தாழ்மையின் பரிசு இரக்கம்!

தியானம்: அக்டோபர் 6 ஞாயிறு; வாசிப்பு: ஏசாயா 38:1-5

‘…ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு
எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை
அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.’ (யாக்கோபு 4:6)

‘நன்றி மறப்பது நல்லதல்ல’ என்பது எல்லோரும் அறிந்ததே. தன்னை தாழ்த்தி கண்ணீருடன் கெஞ்சிய எசேக்கியா ராஜாவுக்கு தேவன் மனமிரங்கி தெய்வீக சுகத்துடன், ஆயுளையும் கூட்டிக்கொடுத்தார். எசேக்கியா கர்த்தருக்கு முன்பாக உத்தமமும் உண்மையுமாக நடந்து கர்த்தருடைய பார்வைக்கு நலமானதைச் செய்ததினிமித்தம் அவனது மனவாஞ்சையை கர்த்தர் நிறைவேற்றி, கண்ணீரைத் துடைத்தார். அவனுடைய மரணநாள் முன்னறிவிக்கப்பட்ட போதும், தேவன் எத்தனை கிருபையாய் அதை மாற்றிப்போட்டார்.

ஆனால் எசேக்கியாவோ, தேவன் தனக்குச் செய்த உபகாரத்திற்குத் தக்கதாய் நடவாமல் மனதிலே பெருமை கொண்டான். பெருமை தேவனை எதிர்த்து நிற்கத் தூண்டுகிறது. இந்தப் பெருமைதான் தேவனைத் துதித்து நின்ற லுசிபரையும் அவன் கூட்டத்தாரையும் தேவசமுகத்திலிருந்து கீழேவிழத் தள்ளியது. இங்கே எசேக்கியாவின் மனமேட்டிமை, அவனை மட்டுமல்ல, அவன் தேசத்துக் குடிகளுக்கும் எதிராக தேவகோபம் உருவாகக் காரணமாயிற்று. ஆனாலும் அவர்கள் மனந்திரும்பி தங்களைத் தாழ்த்தியபோது, தேவகோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்களுக்கு நேரிடவில்லை (2நாளா.32:25,26). அவர்கள் தங்களைத் தாழ்த்தியபோது தேவஇரக்கத்தைப் பெற்றுக்கொண்டனர்.

நாமும் பலதடவைகளிலும் இந்த எசேக்கியாவைப்போலவே தேவன் நமக்குச் செய்த நன்மைகளை மறந்து, நன்றி மறந்தவர்களாய் மனம்போனபடி ஜீவிப்பது தேவ இரக்கத்தை நமக்குப் பெற்றுத்தராது. தேவனிடம் உள்ளத்தை ஊற்றி நம்மை தாழ்த்தி ஜெபிக்கும்போது, நமது ஜெபத்தைக் கேட்டு, நம் கண்ணீரை நிச்சயமாகவே தேவன் களிப்பாக மாற்றுவார். இன்று நமக்குள்ளே எத்தனை பெருமைகள்? குலப்பெருமை, சாதிப்பெருமை, சபைப்பெருமை, பணப் பெருமை, கௌரவப் பெருமை என்று ஏராளம். இந்தப் பெருமைகளில் ஏதாவது நம் உள்ளத்தில் இருக்குமானால் தேவன் நமது ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கவே மாட்டார். தாழ்மையுள்ள மனதுடையவனை தேவன் ஒருக்காலும் கைவிடமாட்டார். ஒருவரோடொருவர் தாழ்மையுடன் ஒப்புரவாகுவோம். நிச்சயமாகவே தேவன் நமக்கு இரங்குவார். இயேசு தம்மைத் தாழ்த்தி சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்திராவிட்டால் நமக்கு ஏது பாவ மன்னிப்பு, ஏது இரக்கம்? ஏது இரட்சிப்பு? ஏது பரலோக பாக்கியம்? உண்மையில், நம்மை நாமே தாழ்த்தி ஜீவிப்பதினால் நம்மிடத்தில் ஒன்றும் குறையப்போவதில்லையே! சிந்திப்போம்! கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்துவோமாக!

ஜெபம்: “தாழ்மையாய் வந்துதித்த ஆண்டவரே, என்னைத் தாழ்த்தி உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். எனக்குள் உள்ள பெருமையை அழித்துப்போடும். ஆமென்.”