முரட்டாட்டமுள்ள ஜனம்!
தியானம்: செப்டம்பர் 12 வியாழன்; வாசிப்பு: எரேமியா 5:20-31
‘நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும்
சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன்…’
(உபாகமம் 30:19)
குதிரையை இழுத்துச்சென்று தண்ணீரண்டையில் விடலாம்; ஆனால், தண்ணீரைக் குடிக்கவைக்க எவராலும் முடியாதாம். குதிரை, தானாக நினைத்தால்தான் தண்ணீர் குடிக்குமாம். அதுபோலவே, புத்திமதிகள் சொல்லலாம்; சத்தியத்தை வலியுறுத்திச் சொல்லலாம்; ஆனால், தானாகக் கீழ்ப்படியாவிட்டால், எப்படி ஒரு மனிதனை இன்னொருவர் கீழ்ப்படியச் செய்யமுடியும்? கீழ்ப்படியமாட்டேன் என்ற இந்த முரட்டாட்டம் நம்மைத் தீங்குக்குள் தள்ளிப் போடும். ‘சத்தியத்தை அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’ என்றார் இயேசு. அப்படியிருக்க, கீழ்ப்படிய மனதில்லாத முரட்டாட்டமுள்ளவர் களாய் வாழ்ந்தால், நமக்கு விடுதலை கிடைப்பது எப்படி?
மோதியடித்து எழும்பினாலும், எல்லையை மீறிக் கடவாதபடிக்கு கடல் அலைகளையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற தேவனின் ஜனங்களோ, எல்லையை மீறி முரட்டாட்டம் பண்ணுகிறார்கள் என்று தேவனே எரேமியா மூலம் பேசியதை இன்று வாசித்தோம். ‘நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன்’ என்ற தேவ வார்த்தைகளை அன்று மோசே இஸ்ரவேலுக்கு அறிவித்தார் (உபா.30:19). இன்று நமக்கு வருகிற செய்தியும் அதுதான். இப்போது தெரிவுசெய்வது நமது பொறுப்பு. தெரிந்தெடுப்பதற்குரிய முழுமையான சுயாதீனத்தையும் தேவன் நமக்குத் தந்திருக்கிறார். மாத்திரமல்ல, ‘நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு…’ என்று ஆலோசனையும் தரப்பட்டுள்ளது. அதன்பின்பும், முரட்டாட்டம் எதற்கு? ‘எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு அதிகாரமுண்டு; ஆனாலும், எல்லாம் தகுதியாய் இராது’ என்று பவுல் எழுதியதிலிருந்து, நாம் எப்படி தெரிவுகளைச் செய்ய வேண்டும் என்பதையும் அறிகிறோம்.
வீணான முரட்டாட்டங்களை விட்டுவிட்டு, தேவனை நோக்கித் திரும்புவோம். நமக்கு முன்பாக இருப்பவைகளில் நல்ல தெரிந்தெடுப்புகளைச் செய்து, நமது வாழ்வை தேவாசீர்வாதத்தின் வாழ்வாக மாற்றுவோம். தேவன் நமக்குக் கொடுத்துள்ள சுயாதீனத்தை பாவத்தைப் பெருக்குகிறதற்காகப் பயன்படுத்தாமல், பரிசுத்த வாழ்வு வாழ்வதற்கு ஏற்ற படிக்கற்களாகக்கொண்டு ஞானத்துடன் வாழுவோம். முரட்டாட்டம் நமது இருதயத்தை நாளடைவில் கடினப்படுத்திவிடும். அது நம்மை மரணத்திற்கு நேராக இட்டுச்செல்லாது என்று சொல்வதற்கில்லை. ஆகவே கடினப்பட்ட உள்ளங்களை நொறுக்கி தேவபாதத்தில் சரணடைவோம். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் தேவன் சமீபமாய் இருக்கிறார்.
ஜெபம்: “கர்த்தாவே, கல்லான இருதயங்களை உடைத்து, சதையான இருதயங்களாய் மாற்றுபவரே, என் இருதயத்தையும் மாற்றி புதிய இருதயத்தைத் தந்தருளும். ஆமென்.”