தேற்றுகின்ற தேவன்!
தியானம்: அக்டோபர் 16 புதன்; வாசிப்பு: சங்கீதம் 27:5-14
‘ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான்
உங்களைத் தேற்றுவேன்.’ (ஏசாயா 66:13)
உலக உறவுகளில் தாயன்பு மிகவும் மேன்மையானது. தனது பிள்ளைகளுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய ஒரு தாய் எப்போதும் தயாராக இருப்பாள். ஒரு தாயை அறிவேன். இருதய நோயினால் கஷ்டப்பட்ட அத்தாய், பல சிரமங்களின் மத்தியிலும், அதிகாலையில் அலாரம் வைத்து எழும்பி, தொழிலுக்குப் போகும் தன் பிள்ளைகளுக்குச் சமைத்துக் கொடுப்பதைக் கண்டேன். இலங்கையில் யுத்தம் நடைபெற்றபோது தங்கள் உயிரையே பணயம் வைத்து, தங்கள் பிள்ளைகள் உயிர்களைக் காப்பாற்றிய தாய்மார்கள் அநேகர். தாயன்பு சுயநலமற்றது; வலிமைமிக்கது. ஆகவேதான், தேவன் நமக்குப் புரியும்படிக்கு ஒரு தாய் எப்படி தன் பிள்ளையைத் தேற்றுவாளோ, அப்படியே தானும் தேற்றுவேன் என்று சொல்லி நம்மைத் தேற்றுகிறார்.
இஸ்ரவேல் புத்திரரை தேவன் வனாந்திரத்தில் வழிநடத்தி சென்றபோது அடிக்கடி அவர்கள் பல குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்; முறுமுறுத்தார்கள். கானானில் அவர்கள் சேர்ந்து, வாழ்ந்தபோதும் தேவனுக்கு விரோதமாக நடந்தார்கள். தேவன் பல தடவைகள் அவர்களைத் தண்டித்தார். அசீரியரையும், பாபிலோனியரையும் எழுப்பி, தமது மக்களுக்குப் புத்தி புகட்டினார். ஆனாலும், அவர் அவர்களைத் தள்ளிவிடவில்லை. தேவன் தமது ஜனத்தின்மீது கோபங் கொண்டாலும், தொடர்ந்து அவர்களுக்கு ஆறுதலின் செய்தியையும், மீட்பின் நிச்சயத்தையும் கொடுத்ததை தீர்க்கதரிசிகளின் புத்தகங்களில் நாம் படிக்கிறோம். மரணம் நேரிடக்கூடிய அளவுக்கு பவுல் தனது மிஷனரிப் பயணங்களில் பல சங்கடங்களைச் சந்தித்தவர். ஆனால், அத்தனை கடின பாதையிலும், தேவனை ‘சகல ஆறுதலின் தேவனாகக் கண்டாரே’ தவிர, தனக்கு நேர்ந்த சங்கடங்களில் பவுல் சோர்ந்து போகவில்லை.
ஒரு உலகத் தாயினும் மேலாகவே தேவன் தமது பிள்ளைகளை நேசிக்கிறார். இத்தகைய வலிமையான அன்புகொண்ட தேவனை, நாம் எந்த அளவில் நேசிக்கிறோம்? அவருடைய முழுமையான அன்புக்கு பாத்திரரான நாம் முற்றிலும் அவருக்கே கீழ்ப்படிந்து வாழ்கின்றோமா? ஒரு பிள்ளை ஆசையாக தனது தாயின் முகத்தைத் தேடுவதுபோல என்றும் அவரை நாம் தேடுகிறோமா? ஒரு தாய்க்கு அவளது பிள்ளை எவ்வளவு நன்றியாய் இருப்பான்! தாயிலும் மேலான அன்புகொண்ட நமது பரலோக பிதாவுக்கு நாம் என்ன செய்கிறோம்? தாயன்பு சிலசமயம் மாறிப்போகும். ஆனால், இயேசு நமக்காக தமது ஜீவனையே கொடுத்தாரே! தினமும் நம்மை ஆற்றித்தேற்றி வழிநடத்தி வருகின்ற தேவனுக்கு மனமார நன்றி சொல்லுவோமாக! அவரைப் பிரியப்படுத்தி வாழுவோமாக.
ஜெபம்: “சகல ஆறுதலின் தேவனே, உமக்குப் பிரியமுள்ள பிள்ளையாய், என்றும் உம் முகத்தைத் தேடி வாழ என்னை வழி நடத்தும். ஆமென்.”