உலகம் தோன்றும் முன்னே!
தியானம்: டிசம்பர் 1 ஞாயிறு; வாசிப்பு: 1பேதுரு 1:17-22
“அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து,
தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக
இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்.” (1பேதுரு 1:20)
வாழ்ந்திருந்த வீட்டைவிட்டு வெளியேறவேண்டிய நேரம் வந்தது. சகல சமான்களையும் ஒதுக்கியபோது, பொன்முலாமிடப்பட்ட ஒரு ஊசி என் கண்களில் பட்டது. அது இறந்துபோன என் தாயாருடையது. எனக்குத் தெரிந்த நாள் முதல் அந்த ஊசியை அவர் வைத்திருந்ததை நான் அறிவேன். இப்போது அதைப் பார்க்கும்போது என் தாயாரே என்னோடு இருப்பதுபோன்ற ஒரு உணர்வு. நான் பிறக்கும் முன்னரே என் தாயார், இந்த ஊசியை அவர் எனக்காகத்தான் வைத்திருந்தாரோ என்று ஒரு எண்ணம். இப்போது அது எனக்கு ஒருவித பெலத்தை மன உறுதியைக் கொடுத்தது. அதைப் பத்திரப்படுத்தினேன்.
நான் பிறக்கும் முன்னரே என் தாயார் எனக்காகவே அந்த ஊசியை வைத்திருந்தாரோ என்ற எண்ணமே எனக்கு மனஉறுதியைக் கொடுத்ததாயின், உலகத்தோற்றத்தின் முன்னரே தேவன் நமக்காக யாவற்றையும் ஆயத்தம் பண்ணினாரே என்று எண்ணும்போது, அது நமக்கு எவ்வளவு மனஉறுதியைக் கொடுக்கவேண்டும்! கடவுள் மனிதனாக, இயேசுகிறிஸ்துவாக உலகத்திற்கு வந்த சரித்திர நிகழ்வானது தற்செயலாக நேரிட்ட ஒன்றல்ல. பாவநிவாரண பலியாக சிலுவையிலே இரத்தம் சிந்தி ஏகபலியாக கிறிஸ்து மரித்தது, ஏதேனிலே மனுக்குலம் பாவத்தில் விழுந்த பின்னர் திட்டமிடப்பட்டதும் அல்ல. உலகம் தோன்றும் முன்னரே, அதாவது மனுக்குலம் படைக்கப்படுவதற்கு முன்னரே, எல்லாவற்றையும் முன்னறிந்தவரும், நித்திய தேவனுமாகிய கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட இரட்சிப்பின் திட்டமே கிறிஸ்துவின் பிறப்பாகும்.
பிரமாணங்களுடன் போராடிக்கொண்டிருந்த அன்றைய யூதருக்கு மேசியா வருவார் என்ற செய்தி ஆறுதலைக் கொடுத்திருக்கும் என்றால், வாழ்வின் பல நிலைமைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, இயேசு பிறந்த செய்தி இன்று உறுதியான நம்பிக்கையைக் கொடுக்கிறது. நான் படைக்கப்படும் முன்னரே, தேவன் எனக்காக இரட்சகரை ஏற்படுத்தினார் என்றால், என்னில் அவர் எப்படிப்பட்ட அன்பு வைத்திருக்கிறார் என்பது விளங்கவேண்டும். அந்த இரட்சிப்பை, அநாதி திட்டத்தை இயேசுகிறிஸ்து அன்று நிறைவேற்றிவிட்டார். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? அநாதியாய் ஏற்படுத்தப்பட்ட இந்த இரட்சிப்பை, நாம் அலட்சியப்படுத்தலாமா? அப்படியல்ல என்று நினைத்தாலும், அலட்சியப்படுத்துவதுபோலத்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு வருடத்தின் இறுதிக்குள் வந்துவிட்ட நாம், இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நம்மை ஆராய்ந்து பார்ப்போம். அநாதியாய் நம்மில் அன்புவைத்த தேவனுக்கு நாம் என்ன கொடுக்கப்போகிறோம்? மகிழ்ச்சியா! துக்கமா! அதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஜெபம்: பிதாவே, உலகத்தை நீர் சிருஷ்டிக்கும் முன்னரே எனக்காக ஏற்படுத்திய இரட்சிப்பை நான் இறுதிவரை காத்துக்கொள்ள என்னை வழிநடத்தும். ஆமென்.