார். இவரது உருது மொழி வேதாகமம் பிற்காலத்தில் 1814இல், செரம்பூரில் திருத்தி வெளியிடப்பட்டது. இதன்பின்னர் பலதடவைகள் திருத்தப்பட்ட இம் மொழிபெயர்ப்பை இலகு நடையில் வெளியிடுவதற்கு 1836இல் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இதன் பயனாக 1842இல் திருத்தப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1843இல் முழுவேதாகமமும் உருது மொழியில் வெளியிடப்பட்டது. இதன் பழைய ஏற்பாடு ஹென்றி மார்ட்டின் மொழிபெயர்த்திருந்த குறிப்புகளை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இவ்வேதாகமம் பெனாரிஸ் பதிப்பு என அழைக்கப்பட்டது.
1839இல் கல்கத்தாவிலிருந்த பாப்டிஸ்ட் மிஷனரிகள் தாம் மொழி பெயர்த்த உருது மொழி வேதாகமத்தை வெளியிட்டனர். இவ்வேதாகமம், ஹென்றி மாட்டினின் மொழி பெயர்ப்பை உபயோகித்து வில்லியம் யேட்ஸ் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்டதாகும். 1860இல் இம்மொழி பெயர்ப்பு திருத்தப்பட்டு லண்டனில் வெளியிடப்பட்டது. அவ்வாண்டு பெனாரிஸ் பதிப்பு வேதாகமம் திருத்தப்பட்டது. லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஆர்.சி.மேதர் என்பவர் திருத்த வேலைகளைச் செய்தார். இவரது திருத்த மொழிபெயர்ப்பு 1870இலும் 1878இலும் வெளிவந்தது. திருத்தப்பட்ட பெனாரிஸ் வேதாகமம் அக்காலத்தில் மக்களால் உபயோகிக்கப்பட்டாலும், மிர்ஷப் பதிப்பு என அழைக்கப்படும் இவ் வேதாகமமே அக்காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட உருது வேதாகமமாக இருந்தது. எனினும் 1893இல் புதிய ஏற்பாடு மறுபடியுமாகத் திருத்தப்பட்டது. இதன் பயனாக 1900இல் புதிய உருது மொழி புதிய ஏற்பாடு வெளி வந்தது. பின்னர் 1920இல் பழைய ஏற்பாட்டைத் திருத்த ஒரு குழு நியமிக்கப்பட்டது. 1931இல் திருத்தப்பட்ட பழைய ஏற்பாடு வெளிவந்தது. ரோமன் கத்தோலிக்க சபை வெளியிட்ட உருது வேதாகமத்தின் புதிய ஏற்பாடு 1864இல் பத்னா எனுமிடத்திலும் பழைய ஏற்பாடு 1923இல் லாகூர் எனுமிடத்திலும் வெளியிடப்பட்டன. 1958இல் ரோமில், தள்ளுபடியாகமங்கள் உட்பட முழுவேதாகமமும் உருது மொழியில் வெளியிடப்பட்டது.
