ஆசிரியரிடமிருந்து…

(ஜனவரி-பிப்ரவரி 2014)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நன்மையும் செவ்வையுமான பாதையிலே நம்மை வழிநடத்த அறிந்திருக்கிற நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

தேவனுடைய மாறாத கிருபையினாலே இன்னுமொரு புதிய ஆண்டிற்குள்ளாக நாம் பிரவேசிக்க அவர் உதவி செய்துள்ளார். “காலங்கள் அவர் கரத்திலிருக்கிறது”. இப்புதிய வருடத்தின் ஒவ்வொரு நாளையும் அவர் நமக்கு ஆசீர்வதித்துத் தருவார். தமது வாக்குத்தத்தத்தின்படியே நமது குடும்பத்தின் தேவைகளையெல்லாம் சந்தித்து குறைவுகளை நிறைவாக்கி நம்மைப் பெலப்படுத்தி வழிநடத்துவார். எனவே விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்தவர்களாய் முன்னேறிச் செல்வோம். இப்புதிய ஆண்டிலே நன்மையும் கிருபையும் உங்களைத் தொடர வேண்டுதல் செய்கிறோம்.

2013ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். கடந்த ஆண்டில் தங்கள் சந்தாவைப் புதுப்பிக்காதவர்களும் புதுப்பித்துக்கொண்டு இவ்வூழியத்தைத் தாங்க அன்புடன் நினைவூட்டுகிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள்.

ஜனவரி மாத தியானங்கள் சிறந்த கிறிஸ்தவ குடும்பத்திற்கான நல் ஆலோசனைகளாகவும், பிப்ரவரி மாத தியானங்கள் சாத்தானைக் குறித்தும் அவனது பொல்லாத கிரியைகளைக் குறித்தும் அவனை வெற்றிகொள்வதற்கான வழிமுறைகளைக் குறித்தும் தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். இத் தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம்.

பங்காளர்கள் வாசகர்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியர்கள் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்