மாபெரும் எழுப்புதல் கூட்டம்
அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2014)
– Dr.உட்ரோ குரோல்
“தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்” (நெகேமியா 8:3).
எருசலேமின் அலங்கத்தைப் புதுப்பித்துக் கட்டியபின், எஸ்றாவும் நெகேமியாவும் இணைந்து மக்களுடைய சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்டனர். அவர்களுக்கு மல்கியா தீர்க்கதரிசி உற்ற துணையாக இருந்தார். இந்த மூவருடைய பணியினால் இஸ்ரவேலின் வரலாற்றில் மாபெரும் மறுமலர்ச்சி தோன்றியது. ஜனங்களும் தேவவார்த்தையைக் கேட்க ஆர்வமாய் கூடி வந்தனர். அந்த எழுப்புதல் கூட்டத்தின் தன்மைகள் நெகேமியா 8ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
1. மக்களின் வருகை (வசனம் – 1) “ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி,…” என்று எழுதப்பட்டுள்ளது. எந்த ஒரு யூதனும் இந்த கூட்டத்திற்கு விலக்கமாயிருக்கவில்லை. அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் அவர்களுக்கு அனுப்பப்படாவிட்டாலும், தேவனுக்குள் இருந்த மகிழ்ச்சியினால் நிறைந்திருந்ததினால் அவர்கள் தன்னார்வத்துடன் அங்கே குழுமிவிட்டார்கள்.
2. காலத்தின் நீளம் (வசனம் – 3) இக்கூட்டத்தில் வேதபாரகராகிய எஸ்றா, மோசேயின் நியாயப்பிரமாணத்தை எடுத்து வந்தார். “தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியான மட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்;” அதிகாலையிலேயே குழுமிவிட்ட மக்கள் மத்தியானமட்டும் கலைந்து செல்லாமல் பாலஸ்தீன நாட்டு சுட்டெரிக்கும் வெயிலிலும் நின்று எஸ்றா வாசித்ததைக் கவனத்துடன் கேட்டார்கள்.
3. அருட்செய்தியாளர்களின் வரிசை (வசனம் – 4) மரத்தால் செய்யப்பட்ட பிரசங்கப்பீடத்தில் எஸ்றா நின்ற பொழுது அவருடன்கூட வேறு 13 அருட்செய்தியாளர்களும் நின்றிருந்தனர். ஒவ்வொருவரும் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து அர்த்தஞ் சொல்லி, தாங்கள் வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
4. மக்களின் கவனம் (வசனம் – 5): “எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள்”. அதிகாலையிலிருந்து மத்தியானமட்டும் மக்கள் அனைவரும், நியாயப்பிரமாணத்தை விளக்கிக்காட்டிய லேவியர்களும் நின்று கொண்டிருந்தனர். தேவனுடைய வார்த்தைக்கு அவர்கள் மரியாதைக் கொடுத்து, கவனம் சிதறாதவாறு பயபக்தியுடன் கேட்டார்கள்.
5. எழுப்புதலின் ஆவி (வசனம்-6): எஸ்றாவும் மற்ற லேவியர்களும் தேவ வார்த்தையை வாசித்து முடித்த பின்னர் தேவனை ஸ்தோத்திரித்து, அவரைப் பணிந்துகொண்டனர். “…ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்”.
6. எழுப்புதல் கூட்டத்தின் விளைவு (வசனம் – 7, 8): இந்த எழுப்புதல் கூட்டத்தின் சுருக்கத்தை வசனம் 8 தெளிவுபடக் கூறுகிறது. “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ் சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்” தேவ வார்த்தையைக் கேட்டு அதனைப் புரிந்துகொண்ட மக்கள் அழுதனர். தனிப்பட்ட மனந்திரும்புதல் எப்பொழுதும் இவ்வாறான கண்ணீர் சிந்துதலுடன் இணைந்திருக்கும்.
7. எழுப்புதலின் கொண்டாட்டம் (வசனம் 9-12): மக்களிடையே தேவனுடைய வார்த்தையை வாசித்ததினால் உண்டான தாக்கத்தைக் கண்ட நெகேமியா, எஸ்றா மற்றும் லேவியர்கள் ஜனங்களை நோக்கி, “இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள். பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப் படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான். லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப் படவேண்டாம்…” என்றும் கூறினர்.
யெகோவாவின் மன்னிப்பை அறிந்துகொண்ட அம்மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் கூடாரப்பண்டிகையை ஒரு வாரத்துக்குக் கொண்டாட ஆயத்தமானார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிப்ஸி ஸ்மித் என்ற நற்செய்தியாளர் நடத்திய கூட்டமொன்றில் ஒரு பிரசங்கியார் அவரை சந்தித்து, அவரது வெற்றியின் இரகசியத்தைக் கேட்டார். தனது சபை மக்களிடமும் அவ்விதமான எழுப்புதலை உருவாக்க சிறந்த முறையை அறிந்து கொள்ள அவர் விரும்பினார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஜிப்ஸி ஸ்மித், “சகோதரனே, நீங்கள் உங்கள் இல்லத்துக்குச் சென்று, உங்களுடைய அறைக்கதவைப் பூட்டிக்கொள்ளுங்கள். ஒரு சாக் பீiஸ எடுத்து தரையில் ஒரு வட்டம் வரையுங்கள். அவ்வட்டத்துக்குள்ளே நீங்கள் முழங்காற்படியிட்டு, நீங்கள் செய்த பாவங்களை அறிக்கையிடுங்கள். தேவனுடைய வார்த்தை வழிகாட்டும் பாதையில் செல்ல முடிவெடுங்கள். அவர் முதலாவது உங்களில் கிரியை செய்ய கேளுங்கள். உங்களுடைய இந்த ஜெபம் கேட்கப்படும்பொழுது, உங்கள் சபையில் எழுப்புதல் உருவாகும்” என்றார்.
நெகேமியாவின் காலத்தில் எருசலேமில் நடைபெற்ற எழுப்பு தலை நம்முடைய நாட்டிலும் காணவேண்டுமாயின், நாமும் நம்முடைய அறைக் கதவைப் பூட்டி முழங்காற் படியிட்டு உண்மையாய் ஜெபிக்க வேண்டும். இன்று முதலாவது நம்முடைய இருதயத்தில் எழுப்புதல் ஏற்பட நாம் ஜெபிப்போம்.
அதிகாலைப் பாடல்
தேவனே உமது நேசகுமாரன் இயேசுவின் அன்புக்காக
உம்மைத் துதிக்கிறோம்; மரித்து உயிரோடெழுப்பினீரே
உமக்கே மகிமை; அல்லேலூயா; ஆமென்! அல்லேலூயா!
உமக்கே மகிமை; அல்லேலூயா; எங்களையும் உயிர்ப்பியும்.