(3) ஹிந்தி மொழிபெயர்ப்பு
1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஸ்தாபிக்கப்பட்ட ஃபோர்ட் வில்லியம் கல்லூரியைச் சேர்ந்த ஹென்றி கோல்புரூக் என்பவர் ஹிந்தி மொழியில் நான்கு சுவிசேஷங்களையும் மொழி பெயர்த்தார். இது 1806இல் வெளியிடப்பட்டது. அதேசமயம் செரம்பூரிலிருந்த மிஷனரிகளும் ஹிந்தியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கத் தொடங்கியிருந்தனர். 1807இல் இவர்களது புதிய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பு வேலைகள் பூர்த்தியுற, 1811இல் அவ்வேதாகமம் அச்சிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழைய ஏற்பாடும் பகுதிபகுதியாக ஹிந்தி மொழியில் வெளிவரத் தொடங்கியது. இம்மொழி பெயர்ப்பு அக்ரா எனுமிடத்திலிருந்த பிராமணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மொழிபெயர்ப்பாய் இருந்தமையினால், பாப்டிஸ்ட் மிஷனைச் சேர்ந்த சேம்பர்லெயின் என்பவர், இதைத் திருத்தி மொழிபெயர்த்தார். 1848இல் இன்னுமொரு ஹிந்தி மொழிபெயர்ப்பு புதிய ஏற்பாடு வெளி வந்தது. பாப்டிஸ்ட் மிஷனைச் சேர்ந்த வில்லியம் யேட்ஸ் என்பவரினால் ஆரம்பிக்கப்பட்ட இம்மொழிபெயர்ப்பு வேலை அவரது மரணத்தின் பின் ஏ.வெஸ்லி என்பவரினால் பூர்த்தி செய்யப்பட்டது. இம்மொழி பெயர்ப்பு பாப்டிஸ்ட் மிஷனைச் சேர்ந்த ஜோன் பார்சன்ஸ் என்பவரினால் திருத்தப்பட்டு 1868இல் வெளிவந்தது. அதே சமயம், ஆக்ராவில் இருந்த வட இந்திய வேதாகமச் சங்கக்கிளை, ஹிந்தி வேதாகமத்தைத் திருத்தி வெளியிடுவதற்கு ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவினது முயற்சியினால் 1849இல் திருத்தப்பட்ட ஹிந்தி புதிய ஏற்பாடும், 1852இலும் 1855இலும் இருபகுதிகளாக பழைய ஏற்பாடும் வெளிவந்தன. இப்பழைய ஏற்பாடு மறுபடியுமாக திருத்தப்பட்டு 1866இலும் 1869இலும் இருபகுதிகளாக வெளியிடப்பட்டது.
அமெரிக்க வேதாகமச் சங்கம் 1858இல் லூக்கா சுவிசேஷத்தையும், 1869இல் புதிய ஏற்பாட்டையும் ஹிந்தி மொழியில் வெளியிட்டது. 1860இல் புதிய ஏற்பாடு ஒரு சில திருத்தங்களுடன் பிரசுரிக்கப்பட்டது. எனினும் பாப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தினால் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டு 1874இல் வேதாகமச் சங்கம் வெளியிட்ட வேதாகமமே ஹிந்தி மொழியின் அங்கீகரிக்கப்பட்ட வேதாகமமாக இருந்தது. 1892இல் முதல் தடவையாக முழுவேதாகமமும் ஒரே புத்தகமாக ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்டது. இதன் பின்னர், புதிய ஏற்பாட்டின் பல பதிப்புகள் வெளிவந்தன. 1883இல் வட இந்திய வேதாகமச் சங்கக்கிளை ஹிந்தி மொழி வேதாகமத்தை மறுபடியுமாகத் திருத்துவதற்கு ஒரு குழுவை நியமித்தது. இவர்கள் 1888 இல் சுவிசேஷப் புத்தகங்களின் திருத்தப் பதிப்பை வெளியிட்டனர். 1894இல் பழைய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்க்க ஒரு குழு நியமிக்கப்பட்டது. இவர்களது பணி காரணமாகத் திருத்தப்பட்ட பழைய ஏற்பாடு 1905 இல் வெளிவந்தது.
60 வருடகாலமாக இவ்வேதாகமமே ஹிந்தி பேசும் மக்களால் உபயோகிக்கப்பட்டு வந்தது. எனினும் இம்மொழிபெயர்ப்பு சாதாரண மக்களால் புரிந்துகொள்ளமுடியாத உயர்ந்த மொழிநடையில் இருக்கிறது என்று ஒரு சாரார் கூறிட, கல்வியறிவு மிக்க ஹிந்தி பேசும் மக்கள் அதில் உருது சொற்கள் அதிகம் இருப்பதாகக் குறைபட்டனர். இதனால், மறுபடியுமாக அதைத் திருத்தி அன்றாட ஹிந்தியில் மொழி பெயர்க்கத் தீர்மானிக்கப் பட்டது.
1955 இல், வை.டி.திவாரி என்பவர் புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழி பெயர்க்கும் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்கள் 1961 இல் சுவிசேஷப் புத்தகங்களையும் அப்போஸ்தலர் நடபடிகளையும் திருத்தி வெளியிட்டனர். பின்னர் ஏனைய புத்தகங்கள் வெளிவந்தன. ரோமன் கத்தோலிக்க சபையினர் 1958இல் தமது ஹிந்தி மொழியில் புதிய ஏற்பாட்டை பத்னா என்னுமி டத்தில் வெளியிட்டனர்.
(தொடரும்)