ஆசிரியரிடமிருந்து…
(நவம்பர்-டிசம்பர் 2013)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
ஜீவ ஒளியாய் இவ்வுலகில் பிரகாசித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
2013ஆம் ஆண்டின் இந்த நாள் வரையும் வழுவாமல் நம்மை வழிநடத்திய அன்பின் ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறோம்.
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி இவ்வருடத்தில் வேதத்தை வாசித்து முடித்தோர் தவறாமல் எங்களுக்கு எழுதித் தெரியப்படுத்தவும். அவர்கள் பெயர்களை இனிவரும் இதழில் பிரசுரிப்போம். இன்னும் அநேகர் வருகிற புதிய ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணையை உபயோகித்து வேதத்தை வாசிக்க உற்சாகப்படுத்துகிறோம்.
இவ்வாண்டிலே வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து நிகழ்ச்சிகள் வெளிவர உதவிய எமது ஆதரவாளர்களுக்கு நன்றி கூறுகிறோம். பங்காளர் சந்தாவை இதுவரை புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய்க் கேட்கிறோம்.
இவ்விதழில் நவம்பர் மாத தியானங்களை பல்வேறு தலைப்புகளில் தொகுத்து வழங்கியுள்ளோம். டிசம்பர் மாதத்திற்கு சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையையும் இரண்டாம் வருகையையும் ஒப்பிட்டு நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்களைத் தியானங்களாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் யாவும் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்குப் பிரயோஜனமாயிருக்க ஜெபிக்கிறோம். இத் தியானங்களை எழுதிவருகிற தேவ பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்யுங்கள். இத்தியான நூலை அநேகருக்கு அறிமுகப்படுத்துங்கள்.
உங்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்