கடனாளியா? கடன் கொடுத்தவனா?

தியானம்: மார்ச் 4 செவ்வாய்; வாசிப்பு: லூக்கா 6:30-36

“…..மற்றொன்றிலும் ஒருவனுக்கும்
கடன்படாதிருங்கள்.” (ரோமர் 13:8)

‘கடன்’ ஒரு மனிதனை அவனது ஆயுள் முழுவதும் நிம்மதியாகவே வாழ விடாது. அதைத் திருப்பிச் செலுத்தும்வரைக்கும் இருதயம் அடித்துக்கொண்டே இருக்கும். அதுதான் உண்மையான உணர்வு. ஆனால் இன்று, கடன் பெற்றுக் கொள்வதில் காட்டுகின்ற அவசரமும், பெற்றுக்கொண்டதும் வெளிவரும் நன்றி களும், திருப்பிச் செலுத்த வேண்டுமென்பதிலும், உதவி செய்தவருக்கு நன்றியாய் இருக்க வேண்டும் என்பதிலும் வெளிப்படுகிறதா என்பது சந்தேகமே!
கடமை, வரி, தீர்வு என்பவற்றைச் சரியாகச் செலுத்துவது குறித்தும், அடுத்த வனைக் கனப்படுத்துவதைக் குறித்தும் எழுதிவிட்டு, கடனைக்குறித்து பவுல் எழுதியுள்ளார். இதிலே, எதற்குக் கடனாளியாக இருக்கவேண்டும்; எதற்கு கடன்படாதிருக்கவேண்டும் என்று இரண்டு விஷயங்களை பவுல் விளக்குகிறார். “…மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்” என்றால், அன்புகூருகிற கடனைத்தவிர வேறு எதற்குமே கடன்படக்கூடாது என்பதுதானே அர்த்தம்! ஆனால், இன்று எத்தனை குடும்பங்கள் பணத்தையும் வீட்டு மனைகளையும் கடனாகப் பெற்றுவிட்டு, செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள்? இதிலே இரண்டு பக்கம் உண்டு. ஒன்று, கடன் கொடுக்கிறவர்கள்; அடுத்தது, கடன் பெற்றவர்கள். “கைமாறு கருதாமல் கடன்கொடுங்கள்”(லூக்.6:35) என்றார் இயேசு. நமக்கு விருப்பமானவர்களுக்கு உதவிசெய்வது இலகு; ஆனால், அன்பு என்பது எவரையும் பிரித்துப் பார்க்காது. கடன் என்பது, வட்டியுடன் திருப்பி வாங்குவதைக் குறியாக வைத்துக் கொடுக்கக்கூடாது என்று வேதம் நமக்குப் போதிக்கிறது. எதிர்பார்ப்பு இன்றி கடன் கொடுக்கப்படும்போது, தேவ னுக்கே அதைக் கொடுக்கிறோம். அதேசமயம், கடன்பட்டவர்களுக்கும் ஒரு பொறுபபு உண்டு. ஆபத்தில் உதவியவர்களின் பொருளையோ பணத்தையோ வேறெதையோ திருப்பிக்கொடுக்கவேண்டும் என்ற பொறுப்பு அவசியம்.
தேவனுடைய வார்த்தை நமக்கு ஒரு வாக்குக் கொடுத்திருக்கிறது. “நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை.” (உபா.15:6) ஆனால், கர்த்தருக்குச் செவிகொடுத்து, அவருடைய வார்த் தைக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கே இந்த வாக்குப் பொருந்தும். தேவன் நமது வாழ்வுக்கு தேவையானதை நிறைவாகவே தருகிறார். நம்மிடம் உள்ளதில் வாழவும், உள்ளதில் திருப்தியாயிருக்கவும், உழைத்து உண்ணவும் நம்மால் கூடுமானால் நாம் ஏன் கடன்படவேண்டும்? அவசிய தேவைகள் ஏற்படும்போது, தேவனை நோக்கிப் பார்ப்போமானால் நிச்சயம் நமது தேவைகளைச் சந்திக்கும் வாய்ப்புகளை தேவனே ஏற்படுத்திக் கொடுப்பார். இன்று நாம் கடனாளிகளா? கடன் கொடுத்தவர்களா?
ஜெபம்:“பிதாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். என் தவறுகளைச் சரி செய்ய இன்றே என்னைத் திடப்படுத்தும். ஆமென்.”